ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

பழம் பெரும் இயக்குனர் சி .வி ராஜேந்திரன் காலமானார் .. ஸ்ரீதரின் தம்பி ..


tamilthehindu :பிரபல பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் ஞாயிறன்று காலமானார். இவருக்கு வயது 81.
உடல் நலக்குறைவு காரணமாக அவர் சென்னையில் இன்று காலமானார். பல மறக்க முடியாத திரைக்காவியங்களை அளித்தவர் சி.வி.ராஜேந்திரன். கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, ராஜா ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர்.
மதுராந்தகம் அருகே சித்தமுர் இவரது சொந்த ஊர். இவர் மனைவி பெயர் ஜானகி. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் அமெரிக்காவில் உள்ளதால் இறுதிச் சடங்கு இவர் வந்தவுடன் நடைபெறும் என்று தெரிகிறது.
சி.வி.ராஜேந்திரன் படங்களில் வசனம் எழுதிய சித்ராலயா கோபு கூறும்போது, “மாரடைப்பு நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், 4 நாட்களுக்கு முன்புதான் மருத்துவமனையில் சென்று பார்த்தேன். என்னுடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று அனைவரிடமும் கூறினார்.
இயக்குநர் ஸ்ரீதரிடம் அசிஸ்டண்டாகப் பணியாற்றிய சி.வி.ராஜேந்திரன் மீண்ட சொர்க்கம் படத்தில் பணியாற்றினார். மீண்ட சொர்க்கம் படத்தை தயாரித்தவர் மறைந்த நகைச்சுவை மேதை என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி மதுரம் ஆவார்.

ஸ்ரீதர் இயக்கி மெகா ஹிட்டான காதலிக்க நேரமில்லை படத்தில் ராஜேந்திரன் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றினார்.
சித்ராலயா கோபு மேலும் தொடர்ந்த போது, “இயக்குநர் ஸ்ரீதரின் குழுவில் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர் ராஜேந்திரன் பிறகு அவரே இயக்குநராகி மலையாளம், கன்னடம் ஆகிய மொழித்திரைப்படங்கள் செய்திருக்கிறார். எங்கள் குழுவில் ஏறக்குறைய இப்போது ஒருவருமேயில்லை, இப்போது இவரது மறைவால் நானும் அனாதையாக்கப்பட்டேன்” என்றார்.
சி.வி.ராஜேந்திரன் இயக்குநராக அனுபவம் புதுமையில் களமிறங்கினார். அதன் பிறகு நகைச்சுவை திரைப்படம் கலாட்டா கல்யாணம். இந்தப் படம் மூலம்தான் சிவாஜி, ஜெயலலிதா முதன் முதலில் ஜோடியாக நடித்தனர். சிறிய பட்ஜெட்டில் இவர் இயக்கி, ஜெய்சங்கர் நடித்த ‘நில் கவனி காதலி’ படமும் ஹிட் திரைப்படமே.
சிவாஜி கணேசன் வாரிசு பிரபுவை சங்கிலி என்ற படத்தில் அறிமுகப்படுத்தியவரும் சிவி.ராஜேந்திரனே. சிவாஜி கணேசனை ஹீரோவாக வைத்தே 20 படங்கள் செய்துள்ளார்.
சி.வி.ராஜேந்திரன் திரைப்படத்தில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர், அதனால்தான் சுமதி என் சுந்தரி, ராஜா, பொன்னூஞ்சல் உள்ளிட்ட படங்களில் மறக்க முடியாத பல பாடல்கள் தமிழ் ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது.
இளையராஜா இசையில் உல்லாசப்பறவைகள் இவர் கைவண்ணத்தில் உருவான படமே. இதில் தெய்வீக ராகம், நான் உந்தன் தாயாக வேண்டும், ஜெர்மனியின் செந்தேன் மழையே, அழகு ஆயிரம் ஆகிய அனைத்துப் பாடல்களும் மறக்க முடியாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக