ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு .. காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்

தினபூமி :புதுடெல்லி: காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீ்ம் கோர்ட் அளித்த தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறை குழு அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் சார்பில் நேற்று  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
காவிரி பிரச்சினை தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் இதுவரையில் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசால் அமைக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட் இது தொடர்பாக விதித்த கெடுவும் முடிவடைந்து விட்டது. ஆனால் மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கைக்கு செவிசாய்த்ததாக தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 17 நாட்கள் அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கினர். ஆனாலும் எந்த பலனும் கிட்டவில்லை.

சுப்ரீம் கோர்ட் அளித்த 6 வார கெடுவுக்கு முன்னதாக, தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரி பிரதமர் மோடியை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து, மார்ச்.15-ல் நடந்த தமிழக சட்டசபையின்  சிறப்பு கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து சிறப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அது அனுப்பப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மார்ச் 29-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக வரும் திங்கட்கிழமை அன்று விசாரணை நடத்த வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது. மேலும், மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே சின்கா மற்றும் நீர்வள ஆதாரத்துறை செயலாளர் யு.பி சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின்படி 6 வார காலத்திற்குள் செயல்பாட்டு திட்டத்தை அமல்படுத்த வில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித் துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக