வியாழன், 14 ஜூன், 2018

வருமானம் தரும் முருங்கை இலை! - திருநெல்வேலியிலிருந்து துபாய்க்கு...

விகடன் :இ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன் : இலை, காய் என அனைத்துப் பகுதிகளும் பயனளிக்கக்கூடிய தாவரங்களில் முருங்கையும் ஒன்று. உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துக்கள் முருங்கையில் கொட்டிக் கிடப்பதால், முருங்கைக்கு உலகம் முழுவதும் தேவை இருந்து வருகிறது.& முருங்கை அதிகம் விளையும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், நம் நாட்டிலிருந்து அதிகளவில் முருங்கை இலை, காய்கள், விதைகள் ஆகியவை ஏற்றுமதியாகின்றன. அந்தவகையில் முருங்கைக் கீரைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த டெல்சன்.
திசையன்விளையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடகுளம் கிராமத்தில்தான் டெல்சனின் முருங்கைத் தோட்டம் இருக்கிறது. ஒரு காலைவேளையில் இலை பறிப்புப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த டெல்சனைச் சந்தித்தோம்.

“எனக்குச் சொந்த ஊர் இதுதான். அப்பா காலத்துல வாழை, முருங்கைனு விவசாயம் செஞ்சாங்க. நான் 8-ம் வகுப்பு வரை படிச்சுட்டு அப்பாவுடன் விவசாயத்துக்கு வந்துட்டேன். இடையில தூத்துக்குடியில் காய்கறிகள் எக்ஸ்போர்ட் பண்ற ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த கம்பெனியில ஆள்குறைப்பு செஞ்சப்போ எனக்கும் வேலை போயிடுச்சு. அதுக்கப்புறம்தான் எனக்கு எக்ஸ்போர்ட் செய்ற யோசனை வந்தது. அந்த கம்பெனியில் வேலை செஞ்சப்போ கிடைச்ச தொடர்புகளை வெச்சு வாழை, நெல்லி, சின்ன வெங்காயம், முருங்கைக்காய், இளநீர், காய்கறிகள்னு ஏற்றுமதி செய்ய ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துல லண்டன்ல இருந்து முருங்கைக்கீரைக்கு ஆர்டர் கிடைச்சது. முதல் தடவையா 5 கிலோ முருங்கைக்கீரையை சாம்பிள் அனுப்பினேன். தொடர்ந்து முருங்கைக்கீரையைக் கேட்க ஆரம்பிச்சாங்க. அதுக்கான தேவை அதிகரிச்சுட்டே இருந்ததால, மற்ற விளைபொருள்கள் ஏற்றுமதியைக் குறைச்சுட்டு முருங்கைக்கீரையில கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷமா மாசத்துல 25 நாள் முருங்கைக்கீரையை ஏற்றுமதி செஞ்சுட்டுருக்கேன்” என்ற டெல்சன் தொடர்ந்தார்...

“நான் 5 ஏக்கர் நிலத்துல இயற்கை முறையில முருங்கை போட்டுருக்கேன். போன வருஷம் 30 ஏக்கர் அளவுக்கு முருங்கைத் தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்துக் கீரை பறிச்சோம். இந்த வருஷம் குத்தகைக்கு எடுக்கலை. அதே தோட்டங்கள்ல இருந்து ஒரு கிலோ கீரை 15 ரூபாய்னு வாங்கிக்கிறேன். இயற்கை விவசாயம் செய்ற தோட்டங்கள்ல மட்டும்தான் கீரை பறிப்பேன். ஒரு ஈர்க்கு முருங்கை இலைகளைப் பறிச்சு, ஒரு மணி நேரம் வெச்சிருந்து, வேகமாக ஆட்டிப் பார்த்தால் இலைகள் உதிரக் கூடாது. பறிச்ச இலைகளைத் தண்ணீர் தெளிச்சு பாலித்தீன் கவர்ல வெச்சு ஐஸ் பாக்ஸில் 24 மணி நேரம் வெச்சுப் பார்ப்போம். அப்பவும் இலைகள் வாடாமல், உதிராமல் இருக்கணும். இந்தச் சோதனைகளுக்குப் பிறகுதான் சம்பந்தப்பட்ட தோட்டங்கள்ல கீரைகளைப் பறிப்போம். 
கீரைகளைப் பறிக்கிறதுக்காக 35 பெண்களை வேலைக்கு வெச்சுருக்கேன். தினமும் காலையில் 5 மணிக்கு அவங்க வந்துடுவாங்க. அவங்களை வேன்ல கூட்டிட்டுத் தோட்டங்களுக்குப் போவோம். ஏழு மணிக்குள்ள பறிப்பு வேலைகள் முடிஞ்சுடும். வெளிர் நிறம் இல்லாமல், கரும்பச்சை நிறத்துல இருக்குற கீரைகளை மட்டும்தான் பறிப்போம். செடி முருங்கைக்கீரைகள் ஏற்றுமதிக்கு ஏற்றதல்ல. மர முருங்கைகள்ல மட்டும்தான் கீரைகள் பறிப்போம். பறிச்ச கீரைகளைப் பருத்தித் துணியில் கட்டி, சேதாரம் இல்லாம பேக்கிங் கூடத்துக்கு எடுத்துட்டு வருவோம்.

‘தார்பாலின் ஷீட்’டை விரிச்சு அதுல தண்ணீர் தெளிச்சு கீரைகளை அரை அடி உயரத்துக்கு வரிசையாக அடுக்கி, லேசாகத் தண்ணீர் தெளிப்போம். அதுக்கப்புறம் காய்ந்த இலை, பழுப்பு இலை, பூக்களை நீக்கிட்டு 150 கிராம் எடை இருக்கிறமாதிரி பாலித்தீன் கவருக்குள் வெச்சு, ரப்பர் பேண்டு போட்டுக் கட்டிடுவோம். அடுத்து 65 லிட்டர் கொள்ளளவு கொண்ட தெர்மாகோல் பெட்டிகள்ல 3 ஐஸ் கட்டிகளை வெச்சு, அதுக்கு மேல தண்ணீர் உறிஞ்சாத பேப்பரை விரிச்சு 25 கீரை பாக்கெட்டுகளை அடுக்குவோம். அதுக்கு மேல ஐஸ் கட்டிகள் வெச்சு 25 கீரைக்கட்டுகள் வெப்போம். அதுக்கு மேல மூன்றாவது அடுக்கா 10 கீரைக்கட்டுகளை வெச்சு மேலயும் ஐஸ் கட்டிகளை வெச்சு பேக்கிங் செஞ்சுடுவோம். ஒரு பெட்டியில் 60 கட்டுக் கீரைகள் பிடிக்கும். அதுல 11 ஐஸ் கட்டிகள், 5 அடுக்கு பேப்பர் வைக்கணும். தினமும் 400 கிலோ அளவுக்கு முருங்கைக்கீரையை ஏற்றுமதி செஞ்சுட்டுருக்கேன்” என்ற டெல்சன், வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார். 
“இப்போ துபாய், லண்டன், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செஞ்சுட்டுருக்கேன். மாசத்துல 25 நாள்கள் கீரைகளை அனுப்பிட்டுருக்கேன். எங்க ஊர்ல இருந்து திருவனந்தபுரம் அல்லது திருச்சி ஏர்போர்ட்டுக்குக் கொண்டு போய்தான் பார்சல் புக் பண்றேன். அங்கிருந்து விமானம் மூலமா சம்பந்தப்பட்ட நாடுகளுக்குப் போயிடும். மாதத்தில் 10 நாள்கள் துபாய்க்கு அனுப்புறேன். 8 நாள்கள் கத்தாருக்கு அனுப்புறேன். 5 நாள்கள் ஓமனுக்கு அனுப்புறேன். 2 நாள்கள் லண்டனுக்கு அனுப்புறேன்.

 400 கிலோ வீதம், 25 நாள்கள்ல மொத்தம் 10,000 கிலோ அளவுக்கு முருங்கைக்கீரை ஏற்றுமதியாகுது. இது மூலமா 4,00,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. கீரை கொள்முதல் விலை, பறிப்புக்கூலி, பேக்கிங் கூலி, வேன் வாடகை, விமானக் கட்டணம், தெர்மாகோல் பெட்டி, ஐஸ் கட்டிகள், மின்சாரக்கட்டணம்னு எல்லாம் சேர்த்து 2,70,000 ரூபாய்ச் செலவாகும். அதுபோக, மாசம் 1,30,000 ரூபாய் வரை லாபமாகக் கிடைச்சுட்டு இருக்கு” என்ற டெல்சன் நிறைவாக,

“ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, கொச்சின்ல இருக்குற பேக் ஹவுஸுக்குக் கொண்டுபோய்தான் சுங்கத்துறைகிட்ட அனுமதி வாங்க வேண்டியிருக்கு. இதனால, போக்குவரத்து நேரம் அதிகமாகுது. செலவுகளும் கூடுது. தமிழ்நாட்டுலயும் விமான நிலையப் பகுதிகளில் பேக் ஹவுஸைக் கொண்டுவந்தா, எங்களை மாதிரி ஏற்றுமதியாளர்களுக்கு வசதியாக இருக்கும். ஏற்றுமதியையும் அதிகப்படுத்த முடியும். அந்த வசதி கிடைச்சா நானே 100 பேருக்கு வேலை கொடுக்க முடியும். அந்தளவுக்கு முருங்கைக்கீரைக்குத் தேவையிருக்கு” என்றார்.

தொடர்புக்கு, டெல்சன், செல்போன்: 90806 60084.

ஏக்கருக்கு ரூ.84 ஆயிரம்... காய்களோடு இலைகளிலும் வருமானம்!

ருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அடுத்த மோளையனூரில் முருங்கைச் சாகுபடி செய்து வருகிறார் சாமிக்கண்ணு, முருங்கை இலை ஏற்றுமதி குறித்து அவரிடம் பேசினோம். “எனக்கு நாலரை ஏக்கர் நிலமிருக்கு. அதுல இரண்டரை ஏக்கர்ல தொடர்ந்து முருங்கைச் சாகுபடி செஞ்சிட்டு வர்றேன். காய்க்காக வளர்க்கும் முருங்கை மரங்கள்ல செப்டம்பர்ல இருந்து டிசம்பர் மாசம் வரை கவாத்து செய்வோம். அப்போ ஏக்கருக்கு 10-12 டன் வரை இலை கிடைக்கும். அதை ஏற்றுமதிக்காரங்க ஒரு கிலோ 7 ரூபாய்னு எடுத்துக்கிறாங்க. இதுமூலமா, வருஷத்துக்கு 84 ஆயிரம் உபரி வருமானமாகக் கிடைக்குது. அதனால, இலையும், காயும் கிடைக்கிற மாதிரி தோட்டத்த பராமரிச்சிட்டு வர்றேன்.

நல்ல கிராக்கி இருக்கிறதால, அடுத்து இலைகளுக்காகவே முருங்கை நடலாம்னு இருக்கேன். இதே இலையை காயவெச்சு வித்தா இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கும். அதுக்காக விவசாயிகள் கூட்டாக இணைஞ்சு, இலைகள காய வைக்கிறதுக்கு உலர்கலனைத் போடும் முயற்சியில் இருக்கோம். எங்ககிட்ட வாங்குற ஏற்றுமதியாளர், சிங்கப்பூர், மலேசியா, துபாய்னு அனுப்பிட்டிருக்கார். நான் செடி முருங்கையும், மர முருங்கையும் சாகுபடி செஞ்சிட்டு வர்றேன். இந்த ரெண்டு வகையில செடி முருங்கை இலையைத்தான், எங்க பகுதியில ஏற்றுமதிக்கு அதிகமா கேட்குறாங்க” என்றார்.

தொடர்புக்கு, சாமிக்கண்ணு, செல்போன்: 97883 18950

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக