திங்கள், 11 ஜூன், 2018

சென்னையில் ஒரே நாளில் 16 வழிப்பறி கத்தியால் வெட்டி வழிப்பறி ... அச்சத்தில் பொதுமக்கள்

tamilthehindu :சென்னையில் பொதுமக்கள் தனியாக நடமாட முடியாத அளவுக்கு
வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறி செய்கின்றனர். நேற்று ஒரே நாளில் சென்னையில் 16 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன.
சென்னை பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருகிறது என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் தொடர் சம்பவங்கள் அடுத்தடுத்த நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருகிறதா சென்னை? என நான்கு நாட்களுக்கு முன்னர் ஒரு பதிவிட்டிருந்தோம். ஆனால் அதில் எந்த மாறுதலும் இல்லை, ஆம் பாதுகாப்பற்ற நகரமாக மாறித்தான் வருகிறது சென்னை என்கிற அளவில் சென்னையின் சட்டம் ஒழுங்கு மாறி வருகிறது.
சம்பவம் 1: செகரெடேரியட் காலனியில், கஞ்சா விற்கும் ரவுடிகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருவில் வாகனங்களை அடித்து உடைத்து, தகராறில் ஈடுபட்ட சம்பவத்தில் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸார் தாக்கப்பட்டு போலீஸ் ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் 5 பேரை போலீஸார் கைது செய்தும் ஒரு கும்பல் அவர்களை வெளியே விடச்சொல்லி ஸ்டேஷனில் மிரட்டியுள்ளது.
சம்பவம் 2: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் ரவுடிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அவ்வழியே வந்த அப்பாவி பொதுமக்களைத் தாக்கியுள்ளனர். சிலர் வெட்டப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஆயுதங்களுடன் சுற்றியதாக சுந்தர், நவீன், அருண், விஷ்வா, சுரேஷ்(எ) கொட்டசப்பி, டில்லி கணேஷ், கோபி, பாலாஜி, உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மீதி ஆட்கள் தலைமறைவாகிவிட்டனர். இவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் 3: தரமணியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (22), சோழிங்கநல்லூரில் பிரபல மென்பொருள் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை 03.30 மணியளவில் கடலூரில் இருந்து சென்னை வந்த அவர், மத்திய கைலாஷ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் அவரைக் கத்தியால் தலையில் அடித்து செல்போனையும் பணத்தையும் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அவர் கூச்சலிட்டுள்ளார். இதைப் பார்த்த அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் விரட்டியதில் கொள்ளையர்கள் தப்பிச்சென்று விட்டனர். காயமடைந்த விக்னேஷ் மருத்துவமனைக்குச் சென்று தலையில் ஏற்பட்ட காயத்திற்கு 6 தையல் போட்டுக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
சம்பவம் 4: கீழ்ப்பாக்கம் பிளவர்ஸ் சாலையில் வசித்து வருபவர் சந்திர பிரகாஷ். இவர் வெளியே செல்வதற்காக கால் டாக்ஸியை அழைத்துள்ளார். புரசைவாக்கம் அழகப்பா சாலை அருகே கால் டாக்ஸிக்காக காத்திருந்த போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் சந்திர பிரகாஷின் செல்போன் பறித்துச் சென்றனர். இது குறித்து அவர் வேப்பேரி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சம்பவம் 5: மண்ணடியைச் சேர்ந்தவர் முகமது பஷீர். சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் செல்போன் பேசியபடி நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத 2 பேர் முகமது பஷீரின் செல்போனைப் பறித்துச் சென்றனர். இது குறித்து வேப்பேரி போலீஸில் பஷீர் புகார் அளித்துள்ளார்.
சம்பவம் 6: அரும்பாக்கம் கமலாநேரு நகரைச் சேர்ந்தவர் பிரபு (21), இவரது நண்பர் தமிழரசன் (22) இருவரும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். நள்ளிரவு 2.40 மணி அளவில் இருவரும் டீ குடிக்க 100 அடி சாலையில் நடந்து வரும் பொழுது எதிரே கருப்பு நிற பல்சர் வாகனத்தில் வந்த மூன்றுபேர் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களது செல்போனைப் பறித்துச் சென்றனர்.
சம்பவம் 7:  இதே நபர்கள் அரும்பாக்கம் போலீஸ் லிமிட்டில் ஒரு நபரிடமிருந்து கத்தியைக் காட்டி கைப்பையை பிடுங்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் 8:  எம்.எம்.டி.ஏ காலனி அசோகா தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் (24). தனியார் வங்கியில் பணியாற்றுகிறார். இவர் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு சென்று விட்டு நேற்றிரவு சென்னை திரும்பினார். சென்னையில் இரவு 2.30 மணிக்கு வந்திறங்கி தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து செல்போன், பிரேஸ்லெட், ரொக்கப் பணத்தைப் பிடுங்கிச் சென்றார்.
சம்பவம் 9: விருகம்பாக்கம் பாஸ்கர் காலனியைச் சேர்ந்தவர் சரண்யா (27). இவர் தாராசந்த் நகர் அருகே நடந்து சென்றபோது அவரிடமிருந்த 7 சவரன் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பறித்துச் சென்றனர்.
சம்பவம் 10:  இதே போன்று அசோக் நகர் நூறடி சாலையில் செயின் பறிப்பு நடந்ததாக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் 11:  கோவிலம்பாக்கம், நன்மங்கலத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் வீட்டருகே சென்று கொண்டிருந்தபோது கத்திமுனையில் சரவணனிடமிருந்து செல்போன் பறிக்கப்பட்டது.
சம்பவம் 12: கொளத்தூர், அன்னை சத்யா நகர் எம்ஜிஆர் தெருவில் வசிப்பவர் சரவணன்(25), ஆட்டோ ஓட்டுநர். இவர் சிந்தாதிரிப்பேட்டை மே தினப்பூங்கா அருகே ஆட்டோவை நிறுத்தி உறங்கியுள்ளார். அப்போது பல்லவன் நகரைச் சேர்ந்த வினோத் (22), புதுப்பேட்டையைச் சேர்ந்த முத்துவீரன் (21) ஆகிய இருவரும் சரவணனை மிரட்டி செல்போனைப் பறித்துச் சென்றுள்ளனர். அப்போது ரோந்து வந்த போலீஸாரிடம் சரவணன் புகார் அளிக்க மே தினப்பூங்காவில் மறைந்திருந்த இருவரையும் போலீஸார் பிடித்து அவர்கள் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
சம்பவம் 13: அயனாவரம், குருசாமி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் மாரிமுத்து (27).  இவர் நியூ ஆவடி சாலையில் நடந்து வரும்போது இவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போனைப் பறித்துச் சென்றனர்.
சம்பவம் 14:  அயனாவரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பைச் சேர்ந்தவர் பானு. இவர் குருசாமி தெருவழியாக நடந்து வரும்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்திலிருந்த 2 சவரன் செயினைப் பறித்துச் சென்றனர்.
சம்பவம்15: பிஹாரைச் சேர்ந்தவர் அப்தேஷ்குமார் (30). சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். திருமங்கலத்தில் பர்னிச்சர் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு 10.30 மணியளவில் வி.ஆர். மஹால் எதிரே 200 அடி சாலையில் நடந்து வரும்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் அவரிடம் வழிப்பறி முயற்சியில் ஈடுபட அவர் திமிற அவருடைய மூக்கில் பலமாக குத்தி செல்போனைப் பிடுங்கியுள்ளனர்.
சம்பவம் 16: திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் வசிப்பவர் கணேசன் (57) தனியார் பள்ளியில் பாதுகாவலராகப் பணி செய்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டிற்கு காமராஜர் சாலை வழியாக செல்லும் போது அடையாளம் தெரியாத 5 நபர்கள் அவரை வழிமறித்து கத்தியால் வலது கை, இடது கை மற்றும் நெற்றியில் காயம் ஏற்படுத்தி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.2500 ரொக்கப் பணத்தை பறித்துச் சென்றனர்.
இதை அவ்வழியாக வந்த லாரி ஓட்டுநர் இளங்கோ (42) என்பவர் அஜித் என்பவர் அவர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தார். மற்ற இரண்டு பேரும் ஓடிவிட்டனர். பின்னர் அவர்களை இளங்கோ காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை போலீஸார் விசாரித்தபோது அவர் பெயர் அஜித் (19) என்பதும் பாடி கலைவாணி நகரைச் சேர்ந்த இரு சக்கர வாகன மெக்கானிக் என்பது தெரிய வந்தது.
அஜித்தின் கூட்டாளிகள் தப்பி ஓடிய சூர்யா (19) பாடியைச் சேர்ந்த டீ மாஸ்டர் மற்றும் பாடியைச் சேர்ந்த 17 வயது இருசக்கர வாகன மெக்கானிக்கையும் போலீஸார் பிடித்தனர்.
சம்பவம் 17: விழுப்புரம் செஞ்சியைச் சேர்ந்தவர் பெருமாள் (32). கால் டாக்ஸி ஓட்டுநராக உள்ளார். இவர் நேற்றிரவு 3 மணி அளவில் நூறடிச் சாலையில் காரில் அமர்ந்திருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களில் பின்னால் அமர்ந்திருந்த நபர் கைப்பேசியை பறித்துச் சென்றதாக புகார்.
சம்பவம் 18: நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கெமிகாஷா (24). இவர் பெங்களூரிலிருந்து சென்னை திரும்பி உள்ளார். வடபழனி நூறடி சாலையில் தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே நின்று கால் டாக்ஸிக்காக காத்திருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரில் பின்னால் அமர்ந்திருந்த நபர் கைபேசியைப் பறித்துச் சென்றுள்ளார்.
சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் 30-க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் செல்போன் பறிப்புகள் சென்னையில் அதிக அளவில் நடப்பதும் அதில் பெரும்பாலானோர் புகார் அளிக்காமல் தவிர்ப்பதையும் சேர்த்தால் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடப்பதை அறியலாம்.
ஒரே நாளில் 16 வழிப்பறி சம்பவங்கள் நேற்று நடந்திருப்பது சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் 2 பெண்களைத் தவிர 13 பேர் ஆண்கள், இளைஞர்கள் ஆவர். கத்தியைக் காட்டி மிரட்டி மறுத்தால் தாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக