சனி, 7 ஏப்ரல், 2018

ஸ்டாலின் : கறுப்பு கொடியோடுதான் எதிர் கொள்ளுவோம் ... காவிரிக்காக வாயே திறக்காத மோடியை ..

மின்னம்பலம்: காவிரி விவகாரத்தில் யாரையும் சந்திக்காத பிரதமரைக் கறுப்புக் கொடியுடன்
சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கடந்த 5ஆம் தேதி திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டப் போராட்டமாக இரு குழுக்களாகப் பிரிந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் பயணம் இன்று முக்கொம்புவிலிருந்தும், இரண்டாவது பயணம் 9ஆம் தேதி அரியலூரிலிருந்தும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நடைபயணத்தில் கலந்துகொள்ளப் புறப்படும் முன்பு திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்தித்த ஸ்டாலின், காவிரி மீட்புப் பயணம் குறித்த விவரங்களை எடுத்துக் கூறி அவரிடம் ஆசி பெற்றார். இதனைத் தொடர்ந்து இன்று விமானம் மூலம் திருச்சி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "காவிரி மீட்புப் பயணத்தின் இரு குழுக்களும் கடலூரில் தங்களது பயணத்தை நிறைவு செய்யவுள்ளது. அங்கு ஒரு மிகப் பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தி சில தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு மிகப் பெரிய பேரணியாக ஆளுநர் மாளிகைக்கு சென்று எங்கள் கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.
காவிரி விவகாரம் குறித்து பிரதமர் யாரையும் சந்திக்கத் தயாராக இல்லை. ஏனெனில் முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டும் மதிக்கவில்லை, சட்டமன்றத் தீர்மானத்தையும் அவர் மதிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் நாங்கள் சந்திக்க வேண்டும் என்று கூறினாலும் பிரதமர் சந்திக்கமாட்டார்.
எனவேதான் நாங்கள் கறுப்புக் கொடியுடன் பிரதமரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம் என்ற அவர் காவிரி விவகாரம் தொடர்பாக எத்தனை வழக்குகள் போட்டாலும், தண்டனைகள் கொடுத்தாலும் அவற்றைப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இன்று மாலை 4 மணியளவில் முக்கொம்பிலிருந்து தொடங்கும் பயணமானது, கல்லணையைச் சென்றடைகிறது. நாளை டெல்டா மாவட்டங்களில் தொடரவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக