திங்கள், 23 ஏப்ரல், 2018

ஒன்னு ரெண்டு ரேப்புக்களை பெருசு படுத்தாதீங்க ! பா.ஜ.க அமைச்சர் சந்தோஷ் கேங்வர்

சந்தோஷ் கேங்வர்
வினவு :காசுமீர் முஸ்லிம் பழங்குடி சிறுமியான ஆசிஃபா பாலியல் பலாத்கார படுகொலை செய்யப்பட்டதையும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த உன்னாவோவில் 17 வயது சிறுமி பா.ஜ.க எம்.எல்ஏ-வால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதையும் எதிர்த்து நாடே கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் “இந்தியா போன்ற பெரிய நாட்டில் இது போன்ற ஓரிரண்டு நிகழ்வுகள் நடந்துவுடன் அதற்கெதிராகக் குழப்பங்களை எழுப்புவது சரியல்ல. விரும்பத்தகாததாக இருந்தாலும் இது போன்ற சம்பவங்களை சில நேரங்களில் தடுக்க முடியாது” என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் கேங்வர் கூறியிருந்தார்.
அடுத்த சில மணி நேரங்களிலேயே எழுந்த கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகு தான் கூறிய கருத்தை ஊடகங்கள் திரித்து பேசக்கூடாது என தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு அமைச்சர் ஆட்பட்டார்.


ஆனாலும் ரேப்பிஸ்ட்டை காக்கப் போராடும் பா.ஜ.கவின் அமைச்சர் பெருமக்கள் இதுபோன்ற கருத்து முத்துக்களை வெளியிடுவதும் பின்னர் அதற்கு தன்னிலை விளக்கங்கள் கொடுப்பதும் புதிதல்லவே.
அமைச்சர் கூறியவாறு ஒன்றிரண்டு பாலியல் பலாத்காரங்கள் மட்டும் தான் நடைபெறுகின்றனவா என்ன? அந்த ஒண்ணு ரெண்டு சம்பவங்களுக்கே கோவப்பட்டு சட்டத்தையே பட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறாரா மோடிஜி?
தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி 2016-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக நீதிமன்றங்களுக்கு வந்த 64,138 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 3 விழுக்காட்டினர் (1,869 நபர்கள்) மட்டுமே சட்டப்படிக் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று விழுக்காடு கூட அமைச்சர் கூற்றின்படி ஒன்றிரண்டு சம்பவங்கள் அல்லவே.
மேலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஒட்டு மொத்த பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 94 விழுக்காட்டினர் தந்தை உட்பட மிகவும் நெருங்கிய உறவினர்களாகவோ அண்டை வீட்டுக்காரர்களாகவோ தான் இருக்கின்றனர்.
பா.ஜ.க அரசின் இந்த சட்டத்திருத்த நடவடிக்கையை “தனக்கெதிரான கடுமையான விமர்சனத்தை மழுங்கடிக்கும் ஒரு பிரபலமான உத்தி” என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிருந்தா குரோவர்.
பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் முழுவதும் பதிவு செய்யப்படுவதில்லை. காரணம் இந்த நெடிய சட்ட முறைக்குள் சென்று நீதி தேடுவதும், தைரியமாக பெண்கள் முன்வருவதும் சமூக அளவில் சாத்தியமில்லாமல் இருக்கிறது. இதனால்தான் குற்றவாளிகள் பலர் தண்டிக்கப்படாமல் தப்பி விடுகின்றனர். நாடறிந்த மேற்கண்ட வழக்குகளிலேயே பா.ஜ.க-வினர் இப்படி பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் குற்றவாளிகளை ஆதரிக்கிறார்கள் என்றால், இங்கே என்ன சட்டம் கொண்டு வந்து பயன்? அவர்களைத் தண்டிப்பது எப்படி?
– வினவு செய்திப் பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக