வெள்ளி, 27 ஏப்ரல், 2018

பெண் நோயாளியை படம்பிடித்த மயிலாப்பூர் மருத்துவர் கைது

பெண் நோயாளியைப் படம் எடுத்த மருத்துவர் கைது!மின்னம்பலம் :மயிலாப்பூரில் உள்ள தனியார் கிளினிக்கு சிகிச்சைக்காகச் சென்ற பெண்ணை செல்போனில் படம் பிடித்த மருத்துவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவர், மயிலாப்பூரில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், அருகில் உள்ள கிளினிக்கு சிகிச்சைக்காக நேற்று (ஏப்ரல் 26) சென்றுள்ளார். அந்த கிளினிக்கில் சிவகுருநாதன் (வயது 64) என்பவர் மருத்துவராகப் பணியாற்றிவந்தார்.
மருத்துவர் சிவகுருநாதனிடம் தன்னுடைய பிரச்சினைகளை அந்தப் பெண் எடுத்துக் கூறினார். சிவகுருநாதன் அந்தப் பெண்ணைப் பரிசோதனை செய்வதற்காக மருத்துவர் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அறையில் சிவகுருநாதன் தன்னுடைய செல்போனில் அந்தப் பெண்ணை ரகசியமாகப் படம் பிடித்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கிளினிக்கில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த மருத்துவர் இதை மறுத்துள்ளார்.

இது தொடர்பாக, அந்தப் பெண் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில், காவல் துறையினர் கிளினிக்குக்குச் சென்று மருத்துவர் சிவகுருநாதனிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் வைத்திருந்த செல்போனை ஆய்வு செய்தனர். அதில் அந்தப் பெண்ணின் படம் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மருத்துவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். செல்போனில் இருந்த மெமரி கார்டைக் காவல் துறையினர் சோதனை செய்தபோது, மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற வரும் பெண் நோயாளிகளைப் படம் பிடித்த காட்சிகள் பல இருந்துள்ளன. இது தொடர்பாக மருத்துவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக