ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதங்கள் அவகாசம் தேவை.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திடீர் மனு!

tamiloneindia :டெல்லி : காவிரி இறுதித் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி நீரை 4 மாநிலங்கள் பங்கிட்டு கொள்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பில் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் ஸ்கீம் என்றே நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஸ்கீம் என்றால் காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின்படி அது காவிரி மேலாண்மை வாரியம் என்று தமிழக அரசு சொல்லி வருகிறது.
ஆனால் மத்திய அரசும், கர்நாடக அரசும் ஸ்கீம் என்றால் ஒரு அமைப்பு தான் என்று சொல்லி வருகின்றன. உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்பதால் மத்திய அரசு மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் தங்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுவதற்கு முன்னர் மத்திய அரசு முந்திக்கொண்டு ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக