புதன், 16 மே, 2018

கர்நாடகா: தொடங்கியது எம்.எல்.ஏ.க்கள் வேட்டை! பாஜகவின் பகல் கொள்ளை ஆரம்பம் !


மின்னம்பலம்:  தொங்கு சட்டமன்றம் அமைந்திருக்கும் கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி, தேர்தல் முடிவுகள் வந்து 24 மணிநேரம் ஆகியும் நீடித்துவருகிறது. இந்நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சித் தலைமைகளின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டதாக வெளியான தகவல்களால் கர்நாடக அரசியல் குழப்பம் நீடிக்கிறது.
கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவுகள் நேற்று (மே 15) வெளியிடப்பட்டன. அதில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78, ம.ஜ.த 37 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கர்நாடகா: தொடங்கியது எம்.எல்.ஏ.க்கள் வேட்டை!தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைப்பதற்கான அறிகுறிகள் நேற்று காலை தென்பட ஆரம்பித்தன. ஆனால் திடீர் திருப்பமாக மஜத ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. இதனையடுத்து ஆளுநர் வஜூபாயைச் சந்தித்த மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து பெங்களூரு அசோகா ஹோட்டலில் மஜத-காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று (மே 16) குமாராசாமியை பாஜக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சந்தித்துப் பேசினார். பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் குமாரசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் எம்.ஏ.க்கள் கூட்டத்திற்கு முன்னதாக இதனை மறுத்துள்ள குமாரசாமி, " நாங்கள் ஏற்கனவே காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு செய்துள்ளோம். எனவே பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் மஜத எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பெங்களூருவிலுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. ஆனால் கூட்டத்திற்குச் செல்லாமல் ராஜ வெங்கடப்ப நாயக்கா, வெங்கட ராவ் நாடகவுடா ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் மஜத சட்டமன்ற குழுத் தலைவராக குமாரசாமி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் நேற்று இரவு நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலையில்தான் நடைபெற்றது. ஆனால் ராஜசேகர பாட்டில், ஆனந்த் சிங், நரேந்திரா உள்ளிட்ட ஐந்து முதல் பத்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகின. இவர்களில் ஆனந்த் சிங், நாகேந்திரா ஆகிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் பாஜகவின் ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் பல மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜகவின் சார்பில், ‘அமைச்சர் பதவி’ என்ற உறுதிமொழியுடன் அழைப்பு விடப்பட்டிருக்கிறது என்பதைச் சில எம்.எல்.ஏ.க்களே உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ.க்களான அமரே கவுடா, லிங்கன கவுடா ஆகியோர் என்.டி.டி.வி. ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “பாஜக தலைவர்களிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. எங்களோடு வந்துவிடுங்கள் அமைச்சர் பதவி தருகிறோம் என்று அழைக்கிறார்கள். ஆனால் நாங்கள் போகவில்லை. எங்கள் முதல்வர் குமாரசாமிதான்’’ என்று கூறியிருக்கிறார்கள். இன்னொரு மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.வான சர்வன்னாவும், சுமார் ஐந்து எம்.எல்.ஏ.க்களை பாஜக அணுகிவருதாகக் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள் வேட்டைக்காக ‘ஆபரேஷன் கமல்’ நடத்திய பாஜக, மீண்டும் இப்போது எம்.எல்.ஏ.க்கள் வேட்டையைத் தொடங்கிவிட்டதாக காங்கிரஸ், மஜக தலைவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
ஆளுநர் இதுவரை யாரையும் ஆட்சி அமைக்க அதிகாரபூர்வமாக அழைக்காததால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்குவதற்காக பெங்களூரு ஈகிள்டன் ரிசார்ட்டில் அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மஜக எம்.எல்.ஏ.க்களும் பாதுகாக்கப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக