புதன், 16 மே, 2018

குமாரசாமி- 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் தந்தார்

Veera Kumar - Oneindia Tamil  பெங்களூரு: 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி. 
காங். தலைவர் பரமேஷ்வர் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூர் குயின்ஸ் சாலையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங். மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். 
 இதேபோல தனியார் ஹோட்டலில், குமாரசாமி தலைமையில் கூடியது, மஜத எம்எல்ஏக்கள் கூட்டம். எடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம், மல்லேஸ்வரத்திலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு கட்சியிலும் ஆட்சி அமைப்பது குறித்த வாத, விவாதங்கள் தூள் பறந்தன. தங்கள் கட்சி முடிவுக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டனர். கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ராம்நகரம் மாவட்டம் பிடதி அருகேயுள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில், தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள், கூட்டணி ஆட்சிக்கு அளித்த சம்மத கடிதத்தோடு ஆளுநரை இன்று மாலை குமாரசாமி, பரமேஸ்வர், மொய்லி ஆகியோர் சந்தித்தனர். அப்போது தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் உரிமை கோரினார் குமாரசாமி. 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதங்களையும் ஆளுநரிடம் கொடுத்தார் குமாரசாமி. முன்னதாக 104 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் எடியூரப்பா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக