வியாழன், 14 ஜூன், 2018

18 அதிமுக எம் எல் ஏக்கள் .. நேர்மையான தீர்ப்பு வரும் என்று எவரும் நம்பவில்லை ..

Shankar A : நம்பிக்கை.. நகைச்சுவையெல்லாம் ஒரு பக்கம் வைத்து
விடுவோம். இன்று வெளிவர உள்ள 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று என்னோடு வாட்சப்பில் விவாதிக்கும் உயர் மற்றும் உயர் உயர் அதிகாரிகளில் ஒரே ஒருவர் கூட, இந்தத் தீர்ப்பு நியாயமாக, சட்டத்தின்பாற்பட்டு வரும் என்று கூறவில்லை.
இல்லை சார். கர்நாடகாவில் எடியூரப்பா வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு இந்த 18 எம்எல்ஏ வழக்குக்கு அப்படியே பொருந்தும் என்று கூறினால், அட என்ன சங்கர் இன்னுமா இந்த கோர்ட்டை நம்பிக்கிட்டு இருக்கீங்க என்பதையே பெரும்பாலானோர் பதிலாக அளிக்கின்றனர்.
வழக்கறிஞர்கள் இன்னும் விபரமாக, தலைமை நீதிபதிக்கு வரவுள்ள உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை பிஜேபி அரசு எப்படி முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. நினைத்த தீர்ப்பை வழங்காத நீதிபதிகளை எப்படி பழி வாங்குகிறது என்பதை சுட்டிக்காட்டி, 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பை உதாரணமாக காட்டுகிறார்கள்.

இந்த வழக்கிலும் பிஜேபி என்ன நினைக்கிறதோ அதுதான் தீர்ப்பாக வரும். எடப்பாடி அரசை காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்கேற்றார் போல தீர்ப்பு வரும். கவிழ்க்க வேண்டுமென்றால் அதற்கு ஏற்றார்ப்போல தீர்ப்பு வரும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் இந்தக் கருத்தை வெளிப்படையாகவே எழுதுகிறார்கள்.
நீதித்துறை, ஜனநாயகத்தின் ஒரு முக்கியமான அங்கம். இத்துறை மீது இப்படியொரு அவநம்பிக்கை நிலவுவது மிக மிக ஆபத்தானது. பொதுமக்கள் கருத்துக்கெல்லாம் ஓரளவு அஞ்சும் நீதிபதிகள் இருக்கத்தான் செய்தார்கள்.
ஆனால் இப்போதெல்லாம், அயோக்கியத்தனமான தீர்ப்பை வழங்கிவிட்டு, மனசாட்சிப்படி தீர்ப்பு வழங்கினோம் என்ற அதை நியாயப்படுத்தும் சட்டாம்பிள்ளைத்தனத்தை வெளிப்படையாக செய்கிறார்கள்.
இப்படி அயோக்கியத்தனமான தீர்ப்பை வழங்கும் பெரும்பாலான நீதிபதிகள் தீவிர கடவுள் பக்தர்களாக இருப்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். ஒருவர் தவறாமல், திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசிக்கிறார்கள். இவர்கள் வணங்கும் கடவுளுக்கு 10 சதவிகிதமாவது சக்தி இருக்கிறது என்று இவர்கள் நினைத்தால், இப்படிப்பட்ட அயோக்கியத்தனத்தை செய்வார்களா ?
மாநிலத்தின் தலையெழுத்தை, 8 கோடி மக்களின் வாழ்வை முடிவு செய்யும் ஒரு தீர்ப்பை எழுதுவதற்கு இவர்களுக்கு 130 நாட்களா ? இனி தீர்ப்பு வந்தால் என்ன ? வராவிட்டால் என்ன என்ற விரக்தி மனப்பான்மையை என்னால் பரவலாக காண முடிகிறது.
இருப்பினும், எனது பலவீனம் எந்த காலகட்டத்திலும் நம்பிக்கை இழக்காதது. ஆயிரக்கணக்கான கோடிகளை லஞ்சமாக கொடுப்பதற்காக கையில் வைத்துக் கொண்டு, சம்பல் ராணி ஜெயலலிதாவும், மன்னார்குடி மாபியாவும் ஆண்டுக்கணக்கில் அலைந்தபோது, அந்த பணத்தை தூக்கியெறிந்து, மிரட்டல்களை துச்சமாக கருதி அந்த கொள்ளைக் கூட்டத்தை சிறைக்கு அனுப்பினார் ஒரு ஜான் மைக்கேல் குன்ஹா.
உண்மைதான் இந்த உலகம் குமாரசாமிகளால்தான் நிறைந்திருக்கிறது. ஆனாலும், அரிதிலும் அரிதாக இருந்தாலும் குன்ஹாக்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் ?
அது போல ஒரு குன்ஹா தருணம் அரிதாக இருந்தாலும் நிகழும் என்ற நம்பிக்கையை நான் எப்போதும் இழக்க மாட்டேன். குன்ஹா என்று நினைத்தவர் குமாரசாமியாக இருந்தால் அதற்காகவும் நம்பிக்கை இழக்க மாட்டேன்.
அடுத்த குன்ஹாவுக்காக காத்திருப்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக