புதன், 23 மே, 2018

தமிழகம் முழுவதும் போராட்டம்!

தமிழகம் முழுவதும் போராட்டம்!
மின்னம்பலம் :தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற பேரணியில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பத்தாம் வகுப்பு மாணவி உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
ஸ்டெர்லைட் அதிபர் வீடு முற்றுகை
லண்டனில் வசித்து வரும் தமிழர்கள் நேற்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அனில் அகர்வால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ‘அவர்கள் குற்றவாளி உள்ளே இருக்கிறார்’ என்றும், ‘கொலையாளி வேதாந்தா’ என்றும் முழக்கமிட்டனர்.
தூத்துக்குடி விரையும் தலைவர்கள்
இந்த நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று காலை தூத்துக்குடி செல்லவுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இன்று தூத்துக்குடி விரைகின்றனர்.

முதல்வர் உருவபொம்மை எரிப்பு
சென்னையில் இயக்குநர் கவுதமன் தலைமையில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரின் உருவ பொம்மையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.
தமிழக அரசைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் வழக்கறிஞர் ராஜு தலைமையில் சென்னை கோயம்பேட்டில் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து திருச்சி, விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

நேற்று மாலை திராவிடர் விடுதலை கழகத்தினர், சென்னை அண்ணா சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் பரவிய போராட்டம்
போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களை அறிந்து அதிர்ச்சியடைந்த, நெல்லை இடிந்தகரை பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெளிப்பகுதியில் இருந்த மதுக்கடையை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்.

திருச்செந்தூரில் மீனவர்கள் கிராமமான மணப்பாடு, ஆலந்தலை, அமலிநகர், கொம்புத்துறை, சிங்கித்துறை, புன்னக்காயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதற்கிடையே துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றும் தொடரவுள்ள போராட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து அனைத்து பேருந்து பணிமனைகள் முன்பும் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று தொமுச, சிஐடியூ, ஏஐசிஐடியூ, விசிக உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக மதுரையில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது.
வரும் 24ஆம் தேதி வேல்முருகன் தலைமையில் சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடைபெறவுள்ளது.
துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக