வெள்ளி, 27 ஏப்ரல், 2018

13 பேர் உயிரிழந்த நச்சு சாராய வழக்கு: 5 பேருக்குத் தூக்கு!

மின்னம்பலம் :திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரில் 2000ஆம் ஆண்டு விஷம் கலந்த சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கில், சாராய வியாபாரி உட்பட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 27) தீர்ப்பளித்துள்ளது.
2000ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரில் கள்ளச் சாராயம் அருந்திய 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இறந்தவர்களின் உடலைப் பரிசோதனை செய்து அதன் அறிக்கையைக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் உயிரிழந்த 13 பேரின் பிரதேப் பரிசோதனை அறிக்கையில், அவர்கள் அருந்திய கள்ளச் சாராயத்தில் விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது. அதன் பின்னர், சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், போளூரில் காமாட்சி என்பவர் 2000 ஆம் ஆண்டில் கள்ளச் சாராயம் விற்றுவந்துள்ளார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தொழில் போட்டி ஏற்பட்டது. இந்தத் தொழில் போட்டியின் காரணமாக காமாட்சி குழு விற்பனை செய்த கள்ளச் சாராயத்தில் மற்றொரு கள்ளச் சாராய குழுவைச் சேர்ந்த ஜெயபால், முருகன், காளியப்பன், தில்லை கண்ணன், குமார் ஆகிய ஐந்து பேரும் விஷம் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 5 பேரும் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 17 ஆண்டுகளாக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையிலே இருந்து வந்தது. இன்று திருவண்ணாமலையின் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி விசாரணை நடத்தினார். இதில், 13 பேர் உயிரிழந்ததற்குக் காரணமான 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தும், ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி மகிழேந்தி தீர்ப்பளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக