வியாழன், 14 ஜூன், 2018

தூத்துக்குடி: தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கனிமொழி

மின்னம்பலம்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக திமுக மகளிரணிச் செயலாளரும், திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி, தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு விரிவான புகார் ஒன்றை நேற்று (ஜூன் 13) அனுப்பியிருக்கிறார். அதில் போலீஸாரின் ஆவணங்களில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை தோலுரித்துக் காட்டியதோடு, துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கனிமொழி வற்புறுத்தியிருக்கிறார்.
“தமிழக உளவுத் துறைத் தலைவர் பொறுப்பையும், கூடுதலாகத் தமிழகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பொறுப்பையும் கவனிக்கும் சத்தியமூர்த்தி ஐபிஎஸ் மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கீடு செய்யவும் கணிக்கவும் தவறிவிட்டார். மேலும், இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் அவர் தவறிவிட்டார்.
மே 22ஆம் தேதி மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள தூத்துக்குடியில் கூடுதல் போலீஸார் தருவிக்கப்படவில்லை. போதுமான அளவு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் வன்முறைச் சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்பில்லாமல் போயிருக்கும், அதன் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு நடந்து உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புகளும் இல்லாமல் போயிருக்கும். இந்தப் பின்னணியில் உளவுத் துறைத் தலைவர் சத்தியமூர்த்தி இந்த விவகாரத்தைக் கையாண்ட விதம் பற்றி விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ள கனிமொழி 144 தடை உத்தரவு பற்றியும் முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்.

ரத யாத்திரைக்கு 144 எப்படி அமலானது?
“ தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு என்பது கொடூரமாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது, பொதுமக்களுக்குப் போதுமான எச்சரிக்கையும், விழிப்புணர்வும் செய்யப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் ராமராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகத்தில் நடந்தபோது மாநில அரசாங்கத்தால் 144 தடை உத்தரவு போடப்பட்டது. ஆனால், அப்போது 144 உத்தரவை மீறும் வகையில் ரத யாத்திரை நடத்தப்பட்டு, அதில் கூட்டமாக கலந்துகொண்டனர். அப்போது 144 உத்தரவை மீறியவர்கள் மீது இதுபோன்ற கொடூரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் நடவடிக்கையே மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் பின்னணியில் 144 தடை உத்தரவை விருப்புவெறுப்புக்கு ஏற்றாற்போல் போலீஸ் அதிகாரிகள் அமல்படுத்துகிறார்கள் என்ற புகார் எழுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் மட்டும் 144 தடை உத்தரவை கொடூரமாக அமல்படுத்தியது பற்றி தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரியுள்ளார் கனிமொழி.
காட்டிக் கொடுக்கும் காவல்துறை ஆவணங்கள்
மேலும், சில காவல்துறை ஆவணங்களை வைத்தே சில முக்கிய உண்மைகளை வெளிக் கொண்டுவந்துள்ளார் கனிமொழி.
2018 மே 21ஆம் தேதி தூத்துக்குடி சப்-கலெக்டர் விடுத்த சுற்றறிக்கையில் (B.1/P.V.4/2018) ஒன்பது துணை/ சிறப்பு தாசில்தார்கள் தூத்துக்குடியின் வெவ்வேறு பகுதிகளில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்கிறது. அதன்படி சேகர், சிறப்பு தாசில்தார் (தேர்தல்) ஃபாத்திமா நகர், லயன்ஸ் நகர், திரேஸ்புரம், பனிமயமாதா ஆலயம், திரேஸ்புரம் சந்திப்பு பகுதிகளில் பணியில் இருந்தார்.
அதேநேரம் 22ஆம் தேதி தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பதியப்பட்ட குற்ற எண் 191/2018 வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் வன்முறை கும்பல் வாகனங்களைத் தாக்கியதாகவும் அதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
சேகர் பணியில் இருந்த பனிமய மாதா ஆலயம் என்பது கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து 10.05 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த நிலையில் சேகர் எவ்வாறு கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்திருக்க முடியும்? எப்படி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டிருக்க முடியும்? உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்காகக் காவல் துறை செய்த இந்தப் போலியான ஏற்பாடுகள் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.
மண்டலத் துணை தாசில்தாரான கண்ணன் என்பவர் தூத்துக்குடியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பகுதி, மடத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் (குற்ற எண் 219/2018) கண்ணன் தெரிவித்த புகாரில் திரேஸ்புரம் சந்திப்பு பகுதியில் வன்முறை கும்பலை தான் கண்டதாகவும் அதன் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். திரேஸ்புரம் சந்திப்பு என்பது கண்ணன் பணியில் இருந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பகுதியில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தப் புகாரும் போலியானது என்பது தெரியவருகிறது. இதுகுறித்தும் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.
இதேபோல வட்டார கலால் அலுவலர் சந்திரன் என்பவர் எஸ்.ஏ.வி. மைதானம் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். ஆனால் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் (குற்ற எண் 312/2018) புகார்தாரராக இருக்கும் சந்திரன், ‘தூத்துக்குடி அண்ணா நகரில் தான் வன்முறை கும்பலைப் பார்த்ததாகவும் அதனால் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அண்ணா நகர் என்பது எஸ்.ஏ.வி. மைதானத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. எனவே, இந்தப் புகாரின் உண்மைத் தன்மையும் விசாரிக்கப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டுக்கு யார் உத்தரவிட்டார்கள் என்பதையும், உயர் அதிகாரிகளுக்கு இடையே இதுகுறித்து நடந்த தகவல் பரிமாற்றங்கள் என்ன என்பதையும் தேசிய மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணை மூலம் கண்டுபிடிக்க வேண்டும். யார் தலையீடும் இல்லாத சுயமான விசாரணையாக இது அமைய வேண்டும்’’ என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார் கனிமொழி எம்பி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக