வெள்ளி, 27 ஏப்ரல், 2018

சிறுவன் மீது பாலியல் வன்முறைக்கும் மரண தண்டனை!

மின்னம்பலம் :12 வயதிற்குட்பட் சிறுவனை பாலியல் வன்கொடுமைக்குப்படுத்தினாலும் மரண தண்டனை அளிக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் டெல்லியில் இன்று (ஏப்ரல் 27)பத்திரிகையாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:
ஏப்ரல் 22ம்தேதியன்று மத்திய அரசு பாலியல் வன்கொடுமை தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 ல் திருத்தத்தை கொண்டு வந்தது. .அதே போன்று போக்சோ எனப்படும் பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவு 42ம் திருத்தப்பட்டது.
இச்சட்ட திருத்தத்தின்படி, முன்னதாக இருந்த வயது வரம்பான 18 லிருந்து 12 வயதாக குறைக்கப்பட்டுள்ளது. 12 வயதிற்கும் குறைவான சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினால் மரண தண்டனை அளிக்கப்படும் என்று திருத்தப்பட்டுள்ளது.

போக்சோ சட்டமும் திருத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376ம் பாலினத்தைப் பொருத்தவரை பெண்களையே மையமாகக் கொண்டுள்ளது. அதில் ஒரு சிறுவன் பாலியல்ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால் குற்றவாளிக்கு தண்டனை அளிக்கப்பட சட்டவிதிகள் இல்லை.
தற்போது 12 வயதிற்குட்பட்ட இரு பாலினத்தவர்களில் யார் மீது பாலியல் வன்முறை செலுத்தப்பட்டாலும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் என திருத்தப்பட உள்ளது.
இதற்கான முன்மொழிவு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அனுப்பப்படும் அதனைத்தொடர்ந்து அமைச்சரவையில் முன் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக