திங்கள், 23 ஏப்ரல், 2018

தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி!

தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி!மின்னம்பலம் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் இன்று மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் சார்பில் மறியல், முழுஅடைப்புப் போராட்டங்களும், உரிமை மீட்புப் பயணமும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (ஏப்ரல் 23) திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் நான்கு இடங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. பிராட்வேயில் தொடங்கிய மனிதச் சங்கிலி ராயபுரம் வழியாக பெரம்பூர் சர்ச் வரை நீண்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், தமிழகத்தைப் பாலைவனமாக மாற்றாதே என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.
பாலகிருஷ்ணன் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிப் பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். தமிழகத்தில் என்ன நடந்தாலும் அது குறித்துக் கவலைப்படாமல், வாரியம் அமைப்பதை மீண்டும் மீண்டும் தள்ளிப்போடுகிறது மத்திய அரசு. மத்திய அரசைத் தட்டிக்கேட்கத் துப்பில்லாமல் வெறும் பார்வையாளராக இருந்துவருகிறது தமிழக அரசு" என்று குறிப்பிட்டார்.
சென்னை அண்ணா சாலையிலிருந்து தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் வரை ஜெ.அன்பழகன் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். கனிமொழி கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டங்கள் தொடரும். தமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக் குழல் துப்பாக்கி அதிமுக - பாஜக இல்லை. தமிழகத்தைச் சுடும் நோக்கில் அது திரும்பியுள்ளது. கர்நாடக தேர்தலுக்காகத் தமிழக மக்களைப் பகடைக் காயாக மத்திய அரசு பயன்படுத்துகிறது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்" என்று கூறினார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற மனிதச் சங்கிலியில் மார்க்சிஸ்ட் முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். சைதாப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து கிண்டி கத்திபாரா மேம்பாலம் வரை நீண்டபோராட்டம் அங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலும் நடைபெறுகிறது.சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் மாதவரம் சுதர்சனம் தலைமையில் மூலக்கடை முதல் ஸ்டான்லி வரை போராட்டம் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. துரைமுருகன் கூறுகையில், "இதுதான் இறுதிப் போராட்டம். இதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் தமிழகத்தில் மாபெரும் போராட்டம் வெடிக்கும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது. மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி அரசு ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கூறினார்.
புதுக்கோட்டையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, பால் பண்ணை வழியாக ஐந்து கிலோ மீட்டர் வரை நீண்டு மீண்டும் புதிய பேருந்து நிலையத்திலேயே இணைகிறது மனிதச் சங்கிலி போராட்டம். போராட்டத்தில் கலந்துகொள்ளத் திறந்த ஜீப்பில் வந்த ஸ்டாலின், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை பார்வையிட்டார்.
புதுச்சேரி அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார். தஞ்சையில் நடைபெறும் மனிதச் சங்கிலியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதுபோலவே திருவாரூர் போராட்டத்தில் சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசனும், திருச்சி போராட்டத்தில் மமக தலைவர் ஜவாஹிருல்லாவும் கலந்துகொண்டுள்ளனர். சிவகங்கையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி கலந்துகொண்டுள்ளார். பெரம்பலூரில் காதர் மொய்தீன் கலந்துகொண்டுள்ளார்.
இதுபோல் பல்வேறு மாவட்டங்களிலும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக