புதன், 20 ஜூன், 2018

BBC : தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? போலீஸ் ஆட்சியா?

சென்னை - சேலம் பசுமை வழிச் சாலையை எதிர்ப்பவர்களும் தமிழகத்தில் அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்களும் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுவருகின்றனர். சர்வாதிகார ஆட்சிபோல் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த சில நாட்களில் தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த பல தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரிப்பதற்காக தூத்துக்குடி சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடந்த மே மாதம் 26ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். அதற்குப் பல நாட்களுக்கு முன்பாக, அவர் நடத்திய போராட்டம் ஒன்றில் சுங்கச்சாவடி தகர்க்கப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் சிறையில் இருக்கும்போதே மேலும் சில வழக்குகளிலும் அவர் கைதுசெய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பாக நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியுள்ளது. இந்த நிலையில், அவர் சிறையிலிருந்து வெளிவருவதற்கு முன்பாக வேறு ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவிருக்கிறார். re>தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கும் சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுவருகின்றனர்.

சென்னைக்கும் மேற்கு மாவட்டங்களில் ஒன்றான சேலத்திற்கும் இடையில் மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 8 வழி சாலை அமைக்கப்படவிருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்படவிருக்கிறது.
இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்தத் திட்டத்திற்காக தங்கள் விளை நிலங்களை இழக்கவிருப்பவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். துவக்கத்தில் இந்த எதிர்ப்புகளை அனுமதித்துவந்த தமிழக அரசு, கடந்த சில நாட்களாக கைதுநடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. e>சில நாட்களுக்கு முன்பாக சேலத்தைச் சேர்ந்த சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷை சந்தித்த திரைப்பட நடிகர் மன்சூர் அலி கான், "இங்கு இருக்கும் மக்கள் யாரும் 8 வழி பசுமை சாலைக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது. 4 வழிச் சாலைக்கு சுங்கச் சாவடி அமைத்துக் கொள்ளையடிப்பதை 8 வழிச் சாலை அமைத்து பெரிய அளவில் கொள்ளை அடிப்பார்கள். 8 வழி சாலை அமைத்தால் சேலத்தில் வாழ முடியாது" என்று பேசியிருந்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த காவல்துறை ஜூன் 17ஆம் தேதியன்று சென்னையில் அவரைக் கைதுசெய்தது. அரசுக்கு எதிராக செயல்படுதல், போராட்டத்திற்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
சேலத்தைச் சேர்ந்த சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பேசிவந்தார். இந்த நிலையில், மன்சூர் அலிகான் மேற்கண்டவாறு பேசிய கூட்டத்தில் கலந்துகொண்டதைச் சுட்டிக்காட்டி பியூஷும் ஜூன் 18ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். மன்சூர் அலிகான் மீது தொடரப்பட்ட வழக்குப் பிரிவுகளின் கீழேயே இவர்மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஜூன் 19ஆம் தேதியன்று சேலம் மாவட்டத்தில் ஆச்சாங்குட்டிப் பகுதியில் 8 வழிச் சாலைக்காக வருவாய் துறையினர் நில அளவை செய்ய வந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளவை செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அதிகாரிகளை சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த இயற்கை பாதுகாப்பு குழுவின் நிர்வாகியும், பெரியார் பல்கலைக்கழக மாணவியுமான வளர்மதி பொதுமக்களுக்கு ஆதரவாக பேசினார். e>அப்போது பொதுமக்களை போராட்டம் நடத்தத் தூண்டுவது போல் பேசியதாக கூறி அவரை காவல்துறையினர் அவரைக் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களிடம் வளர்மதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து வளர்மதியை குண்டுகட்டாக வேனில் ஏற்றி, காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
சேலம் அடிமலைப் புதூரில் இந்த 8 வழிச் சாலைக்கு நிலம் எடுப்பதற்கான அளவீடு நேற்று நடந்தபோது, சம்பந்தப்பட்ட நிலத்திற்குச் சொந்தமான விவசாயிகள் நிலத்தில் அழுது புரண்டனர். அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இவர்களில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். ஏற்கனவே ஜூன் முதல் வாரத்தில் இதே விவகாரம் தொடர்பாக ஆச்சாங்குட்டப் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், மாரிமுத்து ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கைகளுக்கு அரசியல் தலைவர்களும் சூழல் ஆர்வலர்களும் செயல்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
"எடப்பாடி பழனிச்சாமி முன்னெடுக்கும் 8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்துப் பேசுபவரெல்லாம் கைது செய்யப்படுவது, நாம் ஹிட்லரின் ஆட்சியில் இருக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எடப்பாடி பழனிச்சாமியும் அவர் காவல்துறையும், நமது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளையெல்லாம் காலில் போட்டு மிதிக்கிறது. இப்படி அதிகார மமதையில் இருப்பவர்களுக்கு வரலாறு சரியான பாடம் கற்பித்திருக்கிறது. அதற்கு யாரும் விதிவிலக்கல்ல" என தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிரணித் தலைவருமான கனிமொழி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இந்த கைது நடவடிக்கைகள் நிறுத்தப்படாவிட்டால் விவசாயிகளை ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டத்தை தி.மு.க. நடத்துமென அக்கட்சியின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலினும் கூறியிருக்கிறார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் குறித்து சென்னையில் ஒரு கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த மக்கள் இயக்கங்களுக்கான தேசியக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மேதா பட்கரிடம் கேட்டபோது, "இது அதிர்ச்சியளிக்கிறது. முதலில் வேல்முருகன் கைதுசெய்யப்பட்டார். இப்போது தொடர்ச்சியாக சமூக செயல்பாட்டாளர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். விவசாய நிலங்களை எடுத்து சாலைகள், தொழிற்சாலைகள் போன்ற வேறு பயன்பாடுகளுக்கு கொடுத்து என்ன சாதிக்கப்போகிறார்கள். எந்த நிபந்தனையும் விதிக்காமல் இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இப்படி எதிர்ப்பவர்களையெல்லாம் கைதுசெய்வதன் மூலம் தமிழகம், காவல்துறை ஆளும் மாநிலமாகிறது என்று சொல்வது தவறு என்கிறார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.
செவ்வாய்க்கிழமை காலையில் செய்தியாளர்களை சந்திக்க வந்த அவரிடம் இந்த கைது நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பியபோது, "இந்தத் திட்டத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? இல்லையே. இதுபோல போராட்டங்களைத் தூண்டி அமைதியின்மையை ஏற்படுத்திக்கொண்டே இருப்பவர்கள்தான் கைது செய்யப்படுகிறார்கள். பியுஷ் மனுஷ் அதனால்தான் கைது செய்யப்பட்டார்" என்று தெரிவித்தார்.
தமிழகம் காவல்துறை ஆளும் மாநிலமாகிறது என்ற கேள்வியே தவறு என்றவர், காவல்துறையால்தான் மாநிலம் அமைதியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.


2016ஆம் ஆண்டுத் தேர்தலில் மேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க. அதிக இடங்களைப் பெற்றிருந்தது. அப்படியிருக்கும் நிலையில், இந்தக் கைது நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் தற்போதைய அரசு அது குறித்து பெரிதாகக் கவலைப்படவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
"எடப்பாடி பழனிச்சாமியைப் பொறுத்தவரை, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், இந்த முறை செய்ய வேண்டியதைச் செய்துவிட வேண்டுமென நினைக்கிறார். அரசியல் விளைவுகள் பற்றிக் கவலைப்படவில்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ராமசுப்ரமணியன்.
அ.தி.மு.கவைத் தவிர, பா.ஜ.கவும் இந்த எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், "சென்னை-சேலம் பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள். அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
பாரதீய ஜனதாக் கட்சியைப் பொறுத்தவரை, அக்கட்சிக்கான ஆதரவு தமிழகத்தில் குறைவு என்பதால், அக்கட்சி வாக்குகளை இழப்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் ராமசுப்ரமணியன். அவர்களுக்கு உள்ள குறைந்த வாக்கு வங்கி, இம்மாதிரியான நிலைப்பாடுகளால் வெளியேறாது, அதனால் அவர்களுக்குக் கவலையில்லை என்கிறார் அவர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோரும் இந்த எட்டுவழிச் சாலைக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக