சனி, 7 ஏப்ரல், 2018

ஐபிஎல் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றுங்கள் .IPL க்கு திருமாவளவன் கடிதம்!

ஐபிஎல் தலைவருக்கு திருமாவளவன் கடிதம்!மின்னம்பலம்: காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில், மத்திய அரசைக் கண்டித்தும் மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 7) மும்பையில் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அப்படி நடத்தப்பட்டால் மைதானத்துக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு ஐபிஎல் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன். அவருடைய கடிதத்தில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம். காவிரி விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு எட்டப்படும் வரை இது தொடர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "ஐபிஎல் போட்டிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. ஆனால் இந்தச் சமயத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற வேண்டாம் என்றுதான் கோரிக்கை விடுக்கிறோம் எனவும், இதுதான் ஒரு சரியான தீர்வாகவும் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையில், சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக