சனி, 7 ஏப்ரல், 2018

மீனவர்கள் கடலில் முற்றுகை! சரக்குப் பெட்டகத் துறைமுகம்.. கன்யாகுமரியில்


மின்னம்பலம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையவுள்ள சரக்குப்
பெட்டகத் துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவளம் முதல் மணக்குடி வரையிலான கடல்பகுதியில் மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இனயம் பகுதியில் சரக்குப் பெட்டகத் துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டால் 12 கிமீ சுற்றளவிலான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனால் இனயம் சரக்குப் பெட்டகத் துறைமுகத்தை அமைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். தற்போது, 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
சரக்குப் பெட்டகத் துறைமுகம் அமைப்பதற்கு எதிராக கோவளம் முதல் மணக்குடி வரையிலான கடற்பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல், கையில் கறுப்பு கொடி ஏந்தியும் கடலில் இறங்கியும் இன்று (ஏப்ரல் 7) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இடிந்தகரையைச் சேர்ந்த சுமார் 4,000 மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. வர்த்தகத் துறைமுகம் அமைத்து கடல் வளத்தை அழிப்பதற்கு பதிலாக மீன்பிடி துறைமுகம் அமைத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று போராட்ட களத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக