புதன், 11 ஏப்ரல், 2018

இனி காவிரியே இல்லாமல் போகும்! - திடுக்கிட வைக்கும் திட்டங்கள்

vikatan :தி.முருகன்  :‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ எனத் தமிழகமே திரண்டு ஒற்றைக் குரலில் வலியுறுத்துகிறது. தொடர்ச்சியாக இழைக்கப்பட்ட அநீதிகளால், காவிரியில் தமிழகத்தின் பங்கு 205 டி.எம்.சி என்ற அளவிலிருந்து இப்போது 177.25 டி.எம்.சி-யாகக் குறைந்திருக்கிறது. அந்தத் தண்ணீராவது கிடைக்கவேண்டுமென்றால், காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும். இதற்காகத்தான், இத்தனை போராட்டங்களும். ஆனால், ‘‘எதிர்காலத்தில் காவிரி என ஒரு நதியே இல்லாமல் போய்விடும். அந்த நதியை மரணமடையச் செய்வதற்காகப் பல திட்டங்கள் அரங்கேறுகின்றன. காவிரியைக் காப்பாற்ற கர்நாடக மக்களும் தமிழக மக்களும் இணைய வேண்டும்’’ என்ற அபயக்குரல், காவிரி உற்பத்தியாகும் குடகு மலையிலிருந்து கேட்கிறது.
இமயமலையில் பனி உருகுவதால் பெருக்கெடுக்கும் கங்கைபோலக் காவிரி உற்பத்தியாவதில்லை. குடகுக் காடுகளில் தென்மேற்குப் பருவமழை முறையாகப் பெய்தால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வரும். ‘கர்நாடகாவின் காஷ்மீர்’ என அழைக்கப்படும் குடகுப் பகுதியின் பிரம்மகிரி மலையிலிருந்து காவிரி ஊற்றெடுக்கிறது. தமிழகத்திலும் கர்நாடகாவிலும் சுமார் எட்டுக் கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் காவிரி, ஒரு சிறிய ஊற்றாக இங்கிருந்து பொங்கி, போகப் போக, பல துணைநதிகளை இணைத்துக்கொண்டு பிரமாண்ட வடிவம் பெறுகிறது. காவிரி நதி உயிரோட்டமாக இருக்க வேண்டுமானால், குடகுப் பகுதியின் பசுமைக்காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், இங்கு தொடர்ச்சியாகக் காடுகள் அழிக்கப்பட்டு காபித் தோட்டங்கள் உருவாகின. இந்தியாவிலேயே காபித் தோட்டங்கள் அதிகம் இருப்பது குடகு மலைகளில்தான். டாடா நிறுவனத்துக்கு மட்டுமே சுமார் 40 ஆயிரம் ஏக்கர் காபி தோட்டம் உள்ளது. இந்த காபி தோட்டங்கள் போக மிச்சமிருக்கும் காடுகளை அழிப்பதற்கு அடுத்தடுத்து வளர்ச்சித் திட்டங்களை இங்கே மத்திய அரசு செயல்படுத்துவதுதான் வேதனை.

எல்லோரும் ‘எங்கள் ஊருக்குத் தரமான நெடுஞ்சாலை வேண்டும், எங்கள் பகுதிக்கு ரயில் வர வேண்டும்’ எனப் போராடுவார்கள். ஆனால், குடகு மக்கள், ‘எங்களுக்கு அகலமான தேசிய நெடுஞ்சாலைகளும் வேண்டாம். ரயில் பாதையும் வேண்டாம்’ எனப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் தேர்தல் நடப்பதைக் கருத்தில் கொண்டு, நான்கு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும், இரண்டு ரயில் பாதைகளையும் இந்தப் பகுதிக்காக அறிவித்துள்ளது மத்திய அரசு. இவற்றைத்தான், குடகு மக்கள் எதிர்க்கிறார்கள்.

2014-ம் ஆண்டுதான், குடகு வழியாக மைசூரி லிருந்து கோழிக்கோட்டுக்கு 400 கிலோவாட் உயர் அழுத்த மின்பாதை அமைக்கப்பட்டது. அடர்ந்த காடுகளின் வழியே இந்த மின்பாதையை அமைப்பதற்குச் சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த எதிர்ப்பையும் மீறி, கேரளாவின் நலனுக்காக என அமைக்கப்பட்ட இந்த மின்பாதை, குடகுப் பகுதியில் சுமார் 54 ஆயிரம் மரங்களைக் காவு வாங்கியது. ‘‘இதன் விளைவாக இங்கு மழை குறைந்துவிட்டது. காவிரியில் தண்ணீரும் போதுமான அளவு வருவதில்லை. காவிரியின் துணைநதியான அர்க்காவதி வற்றிப்போய் இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. இந்த ஆண்டு, முதல்முறையாக அது வற்றிவிட்டது. ‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில் சாலைகளையும் ரயில் பாதைகளையும் அமைத்து, எங்கள் காடுகளை அழிக்கப் பார்க்கிறார்கள். யாருக்கு வேண்டும் இந்த வளர்ச்சி? எதிர்காலத்தில் இந்தத் திட்டங்கள் வந்தால், காவிரி ஒட்டுமொத்தமாக இல்லாமல் போய்விடும்’’ என எச்சரிக்கிறார், கூர்க் வைல்டுலைஃப் சொசைட்டியின் தலைவர் கர்னல் முத்தண்ணா.
மைசூரிலிருந்து குஷால் நகர் வழியாக மடிக்கேரிக்கு ஒரு ரயில் பாதை, மைசூரிலிருந்து குடகு வழியாகக் கேரளாவின் தலைச்சேரிக்கு ஒரு ரயில் பாதை என இரண்டு திட்டங்கள் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. மைசூரிலிருந்து மடிக்கேரி வழியாக மானந்தவாடி வரை ஒன்று, பெங்களூரிலிருந்து பன்ட்வாலுக்கு ஒன்று, பன்னத் தூரிலிருந்து மடிக்கேரிக்கு ஒன்று, மட்டானூரிலிருந்து ஹன்சூருக்கு ஒன்று என நான்கு நெடுஞ்சாலைகளை நான்குவழிப் பாதைகளாக்கி தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவைதவிர, ஏற்கெனவே இருக்கும் சாலைகளையும் நான்கு வழிச்சாலைகளாக மாற்றுவதாகத் திட்டம். மட்டானூரில் புதிதாக வரும் விமான நிலையம், மங்களூரு விமான நிலையம் ஆகியவற்றை பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களுடன் இணைக்கும்விதமாக இந்தத் திட்டங்கள் வருகின்றன.

‘‘ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிவிட்டே இந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடியும். தொலைநோக்குப் பார்வை இல்லாமல் இயற்கையை அழிக்கப்பார்க்கிறார்கள். காவிரியின் தாய்மடியை மொட்டையாக்கிவிட்டால் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை யாரும் உணரவில்லை. காவிரி என்பது மற்றவர்களுக்கு வெறும் தண்ணீராகத் தெரியலாம்; லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு அது உயிர் ரத்தம். தென்னிந்தியாவையே இது பஞ்சத்தில் தள்ளிவிடும்’’ என்கிறார் முத்தண்ணா.

‘காவிரி நதியைக் காப்பாற்றுவோம்’ என்ற முழக்கத்துடன் போராடிவருகிறார்கள் குடகு மக்கள். இவர்களின் போராட்டத்துக்கு மதிப்பு கொடுத்து, மைசூரு - தலைச்சேரி ரயில் பாதைத் திட்டம் மட்டும் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.

கடந்த 10 ஆண்டுகளில், நான்கு ஆண்டுகள் காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு முறையாக வந்துசேரவில்லை. இதுவே நிரந்தரம் ஆகிவிடாமல் காப்பாற்றும் பொறுப்பு நமக்கும் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக