திங்கள், 23 ஏப்ரல், 2018

தமிழகத்தில் 1.43 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்!


மின்னம்பலம் :தமிழகத்தில் 1.43 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, மத்திய அரசின் நிதியுதவியுடனான தடுப்பு திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்றுவருவதாக எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
தகாத உறவு போன்ற பல்வேறு காரணங்களினால் ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ் உருவாகிறது. உயிர்க்கொல்லியான எய்ட்ஸ் நோய் மனித உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அழிக்கிறது. பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி, நோய்க்கு எதிராக உடல் போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. கடைசியில் மரணம் ஏற்படுகிறது.
எய்ட்ஸ் குறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், "தமிழ்நாட்டில் 1.20 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு கூட்டு மருந்து சிகிச்சையைப் பெற்றுவருகின்றனர். தமிழகத்தில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் 0.27 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும் தேசிய அளவைவிட 0.28 சதவீதம் குறைவாகவும் உள்ளது. வருங்காலங்களில் இதன் சதவீதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 1.43 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, மத்திய அரசின் நிதியுதவியுடனான தடுப்பு திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்கப்பட்டது. இதுகுறித்த தகவல்களை தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2014-15ஆம் ஆண்டில் 18 வயதிற்குட்பட்ட 311 பேரை எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ளது தெரியவந்தது. இதில் 289 பேருக்கு தாயின் மூலமாகவும், 22 பேருக்கு சந்தேகத்திற்கு இடமான வகையிலும் எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது.
எய்ட்ஸ் நோயால் 2015-16ஆம் ஆண்டில் 287 குழந்தைகளும், 2016-17ஆம் ஆண்டில் 236 குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இரண்டு ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. எனினும் சந்தேகத்திற்கு இடமான வகையில் நோய் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 32 பேராக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என்று மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
"எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. நமது நாட்டில் சுமார் 4 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு மணி நேரமும் 12 எய்ட்ஸ் நோயாளிகள் உயிரிழந்துவருகிறார்கள்.
எய்ட்ஸ் நோய்க்கு எதிரான போதிய தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாதது வருத்தத்துக்குரிய விஷயம். போதிய நேரத்தில் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் 60 சதவீதம் எய்ட்ஸ் நோயாளிகள் பலியாகும் அவலம் நேர்கிறது" என சமீபத்தில் ஆந்திரா எய்ட்ஸ் நோய் துறை நிபுணரான குட்டிகுப்பாலா சூர்ய ராவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக