வெள்ளி, 27 ஏப்ரல், 2018

தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே நீட்! உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே நீட்!மின்னம்பலம் :தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என சிபிஎஸ்இ வாரியத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 27) உத்தரவிட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய 10 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான அறிவிப்பில் சொந்த மாநிலத்தில் ஏதேனும் மூன்று தேர்வு மையங்களைக் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்குத் தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களை மாற்ற முடியாது என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது.

இதை எதிர்த்து சென்னை வேளச்சேரியை சேர்ந்த கலியமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “நீட் தேர்வை 17 வயதுள்ள மாணவர்கள்தான் எழுதுகின்றனர். அவர்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதுவதில் சிரமம் ஏற்படும். அலைச்சல், மன உளைச்சல் காரணமாக நுழைவுத் தேர்வை அவர்களால் முழுமையாக எழுத முடியாமல் போகலாம். எனவே தேர்வு மையங்களைத் தமிழகத்திற்குள் மறு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ஜி ரமேஷ், தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (ஏப்ரல் 26) விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக நாளைக்குள் பதில் அளிக்கத் தமிழக அரசுக்கும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ஜி ரமேஷ் மற்றும் தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று வந்தது. அப்போது நீதிபதிகள், “தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே நீட் தேர்விற்கான மையங்களை ஒதுக்க வேண்டும். தேர்வு மையங்களை ஒதுக்கும் பணியை சிபிஎஸ்இ நிர்வாகம் உடனடியாக செய்ய வேண்டும். மேலும், இந்த உத்தரவை சிபிஎஸ்இ, தனது இணையதளத்தில் பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும்” என உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக