வியாழன், 26 ஏப்ரல், 2018

மெரினா கடற்கரையில் 29-ந் தேதி அறவழி போராட்டம்- வேல்முருகன் பேட்டி

மாலைமலர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மெரினா
கடற்கரையில் 29-ந் தேதி அறவழி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். #velmurugan #cauveryissue #ChennaiMarina நெய்வேலி: தமிழக வாழ்வுரிமை கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டம் நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சி தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வை அனுமதிக்க கூடாது.
தமிழக கவர்னர் அரசியலமைப்பு சட்டப்படி நடந்து கொள்ளாமல், வரம்பு மீறி நடந்து கொள்ளுகிறார். இவ்வாறு வரம்பு மீறி நடந்து பாலியல் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகி இருக்கிறார். கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், இல்லையெனில் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.


சுற்றுச்சூழலை கெடுக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க போராடியதற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அவர்கள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் உணர்வுகளை புறக்கணித்து வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.
மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைமையில் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந்தேதி சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே அறவழி போராட்டம் நடத்தப்படும். இதில் தமிழக மக்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக