வெள்ளி, 16 மார்ச், 2018

லாலு வழக்கு: மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட தீர்ப்பு!

லாலு வழக்கு: மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட தீர்ப்பு!மின்னம்பலம் :பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான தும்கா கருவூல மோசடி வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 1991-96 காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்தபோது சுமார் 900 கோடி மதிப்பளவில் கால்நடைத் தீவன ஊழல் நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது சிபிஐ.
இந்த ஊழல் தொடர்பாக, மூன்று வழக்குகளில் இதுவரை ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடைசி வழக்கான தியோஹர் கருவூல மோசடி வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ராஞ்சி பிர்ஸா முண்டா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் லாலு.

இந்த நிலையில், தும்கா கருவூலத்தில் போலி ரசீதுகள் மூலமாக, 1995-96ஆம் ஆண்டுகளில் 3.13 கோடி மோசடி செய்யப்பட்டுள்ள வழக்கின் வாதம் கடந்த 5ஆம் தேதியன்று நிறைவடைந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (மார்ச் 15) வெளியாகும் என்று அறிவித்திருந்தார் நீதிபதி சிவபால்சிங். இந்த வழக்கில் பீகார் மாநில தலைமை கணக்காளரையும் சேர்க்க வேண்டுமென லாலு தரப்பு கூறியிருந்தது.
இது தொடர்பாக, வீடியோ கான்பரன்சிங் முறையில் லாலுவிடம் விசாரணை செய்தார் நீதிபதி சிவபால்சிங். இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நாளை (மார்ச் 17) வெளியாகும் என்று அறிவித்தார் சிவபால்சிங். தொடர்ந்து மூன்று நாட்களாக, லாலு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக