வெள்ளி, 27 ஏப்ரல், 2018

பா.ஜ.க. எவ்வாறு வெற்றி பெறுகிறது

Prashant Jha (2017) How the B.J.P. Wins - Juggernaut, Delhi-/keetru.com;
தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) என்ற அரசியல் கூட்டணியில் தலைமை வகிக்கும்  பி.ஜே.பி. இன்று இந்தியாவை ஆளுகிறது. இக்கூட்டமைப்பு என்பது பெயரளவுக்குத்தான். உண்மையில் பி.ஜே.பி. என்ற கட்சியின் ஆட்சிதான் நடைபெறுகிறது. 2014-இல் நடைபெற்ற 16-ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் அது பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 1984-ஆவது ஆண்டிற்குப் பின் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக அது விளங்குகிறது. மொத்தம் உள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளில் 428 தொகுதிகளில் போட்டியிட்டு 282 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய தொகுதிகளில் அது தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டன. பி.ஜே.பி. போட்டியிட்ட தொகுதிகளில் மொத்தம் 31.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. மொழி அடிப்படையில் நோக்கினால் இந்தி மொழி பேசும் இமாச்சலப்பிரதேசம், உத்திரகாண்ட், உத்திரப்பிரதேசம், பீகார் (பீகாரி + இந்தி), ஜார்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டில்லி ஆகிய மாநிலங்களில் 225 தொகுதிகளில் போட்டியிட்டு 190 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. (இது ஒருவகையில், இந்தி பேசுவோருக்கும் இக்கட்சிக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்துகிறது எனலாம்)

இந்தி பேசப்படாத பகுதிகளில் 318 தொகுதிகளில் போட்டியிட்டு 92 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இப்பகுதிகளில் இது பெற்ற வாக்குகள் 22 விழுக்காடாகும்.
  • •··
இக்கட்சி பொதுத்தேர்தல்களில் எவ்வாறு வெற்றி பெறுகிறது என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. ‘எதிரிகளிடம் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற மாக்சிம் கார்க்கியின் கூற்றிற்கேற்ப, பி.ஜே.பியின் தேர்தல் வெற்றிக்குப் பின்னால் உள்ள அதன் செயல்பாட்டை ஆராய்வது அவசியமான
ஒன்று. இவ்வாறு ஆராய்வதென்பது அதன் கோட்பாடு களையோ, நடைமுறைகளையோ ஏற்றுக்கொள்வது ஆகாது.
நூலின் நோக்கம்
தேர்தலில் வெறும் வாக்குகளின் எண்ணிக்கையே ஒரு கட்சியின் இருப்பைத் தீர்மானிக்கிறது என்ற மோசமான நடைமுறைக் கருத்து இன்று மேலோங்கி வருகிறது. இத்தகைய சமூகச் சூழலில் சென்ற ஆண்டு (2017) வெளியான இந்நூல் பின்வரும் வினாக்களை எழுப்பி விடைகாண முயல்கிறது:
  • · பிரதமர் நரேந்திர மோடியின் வெகுசனக் கவர்ச்சியின் இரகசியம் எது?
  • · பி.ஜே.பி. அறிமுகப்படுத்திய பணமதிப்புக் குறைப்பு 2017-இல் நடந்த உத்திரப் பிரதேச மாநிலச் சட்டமன்ற தேர்தலில் எவ்விதப் பாதிப் பையும் அக்கட்சிக்கு ஏற்படுத்தாதது ஏன்?
  • · தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ்.சின் பங்களிப்பு என்ன?
  • · மதவாதத்தைத் தூண்டுவது வாக்குகளைப் பெற உதவுமா?
  • · பி.ஜே.பி. கட்சித்தலைவர் அமித்ஷாவின் தேர்தல் மேலாண்மை எத்தகையது?
  • · இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பி.ஜே.பி.யின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது?
இவ்வினாக்களுக்கு விடைதேடலே இந்நூலின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.
நூலாசிரியர்
இந்நூலின் ஆசிரியரான பிரசாந்த் ஜா ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ இதழில், இதழியலாளராகப் பணிபுரிந்து வருகிறார். நேபாள நாட்டின் தற்போதைய அரசியல் வரலாறு குறித்து ‘பேட்டில்ஸ் ஆஃப் தி நியூ ரிபப்ளிக்; ஏ காண்டம்பரரி ஹிஸ்டரி ஆஃப் நேபாள்’ என்ற தலைப்பில் நூலொன்று எழுதியுள்ளார்.
மேற்கூறிய வினாக்களுக்கு விடைதேடும் முயற்சியில், பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள், தேர்ந்த அரசியல் அவதானிப்பாளர்கள், வாக்காளர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடி யுள்ளார். பல்வேறு மாநிலங்களின் செய்தி அறிக்கை களையும் படித்தறிந்து பயன்படுத்தியுள்ளார்.
நரேந்திர மோடி
இன்று பி.ஜே.பி கட்சியிலும், ஆட்சிப்பொறுப்பிலும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சிலும் தலை வர்கள் பலர் இருந்தாலும், பொது மக்களின் ஈர்ப்பைப் பெற்ற ஒரே தலைவராக இந்தியப் பிரதமர் பதவி வகிக்கும் நரேந்திர மோடிதான் உள்ளார். அவரது முழுமையான பெயர்கூட உச்சரிக்கப்படுவதில்லை. அவரது பெயரின் பின்னொட்டான ‘மோடி’ என்ற பெயராலேயே அவர் அழைக்கப்படுகிறார். மோடி என்ற பின்னொட்டுடையோர் பலர் இருப்பினும் இன்று மோடி என்பது பிரதமர் நரேந்திரமோடியை மட்டுமே குறிக்கும் சொல்லாக விளங்குகிறது. அத்துடன் பா.ஜா.க.வின் தேர்தல் களத்தில் வாக்குகளை ஈர்க்கும் சொல்லாகவும் உள்ளது.
மோடி அலை
1980-களிலும் 1990-களின் தொடக்கத்திலும் பா.ஜ.க. அமைப்பில் மிகுந்த செல்வாக்குடைய தலை வராக விளங்கியவர் கே.என். கோவிந்தாச்சாரியார், இந்திய அரசியல் குறித்துப் பின்வருமாறு அவர் குறிப் பிட்டார்:
  • · அரசியல் என்பது அதிகாரத்துக்கு இணையானது
  • · அதிகாரமானது தேர்தலில் முகிழ்க்கிறது.
  • · தேர்தல்கள்; பிம்பங்களின் போர்க்களம்
  • · ஆகையால் அரசியலானது பிம்பங்களைச் சுற்றியே சுழல்கிறது.
இவ்வகையில் பா.ஜ.க. தன் அரசியல் பிம்பமாக நரேந்திர மோடியைக் கொண்டுள்ளது. மேலும் ஒரு தலைவருக்கு, சிக்கலான காலகட்டங்களில் துணைநிற்க நிறுவனக் கட்டமைப்பும், பொருளியல் பின்புலமும், தொழில்நுட்பமும் தேவையென்று கோவிந்தாச்சாரியார் குறிப்பிடுவார்.
அதற்கேற்ப ‘சங் பரிவாரம்’ என்ற அமைப்பு மோடிக்குத் துணைநிற்கிறது. ஏராளமான பொருள்வளம் உள்ளது. தொழில்நுட்பம் கொண்டோரும் அவர் களிடம் மிகுந்துள்ளனர். இத்தொழில்நுட்பமானது தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் எனப் பரந்த அளவில் வெளிப்படுகிறது.
இம்மூன்றின் துணையுடன் பிரதமர் நரேந்திர மோடியின் பிம்பம் கட்டமைக்கப்பட்டு பராமரிக்கப் படுகிறது. மோடியின் பிம்பமே மோடி அலையாக உருவெடுத்துள்ளது.
சங் அமைப்புகளுக்கு அவர் ஓர் ‘இந்துத்’ தலைவர். நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினருக்கு, முன்னேற்றத் தையும், வேலைவாய்ப்பையும் தருபவர். தேசியவாதி களுக்கு பாகிஸ்தானுக்குப் பாடம் கற்பிப்பவர். ஏழை களுக்கு பணக்காரர்களிடம் இருந்து எடுத்துத் தருபவர். அத்துடன் ஏழைகளின் அன்றாடத் தேவைகள் குறித்து சிந்திப்பவர். அவரது ‘மான்கிபாத்’ நிகழ்ச்சியைப் பல்லாயிரக்கணக்கான இந்தியக் குடிமக்கள் மாதம் தோறும் தொலைக்காட்சியில் காண்கிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டவராகவும், நல்லொழுக்க ஆசிரியராகவும், வாழ்க்கை வழிகாட்டியாகவும் காண்கிறார்கள். இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் (ஓ.பி.சி.) தங்களுள் ஒருவராகவே அவரைக் கருது கின்றனர். மேல்சாதிக்காரர்களோ, ‘வலிமையான இந்தியா’ என்ற தம் கனவை நிறைவேற்றுபவராகக் காண்கின்றனர்.
இவை அனைத்தும்தான் மோடியின் பிம்பமாக அமைந்து இந்தியாவின் பொதுத்தேர்தல்களில் மோடி அலையாக உருவெடுத்துள்ளன.
2017-இல் உத்திரப்பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத்தேர்தலில் முதல்அமைச்சர் வேட்பாளர் என்று யாரையும் அறிவிக்காமலேயே பா.ஜ.க. போட்டியிட்டது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
முதலாவது சமாஜ்வாதிக் கட்சியின் அபிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி போன்று உத்திரப்பிரதேசம் முழுவதும் செல்வாக்குள்ள ஒரு தலைவர் பா.ஜ.கவில் இல்லை.
இரண்டாவது, முதல்வர் பதவிக்கான வேட்பாளராக, ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவரை அறிவிக்கும் போது ஏனைய சாதியினரின் வெறுப்பை எதிர்கொள்ள நேரிடும்.
இச்சிக்கலை எதிர்கொள்ளும் வழிமுறையாக பிரதமர் மோடியை முன்னிறுத்தி தேர்தல் பரப்புரையை பா.ஜ.க. மேற்கொண்டது.
  • ···
2001-ஆம் ஆண்டின் இறுதியில் முதலமைச்சராக, குஜராத் சட்டமன்றத்தில் நுழைந்த மோடி 2014-இல் இந்தியப் பாராளுமன்றத்தில் பிரதமராக நுழைந்தார். ஒரு புதிய அரசியல் பிம்பமாகவும், இந்துக்களின் உள்ளங்களில் ஆட்சி செலுத்துபவராகவும் அடையாளம் காட்டப் பட்டார்.
இது குறித்து, அவரை ஆதரித்தோர் தெளிவான காரணம் எதையும் முன்வைக்கவில்லை என்று கூறும் நூலாசிரியர், அவர் மீதான அளவு மீறிய நம்பிக்கையும், தனிமனிதர் ஒருவர் மீதான கவர்ச்சியும் மேலோங்கி இருந்தன என்கிறார்.
இந்நம்பிக்கையானது மிகுந்த கவனத்துடன் கட்டமைக்கப்பட்ட ஒன்றாகும் என்றும் கூறுகிறார். ‘இந்துக்களின் இதயத்தில் ஆட்சி புரிபவர்’ என்ற பட்டமும் அவருக்கு இடப்பட்டது. ‘வளர்ச்சி’ என்ற சொல்லுடனும், ‘குஜராத் முன்மாதிரி’ என்ற சொல் லுடனும் இணைத்தே அவர் பேசப்படுகிறார். ‘ஏழை களின் தலைவர்’ என்றும் கூட அவரைக் குறிப்பிட லாயினர். அவர் பதவிக்கு வருமுன் இருந்த, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சூட்கேஸ் பண்பாட்டை ஒழித்தவர் என்ற புகழாரமும் உண்டு.
இந்தப் புகழாரங்கள்தான் 2017 உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அவரைத் தேர்தலின் நாயகனாக நிலைநிறுத்தின.
உ.பி. தேர்தல்
உத்திரப்பிரதேச பா.ஜ.க.வின் முக்கிய போட்டி யாளர்களாக ‘காங்கிரஸ்’, ‘சமாஜ்வாதி’, ‘பகுஜன்’ என்ற மூன்று கட்சிகள் விளங்கின. இம்மூன்று கட்சிகளையும் ‘கசாப்’ என்று பா.ஜ.க. குறிப்பிட்டது. ரிகிஷிகிஙி என்ற சொல்லில் இடம்பெறும் ரிகி என்ற இரண்டு எழுத்துக்கள் காங்கிரஸ் கட்சியையும், ஷி.கி. என்ற இரு எழுத்துக்கள் சமாஜ்வாதி கட்சியையும் குறித்தன. ஙி என்ற எழுத்து பகுஜன் கட்சியைக் குறித்தது.
முஸ்லீம்களை, சந்தேகத்துக்குரியவர்களாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரித்த பா.ஜ.க. இப்படிப் பட்டவர்களை ஆதரிப்பவர்களே ‘கசாப்கள்’ என்றது. இஸ்லாமியர்களிடம் இருந்தும் பயங்கரவாதத்தில் இருந்தும் உ.பி.யைக் காப்பாற்ற இந்துக்கள் விழித் தெழுந்து பி.ஜே.பிக்கு வாக்களிக்க வேண்டும் என்றது.
தேர்தல் பணிக்கான நிதி ஆதாரத்தை பா.ஜ.க. எவ்வாறு திரட்டியது என்பது குறித்து அக்கட்சியின் மாவட்ட அளவிலான தலைவர் ஒருவர் வாயிலாக அறிந்த செய்தியை நூலாசிரியர் குறிப்பிடுவது வருமாறு:
ஒரு கட்சியின் வேட்பாளர் ஒருவர் தன் தேர்தல் செலவுக்கான நிதி ஆதாரமின்றி இருந்தால் அவர் தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல. சமாஜ்வாதி, பகுஜன் கட்சி வேட்பாளர்கள் தம் தேர்தல் செலவு களைத் தாமே பார்த்துக் கொள்வர். ஆனால் பா.ஜ.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவினை கட்சியே பார்த்துக் கொள்ளும். கட்சியின் ஊழியர்களுக்கோ, சங் பரிவாரத்தின் பிரச்சாரகர்களுக்கோ அனுதாபிகளுக்கோ, விமானப் பயணம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கோ ஆகும் செலவை வேட்பாளர் செய்ய வேண்டியதில்லை. தேர்தல் பரப்புரை, விளம்பரம் தொடர்பான பொருட்கள் கட்சியிடம் இருந்தே வரும். இருப்பினும் தன் சொந்தப் பணத்தையும் அவர் செலவு செய்தாக வேண்டும்.
அரசு ஒப்பந்ததாரர்கள், கட்டிடம் கட்டுவோர் எதிர்காலத்தில் அரசு ஒப்பந்தங்கள், உரிமங்கள் பெற விழைவோர் நிதி வழங்குவர். பணமாக அன்றி பொருள் வடிவிலும் நன்கொடை கிட்டும். பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் எரிபொருள் வழங்குவர். போக்கு வரத்து நிறுவனம் நடத்துவோர் வாகனங்களைத் தந்துதவுவர். வணிகர்கள் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்துத் தருவர். மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர் களும் நிதிதிரட்டுதலில் முக்கியப் பங்கு வகித்தனர். பா.ஜ.க.வின் நிதி திரட்டும் முறை காங்கிரஸ் கட்சியின் நிதி திரட்டும் முறைக்கு மாறானது என்ற செய்தியையும் இந்த இடத்தில் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
50 கோடி ரூபாய் தேவையென்று காங்கிரஸ் கட்சியின் தலைமை கருதினால் இச்செய்தியை முக்கிய பொறுப்பாளரிடம் கூறுவர். அவர் மூன்று அல்லது நான்கு முதல் அமைச்சர்களிடம் ஆளுக்கு 100 கோடி கேட்பார். அவர்கள் வணிகர்கள் ஒப்பந்ததாரர்கள் அதிகாரவர்க்கத்தினர் ஆகியோரிடம் நிதி ஏற்பாடு செய்யும்படிக் கூறுவர். மொத்தத்தில் 300 கோடி அளவு நன்கொடை பெறப்படும். இடையில் உள்ள பலர் ஆதாயம் பெற்றபின் தலைமை கேட்ட 50 கோடி சென்றடையும். நேரடியான தொடர்பில் இது நடை பெறாது என்பது பா.ஜ.க.வின் கருத்தாகும் என்கிறார் நூலாசிரியர்.
உ.பி. தேர்தலும் மோடியும்
பணமதிப்புக் குறைப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே உ.பியில் தேர்தல் நடந்தது. இத்தேர்தலை ஒட்டி முத்தாபாத் உட்பட ஆறு இடங்களில் நிகழ்ந்த பேரணிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இவ் உரைகளில் ‘வறுமை’, ‘ஏழை’ என்ற சொற்களைப் பலமுறை பயன்படுத்தியுள்ளார். பெருநகரங்களில் திரளாகக் கூடியிருந்த மக்களை ஈர்க்கும் வகையில் அவர் உரையாற்றியதை நூலாசிரியர் விவரித்துள்ளார்.
தன் உரையின் தொடக்கத்தில் உத்திரப்பிரதேச நாடாளுமன்றத் தொகுதியில் தான் ஏன் போட்டி யிட்டேன் என்பதை அவர் விளக்கினார். இந்தியாவில் வறுமையை ஒழிக்க விரும்பியதாகவும், அதன் முதல்படியாக உத்திரப்பிரதேசத்தின் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அதன்பின் தன்னுடைய வழக்கமான பாணியில் கூட்டத்தைத் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டு “உங்கள் முஷ்டியை உயர்த்தி நேர்மையாகவும், உளப்பூர்வ மாகவும் தான் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் என வேண்டினார். இவ்வேண்டுதலையடுத்து பின்வரும் வினாக்கள் அவரது உரையில் வெளிப்பட்டன.
  • · ஊழல், நாட்டை நாசமாக்கிவிட்டதா இல்லையா?
  • · இது கொள்ளைக்கு வழிவகுக்கவில்லையா?
  • · ஏழைகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தி விட்டதல்லவா?
  • · ஏழைகளின் உரிமைகளைப் பறித்துவிட்ட தல்லவா?
மோடியின் இக்கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று மக்கள் திரள் கூவியது. மோடியின் கேள்விகள் மேலும் தொடர்ந்தன.
  • · இப்போது சொல்லுங்கள், ஊழல் இருக்க வேண்டுமா? வெளியேற வேண்டுமா?
‘போகவேண்டும்’ என்று மக்கள்திரள் விடையளித்தது.
  • · அப்படியானால் சொல்லுங்கள். அது தானாக வெளியேறுமா? அல்லது மோடி நீங்கள் வந்து விட்டீர்கள். நான் பயந்துவிட்டேன். நான் போகிறேன் என்று சொல்லுமா?
மக்கள்திரள் ‘இல்லை’ என்கிறது.
  • · அப்படி என்றால் ஊழலை விரட்ட கம்பெடுக்க வேண்டுமா இல்லையா?
  • · சட்டத்தைப் பயன்படுத்த வேண்டுமா இல்லையா?
  • · ஊழல்வாதிகளைத் தோற்கடிக்க வேண்டுமா இல்லையா?
மக்கள் : ஆமாம்
  • · இந்த வேலையை நாம் மேற்கொள்ள வேண்டுமா இல்லையா?
மக்கள் : ஆமாம்
  • · யாராவது இவ்வேலையைச் செய்தால் அது குற்றமா? அல்லது அவர் குற்றவாளியா?
மக்கள் : இல்லை.
  • · எனக்கு வியப்பாய் உள்ளது. என்னுடைய சொந்த நாட்டிலேயே என்னைக் குற்றவாளி என்கிறார்கள்.
  • · ஊழலை எதிர்ப்பது என்னுடைய குற்றமா?
  • · ஏழைகளுக்காக நான் பாடுபடுவது குற்றமா?
மக்கள் : இல்லை
இதையடுத்து மற்றொரு அதிரடித்தனமான உரைக்கு மோடி போகிறார்.
  • · உங்களுக்காக ஒரு போரை நடத்துகிறேன்.
  • · இவர்கள் (எதிர்க்கட்சிகள்) என்னை என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்.
ஓர் இடைவெளிக்குப் பின் அவர் பின்வருமாறு பதில் கூறுகிறார்.
  • · நான் ஒரு பக்கீர் என்  மூட்டையைக் கட்டிக்கொண்டு போய்விடுவேன்.
இதையடுத்து மக்கள் திரள் ஆரவாரம் செய்து ‘மோடி’ ‘மோடி’ என்று கூக்குரலிடுகிறது.
  • · இந்தப் பக்கிரித் தன்மைதான் ஏழைகளுக் காகப் போராடும் வலிமையைத் தந்துள்ளது. ஆனால் இத்துடன் இது முடிந்துவிடப் போவதில்லை.
பின்னர் ‘ஜன்தன்’ கணக்கை வங்கிகளில் தொடங்கும் படி தான் பரப்புரை செய்தபோது மக்கள் என்னை ஏளனம் செய்தார்கள் என்று கூறிவிட்டு:
ஆனால் இன்று பணக்காரர்கள் பழைய உறவு களைக் கூறிக்கொண்டு ஏழைகளின் வீடு தேடி வருகிறார்கள். ஏழைகளின் வங்கிக் கணக்கில் இரண்டு அல்லது மூன்று இலட்சம் ரூபாய்களை சேமிப்புத் தொகையாகச் செலுத்த அனுமதி கேட்கிறார்கள். ஏழைகளின் காலடியில் பணக்காரர்கள் மண்டியிடுவதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இன்று ஏழைகளின் வீட்டு வாசலில் ஊழல்காரர்கள் வரிசையில் நிற்கிறார்கள். (இதையடுத்து வெளிப்படையான வேண்டுகோளை மக்கள் முன்வைக்கிறார்) ‘யார் உங்களுக்குப் பணம் கொடுத்திருந்தாலும் ஒரு ரூபாய் கூடத் திருப்பித் தரவேண்டாம். நாள்தோறும் உங்கள் வீட்டிற்கு அவர்கள் வருவதை நீங்கள் பார்ப்பீர்கள்? நீங்கள் எதுவும் சொல்லாதீர்கள். கோபத்துடன் உங்களிடம் கத்த வேண்டாம் என்று கூறுங்கள். உங்களைப் பயமுறுத்தினால் மோடிக்கு எழுதி விடுவதாகக் கூறுங்கள். உங்களிடம் அவர்கள் பணம் கொடுத்ததற்கு சான்று எதுவும் உள்ளதா? என்று கேளுங்கள். உங்களிடம் வருவதை அவர்கள் நிறுத்தி விடுவார்கள். பணத்தை நீங்கள் வைத்திருங்கள். நான் ஒரு வழி காண்பேன். இதற்கான வழிகளை நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். சட்டவிரோதமாகப் பணத்தை உங்கள் கணக்கில் செலுத்தியவர்கள் சிறை செல்வார்கள். அந்தப்பணம் ஏழைகளிடம் தங்கிவிடும். (பின்னர் குறும்புச் சிரிப்புடன்) ‘பணம்’, ‘பணம்’ என்று நாள்முழுவதும் கூறுவதைப் பணக்காரர்கள் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். தற்போது, ‘மோடி’, ‘மோடி’ என்றே அவர்கள் கூறுகிறார்கள். நோக்கம் (பணமதிப்புக் குறைப்பு) நல்லதென்றும் முயற்சி நேர்மையான தென்றும் இந்த நாட்டின் மக்கள் அறியும்போது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. (பக்கம். 23-24)
சில கிறித்தவ சபையினர் நடத்தும் நற்செய்திக் கூட்டத்தைப் போன்று பார்வையாளர்களுடன் தம்மை இணைத்துக்கொள்ளும் மோடியின் உரையைக் குறிப்பிடும் நூலாசிரியர் இவ்வுரையை மையமாகக் கொண்டு பின்வரும் கருத்துக்களை முன்வைக்கிறார்.
  • · பணமதிப்புக் குறைப்புடன் ஊழல்முடிந்து விட்டதா?
  • · கருப்புப் பணத்தில் ஒரு சிறுபகுதிதானே ரொக்கமாக உள்ளது?
  • · இச்செயல், சிக்கலான கொள்கை முடிவை தவறான முறையில் வெளிப்படுத்துவதாகாதா?
  • · மோடியை, கிரிமினல் என்று யார் கருது கிறார்கள்?
  • · தாமாகவே ஒப்பந்தம் ஒன்றை மற்றவர் களுடன் மேற்கொண்டவர்களை அதை மீறி, பணத்தைத் திருப்பித் தரவேண்டாம் என்று கூறுவது சரியா?
உ.பியில். அவர் கலந்துகொண்ட மற்றொரு தேர்தல் பரப்புரையில் மோடி ஆற்றிய உரையின் ஒரு பகுதியை நூலாசிரியர் மேற்கோளாகக் குறிப்பிட்டுள்ளது வருமாறு:
எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும். உஜ்வாலா திட்டத்தின்படி நாங்கள் சமையல் எரிவாயு உருளை வழங்குகிறோம். மோடி வாரணாசி நாடாளு மன்ற உறுப்பினர் என்பதற்காக வாரணாசியில் வாழ் வோருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று நாங்கள் கூறவில்லை. உ.பி.யில் ஒவ்வொரு மூலையிலும் வாழ் வோருக்கு சம அளவில் வழங்கப்படுகிறது. இந்துக் களுக்குக் கிடையாது என்று கூறவில்லை. வரிசையில் நிற்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது. இந்த சாதிக்குத்தான் உண்டு, இந்த சாதிக்குக் கிடையாது என்று கூறவில்லை.
பாகுபாடு காட்டுவதுதான் அநீதியின் வேராகும். உ.பியின். மிகப்பெரிய பிரச்சினை பாகுபாடு காட்டுவது தான். நீங்களே கூறுங்கள் பாகுபாடு காட்டுதல் உள்ளதா இல்லையா?
(கூட்டம், ‘ஆம்’ என்று கூவி ஆரவாரிக்கிறது) மோடி தொடர்கிறார்.
உ.பியில். தலித் ஒருவரிடம் கேட்டால் என்னுடைய பங்கை நான் பெறவில்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) எடுத்துக் கொண்டார்கள் என்பார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரோ நாங்கள் எங்கள் பங்கைப் பெறவில்லை. யாதவர்கள் எடுத்துக்கொண்டார்கள் என்பார்கள். யாதவர்களிடம் கேட்டால் சில குடும்பத்தினர் மட்டுமே எடுத்துக்கொண்டார்கள் எஞ்சியது முஸ்லீம்களிடம் போய்விட்டது. எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பார்கள்.
இப்பாகுபாடு இனி நடவாது ஒவ்வொருவரும் அவர்களுக்கு உரியதைப் பெறுவார்கள்.
எனவேதான், ஒரு கிராமத்தில் கல்லறைத் தோட்டமோ கபுர்ஸதானோ (இஸ்லாமியரை அடக்கம் செய்யுமிடம்) உருவாக்கப்பட்டால் சுடுகாடும் உருவாக்கப்படும். ரம்ஜானின் போது மின்சாரம் வழங்கப்பட்டால் தீபாவளியின் போதும் அது வழங்கப்படும். ஹோலிப் பண்டிகையின் போது மின்சாரம் வழங்கப்பட்டால் அது ஈத் பண்டிகையின் போதும் வழங்கப்படும். எந்தப் பாகுபாடும் இராது. பாகுபாடில்லாத நிர்வாகத்தை வழங்குவதே அரசின் இலட்சியம். மதத்தின் அடிப்படையிலோ, சாதியின் அடிப்படையிலோ உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பதன் அடிப்படையிலோ அநீதி எதுவும் இழைக்கப்படாது.
மோடியின்  இவ்வுரையானது சாதி சமயம் சாராத ஒன்றாகும் என்று கூறும் நூலாசிரியர் தன் குடிமக்கள் அனைவரையும் சமத்துவமாக நடத்தும் அரசியல் அமைப்புக் கடமை சார்ந்தது என்கிறார். அதே நேரத்தில் 2002 குஜராத் கலவரத்தின்போது இக்கடமையை அவர் செய்யவில்லை என்ற விமர்சனம் உள்ளதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
மதவாதம்
அமித்ஷா மோடியைவிட வெளிப்படையாக இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வை, தன் தேர்தல் பரப்புரையில் வெளிப்படுத்தியுள்ளதை அவரது உரைகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதை வெள்ளையர்களே முடிவு செய்தார்கள். கருப்பர்களும், ஹிஸ்பானியர்களும், இஸ்லாமியர்களும் முடிவு செய்யவில்லை. அதுபோல் உ.பி.யிலும் இங்கு யார் ஆள்வது என்பதை இந்துக்களே முடிவு செய் வார்கள். இஸ்லாமியர் முடிவு செய்யப் போவதில்லை என்று தேர்தலின்போது குறிப்பிடப்பட்டது.
2012-ல் நிகழ்ந்த சட்டமன்றத் தேர்தலின் போது போட்டியிட்டு வென்ற இஸ்லாமிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 68 ஆகும். 2017-இல் 25 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் இஸ்லாமியர். இவர்களுள் ஒருவர் கூட ஆளும்கட்சியின் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் இல்லை.
உ.பி. தேர்தலில் இந்து முஸ்லீம் பிரச்சினை வெளிப்படையாக முன்வைக்கப்பட்டது போல் பீகார் தேர்தலில் முன்வைக்கப்படவில்லை. இந்து ஙீ முஸ்லீம் என்ற முரணைவிட முன்னேறிய சாதி ஙீ பிற்படுத்தப் பட்ட சாதி என்பதே மேலோங்கியிருந்தது என்றாலும், தேர்தல் பரப்புரையில் மத அடிப்படைவாதக் கருத்துக் களை பா.ஜ.க. முன்வைக்கத்தான் செய்தது. பீகாரில் பா.ஜ.க. தோல்வி அடைந்தால் தீபாவளியை பாகிஸ்தானில் கொண்டாட வேண்டும் என்று கூறினர். பா.ஜ.க.வின் தோல்வி பாகிஸ்தானில் கொண்டாடப் படும் என்பதே இதன் பொருள்.
பீகாரில் 1989-ஆம் ஆண்டு பகல்பூரில் நடந்த மதக்கலவரத்துக்குப்பின் பெரிய அளவிலான மதக் கலவரம் எதுவும் நிகழவில்லை. ஆனால் உ.பி.யில் அயோத்தி, காசி மதுரா என்ற நகரங்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி மத உணர்வைத் தூண்டும் தன்மையில் பயன்படும் இடங்களாகவும் மாற்றப்பட்டு உள்ளன.
தேர்தல் அணிசேர்க்கை
உ.பி.யில் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாதி என ஒவ்வொரு கட்சியும் தனக்கென வாக்களிக்கும் சமூகப் பிரிவுகளைக் கொண்டிருந்தன. இவற்றுள் மாற்றுக் கட்சி சார்ந்த சமூகப் பிரிவையும் எதிலும் சாராத சமூகப் பிரிவையும் தன்பக்கம் இழுப்பதில் பா.ஜ.க. தனிக் கவனம் செலுத்தியது.
உயர்சாதியினரின் கட்சி என்ற அடையாளம் பா.ஜ.க.வுக்கு இருந்தது. மண்டல் அறிக்கை நடை முறைப்படுத்தப்பட்டபின் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஓரணியாகத் திரளத் தொடங்கினர். விவசாயப் பின்னணி கொண்ட இம்மக்கள், எண்ணிக்கையில் மிகுந்தவர்களாக இருந்தனர். இவர்களை ஈர்க்கும் நடைமுறையை பா.ஜ.க. மேற்கொள்ளத் தொடங்கியது. உயர்சாதிப்பிரிவிடம் இருந்து ஓரளவுக்கு விலகி விட்டனர். இது ஒரு நடைமுறைத் தந்திரமே. மகாராஷ்டிராவிலும் ஹரியானாவிலும் அவர்கள் கையாளத் தொடங்கிய இம்முறையில் இதர பிற்படுத்தப் பட்ட சாதியினரின் வாக்குகளை குறிப்பிடத்தக்க விழுக்காட்டில் பெற்றனர்.
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் இட ஒதுக்கீடை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். லாலுப்பிரசாத் யாதவ் இக்கூற்றையும், கோல்வால்கார் எழுத்துக்களின் தொகுப்பில் இடம் பெற்றிருந்த கருத்துக்களையும் இணைத்து, இட ஒதுக்கீடுக்கு ஆர்.எஸ்.எஸ். எப்போதும் எதிரானது என்ற கருத்தைப் பரப்பினார். 2014 மக்களவைத் தேர்தலைப் போல் மோடி என்ற பெயருக்காக அனைத்து சாதியினரும் வாக்களிப்பர் என்ற பா.ஜ.க.வின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.
தலித்துக்களின் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியில் பல்வேறு தலித் உட்பிரிவுகள் இணைந் திருந்தன. இவற்றுள் வால்மீகி என்ற பிரிவு எண்ணிக் கையில் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் ‘ஜாதவாஸ்’ என்ற பிரிவினரே தலித் தொகுதிகளில் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டனர். வால்மீகி பிரிவினரின் மனக்குமுறலை பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டது. தலித்துக்களுக்கான தனித் தொகுதியில் பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.
கீழ்நிலை மத்தியதர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகள் 5-4-3-2-1 என்று கணிதச் சமன்பாடு போல் குறிப்பிடப் பட்டது. 5 இலக்க ஊதியம், 4 சக்கர வாகனம், 3 படுக்கையறை கொண்ட பிளாட்கள், 2 குழந்தைகள், 1 மனைவி என்று இது விளக்கப்பட்டது. இது சாதிகளைக் கடந்த விருப்பமாக இருந்தது. இது நடைமுறைப் படுத்தக் கூடியதே என்ற நம்பிக்கை மோடியின் பெயரால் பரப்பப்பட்டது.
ஆராயப்பட வேண்டியவை
தேர்தல்களில் பா.ஜ.க. எவ்வாறு வெற்றி பெறுகிறது என்பதையே இந்நூல் சித்தரிக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற பின் என்ன செய்கிறது என்பதை ஆராயவில்லை. இதனால் பா.ஜ.க. ஆட்சியில் நிகழும் பிரச்சினைக்குரிய நடவடிக்கைகளையோ, நிகழ்ச்சிகளையோ ஆராய்வதில் இருந்து இந்நூல் விலகியே நிற்கிறது என்று நூலின் தொடக்கத்திலேயே நூலாசிரியர் தம் நோக்கத்தை வரையறுத்துக் கொண்டுள்ளார். என்றாலும் மேலெழுந்தவாறு சில கருத்துக்களை நூலின் இறுதியில் (பக்கம்.224-228) அவர் விவரித்துள்ளார். இவை கவனத்துக்குரியன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக