வெள்ளி, 16 மார்ச், 2018

குரங்கணி காட்டுத் தீ:உயிரழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு !

குரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை உயர்வு!மின்னம்பலம் : குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட காட்டுத் தீயில் சென்னை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, மதுரையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா என்ற பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கண்ணன், அனுவித்யா இருவரும் சிறுநீரகம் செயலிழந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, திருப்பூரைச் சேர்ந்த சக்திகலா சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 16) உயிரிழந்தார்.
அடுத்த சிறிது நேரத்தில், எடப்பாடியைச் சேர்ந்த தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
பணிச் சுமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தங்களின் ஊடே சற்றே இளைப்பாற இயற்கை அன்னையின் இதமான சூழலில் மலையேறச் சென்று தீயில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 16 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக