வியாழன், 26 ஏப்ரல், 2018

அப்போலோ :ஜெயலலிதாவின் ரத்த, திசு மாதிரிகள் இல்லை.. ஜெயா மகளை நிருபிக்க திசுக்கள் தேவை..

BBC :ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளோ, திசு மாதிரிகளோ தங்களிடம்
இல்லை என அவருக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என அறிவிக்கக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ''ஜெயலலிதாவின் உடலுக்கு எங்களது வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்பதால், அவரது உடலைத் தோண்டியெடுத்து எங்கள் சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். மேலும் நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கை ஆதாரமற்றது என்பதால், இந்த மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என ஜெயலலிதாவின் சகோதரருடைய மகளான தீபாவும், மகன் தீபக்கும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். தமிழக அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு புதன்கிழமையன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனையில் அவரது ரத்த மாதிரிகள் உள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கு இணங்கி, அப்போலோ மருத்துவமனையின் சட்டப்பிரிவு மேலாளர் மோகன் ஓர் அறிக்கையை நீதிமன்றத்தில் வியாழக்கிழமையன்று தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையில், ஜெயலிதாவிடமிருந்து திசு மாதிரிகள் ஏதும் எடுக்கப்படவில்லை; ரத்தம் மற்றும் சிறுநீரக மாதிரிகள் மட்டும் எடுக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதே பயன்படுத்தப்பட்டுவிட்டன. ரத்தம் மற்றும் சிறுநீரக மாதிரிகளை ஓரு வருடத்திற்கு மேல் பாதுகாத்து வைக்க முடியாது. ஆகவே அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் ரத்த மற்றும் திசு மாதிரிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக