புதன், 20 ஜூன், 2018

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படும் .. மத்தியரசு

மதுரையில் எய்ம்ஸ் அறிவிப்பை அடுத்து ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கு முடித்துவைப்பு
மாலைமலர் :மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்த இது தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.< ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மேலும் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.


அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் ஈரோடு, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 இடங்கள் தேர்வு செய்து தமிழக அரசு அறிக்கை அளித்தது. அந்த இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து உள்ளனர். அவற்றில் எந்த இடத்தில் மருத்துவமனை அமைய உள்ளது என முடிவு செய்ய கூடுதலாக காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

இதனை அடுத்து, ஜுன் 14-ம் தேதிக்குள் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். கடந்த 14-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது இடத்தை தேர்வு செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தமிழக அரசும் உறுதிபடுத்தியுள்ளது. இதனை அடுத்து, விசாரணையில் இருந்த மேற்கண்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக