வெள்ளி, 16 மார்ச், 2018

ஆவடியில் கொத்தடிமைகளாக இருந்த 147 பேர் மீட்பு!... செங்கல் சூளையில்

கொத்தடிமைகளாக இருந்த 147 பேர் மீட்பு!
மின்னம்பலம் :ஆவடியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 147 பேர் மீட்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பாண்டேஸ்வரம் பகுதியில் தனியார் செங்கல் சூளை ஒன்று இயங்கிவருகிறது. இந்தச் செங்கல் சூளையில் வடமாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்துவருவதாகத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை (மார்ச் 14), திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் செங்கல் சூளையில் சோதனை நடத்தினர். அப்போது, 63 ஆண்கள், 49 பெண்கள், 35 குழந்தைகள் என 147 பேர் கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் வேலை பார்த்துவருவது கண்டறியப்பட்டது. விசாரணையில் இவர்கள் அனைவரும் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, “செங்கல் சூளையில் வேலை செய்துவந்த இவர்களுக்கு வாரம் 200 ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளனர். 6 மாதங்கள் வரை கொத்தடிமைகளாக வேலை செய்ய வற்புறுத்தியுள்ளனர். 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இவர்கள் வேலை செய்துவருகின்றனர். தகவல் அறிந்து மீட்கப்பட்ட அனைவரும் திருநின்றவூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசின் மறுவாழ்வு நிதியான தலா 20,000 ரூபாயை அவர்களுக்கு வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் செங்கல் சூளை உரிமையாளர் நாகையாவை போலீஸார் நேற்று (மார்ச் 15) கைதுசெய்தனர்.
2017ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்துவந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீட்கப்பட்டனர் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக