புதன், 23 மே, 2018

கலைஞர் குணமாகி வருகிறார் ... செய்தி தாள்களை வாசிக்கிறார்

செய்தித்தாள் வாசிப்பதே செய்தி!மின்னம்பலம்: தமிழ்நாட்டு நாளேடுகளில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தலைப்புச் செய்தியாக வலம்வரும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, தற்போது செய்தித்தாள் வாசிப்பதும் செய்தியாகியுள்ளது.
திமுக தலைவர் கலைஞர்  உடல்நலக் குறைவினால் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை தமிழகத் தலைவர்கள் மட்டுமல்லாது பிரதமர் உள்பட தேசியத் தலைவர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கலைஞரின்  உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முரசொலி பவள விழா கண்காட்சி, அண்ணா அறிவாலயம், சிஐடி காலணி இல்லம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வந்தார். அவருக்குப் புத்துணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மு.க.தமிழரசுவின் பேரனை அழைத்து வந்து அவருடன் விளையாடவும் வைத்தனர்.
ஓய்வில் இருந்தாலும் திமுக தலைவர் கலைஞர்  இருக்கும் அறைக்குத் தினந்தோறும் அனைத்து செய்தித்தாள்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதுநாள்வரை உடல்நிலை காரணமாக செய்தித்தாள்கள் வாசிக்காமல் இருந்த கலைஞர் , நேற்று (மே 22) தன் மேஜையில் இருந்த விடுதலை நாளிதழை எடுத்து புரட்டிப் பார்த்து வாசித்திருக்கிறார். இந்தக் காட்சியைக் கண்ட  உதவியாளர்கள் மகிழ்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்ந்தனர். உடனடியாக இக்காட்சியைப் புகைப்படம் எடுத்து கலைஞரின்  குடும்பத்தினருக்கு அனுப்பினர்.

கலைஞர்  செய்தித்தாள்கள் வாசிக்க ஆரம்பித்திருப்பதன் மூலம் மீண்டும் மெல்ல மெல்ல அவர் தன் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக திமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் ஜூன் 3ஆம் தேதி கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், தன் பிறந்த நாளையொட்டி கலைஞர்  தன் தொண்டர்களுக்குத் தரும் பரிசாக அமைந்திருக்கிறது இந்தப் புகைப்படம்.
ஆம், அவர் செய்தித்தாள் வாசிப்பதும் முக்கியச் செய்திதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக