வியாழன், 22 மார்ச், 2018

ரத யாத்திரை..... இசக்கி முத்து குடும்பத்தை நினைவு இருக்கிறதா ... அதே கலெக்டர் சந்தீப் நந்தூரி ..

மின்னம்பலம் :இளங்கோவன் முத்தையா: மார்ச் 20
அன்று கேரளா வழியாக தமிழ்நாட்டின் தென்காசி - செங்கோட்டை எல்லைக்குள் நுழைந்து ராமேஸ்வரம் செல்வதாக விஸ்வஹிந்து பரிஷத் நடத்திய ரத யாத்திரைக்கு, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. அடிப்படையில் இதுபோன்ற நிகழ்வுகளை ஊதிப் பெரிதாக்கக் கூடாது எனவும், ரத யாத்திரை மேற்கொள்ள எந்த ஓர் அமைப்புக்கும் ஜனநாயக அடிப்படையில் உரிமை உண்டு எனவும் தமிழகத்தில் சில குரல்கள் எழுந்தன.
சிறப்புக் கட்டுரை: ரத யாத்திரையும் எதிர்ப்பரசியலும்!
இந்த ரத யாத்திரையை எதிர்க்க வேண்டிய அரசியல் காரணம் என்ன என்கிற கேள்விக்கு விடை தேட வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, அடிப்படையில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மத அடிப்படையிலான எவ்வளவோ பிரச்சினைகளுக்குப் பிறகும் இந்தியா இந்தக் கருத்தியலைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. மேலும், பல்வேறு மதங்கள் நிறைந்த இந்நாட்டில் மதச்சார்பின்மை என்கிற கருத்தியலே பூதாகரமாக வெடித்திருக்க வேண்டிய பல பிரச்சினைகள் எழாமல் போனதற்கும், மத சிறுபான்மைச் சமூகங்கள் அச்சமின்றி வாழ்வதற்குமான அடிப்படை அம்சமாகவும் இருக்கிறது.

ஏன் எதிர்க்க வேண்டும்?
இந்த ரத யாத்திரையின் அடிப்படை நோக்கம் என்பது “ராம ராஜ்ஜியத்தை இத்தேசத்தில் அமைப்பதே” என்று தமது பிரசாரங்களில் இந்துத்துவ அமைப்புகள் சொல்லி வருகின்றன. உண்மையில் இது மதச்சார்பின்மை என்பதை தனது அடிநாதமாகக்கொண்ட இந்திய அரசியல் முறைமைக்கே எதிரானது. இந்த ஓர் அம்சமே இதை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான காரணத்தைக் கொடுத்துவிடுகிறது.
இரண்டாவது, இதற்கு முன்னால் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளால் நடத்தப்பட்ட ரத யாத்திரைகளையும் அவை இந்தத் தேசத்தில் ஏற்படுத்திய சீரழிவுகளையும் நாம் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களிலும், மத்தியிலும் தேர்தல் அரசியலில் வென்று அல்லது தேர்தலில் வென்ற உறுப்பினர்களை வென்று, தீவிர இந்துத்துவ ஆதரவாளர்களான பாஜக ஆட்சியிலிருக்கும் இந்தக் காலகட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் வழியாக நடத்தப்பட்டிருக்கும் இந்த ரத யாத்திரையை நாம் சந்தேகக் கண்கொண்டும், அச்சத்துடனும் பார்க்க வேண்டியிருக்கிறது.
எதிர்ப்பின் தன்மைகள்
இஸ்லாமிய இயக்கங்கள்தான் இதைப் பெரிதுபடுத்துகின்றன. மற்றவர்களுக்கு இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் பெரிய பங்கு இல்லை என்கிற கூற்றை நாம் இரண்டு விதங்களில் அணுகலாம். ஒன்று... ஆம், இஸ்லாமிய இயக்கங்கள் இதைத் தீவிரமாக எதிர்க்கின்றன. ஏனென்றால் இந்துத்துவ அமைப்புகள் முன்னெடுக்கும் எத்தகைய நடவடிக்கையும் உடனடியாகவோ அல்லது கடைசியிலோ இஸ்லாமிய சமூகத்துக்கு எதிரானதாகவே இருக்கும் என்பது சமகால வரலாறு. எனவே, அவர்களிடமிருந்து உடனடியாக எதிர்வினை வருவதென்பது புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால், அவர்கள்தான் இந்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்குகிறார்கள் என்பது தவறு. செங்கோட்டையில் நடந்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்கிய மீ.த.பாண்டியனோ, தங்களது எதிர்ப்பைக் களத்தில் பதிவு செய்த திருமாவளவன், கொளத்தூர் மணி, சீமான், வேல்முருகன் உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகள் அல்லது அரசியல் அமைப்புகளைச் சார்ந்தவர்களையோ நாம் இஸ்லாமிய அடையாளத்துக்குள்ளேயோ, இஸ்லாமிய ஆதரவாளர்களாகவோ மட்டும் சுருக்கிவிட முடியாது.
வாக்கு அரசியல் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற கட்சிகள் இந்தப் போராட்டங்களைத் தங்களது அரசியல் வளர்ச்சிக்காக மட்டுமே நடத்துகின்றன என்கிற வாதமும் தவறானதே. எந்த ஓர் அரசியல் இயக்கமும் தனது கொள்கைகளுக்கு எதிரான பிரச்சினைகளில் போராடுவதன் மூலமே தங்களை வளர்த்துக்கொள்ள முடியும். அதிலும் வாக்கு அரசியலில் பிரதான கட்சிகளாக அறியப்படும் திமுக, மதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகள், பாமக ஆகிய யாரும் களத்தில் இறங்கிப் போராடாத நிலையில், இவர்களது போராட்டங்களை ஆதாய அரசியல் என்கிற ரீதியில் அணுகுவது என்பது சரியானதாக இருக்காது.

திமுகவும் கம்யூனிஸ்டுகளும்
திமுக இந்தப் பிரச்சினையைத் தீவிரமாகக் கையாளவில்லை அல்லது மென்போக்கைக் கடைப்பிடிக்கிறது என்கிற குற்றச்சாட்டை இனிமேலும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. கருணாநிதியின் தடாலடி அரசியல் காலம் முடிந்து, அனைத்துப் பிரச்சினைகளையும் மென்மையாகவே கையாளும் ஸ்டாலினின் காலம் இது. இனிவரும் காலங்களிலும் திமுக செயல் தலைவரின் மென்மையான அணுகுமுறைதான் தொடரப்போகிறது என்பதை நாம் யூகிக்கலாம். இந்தப் போக்கு, நீண்டகால அடிப்படையில் அந்தக் கட்சிக்கு நன்மையாக முடியுமா, தீங்காக முடியுமா என்கிற கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல முடியும்.
ஆனால், கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை இந்த ரத யாத்திரையை அவர்கள் கையாண்ட விதம் மிக மோசம். அதே சமயம் “பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் சிபிஎம் அரசு இந்த ரத யாத்திரையை ஏற்கெனவே அனுமதித்திருக்கிறது. எனவே, தமிழக கம்யூனிஸ்ட்டுகள் எதிர்க்கவில்லை என்பது சரிதானே” என்கிற கேள்விக்கு நாம் போக தேவையில்லை. நீட் உள்ளிட்ட ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப ஒவ்வொரு நிலைப்பாடு எடுப்பது என்பது ஒன்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்குப் புதிதில்லை. எனவே, ரத யாத்திரை விஷயத்திலும் தமிழக கம்யூனிஸ்ட்டுகள் எதிர்ப்பு நிலைப்பாட்டைத் தீவிரமாக முன்னெடுத்திருக்கலாம். சிறுபான்மையினரது நலனுக்காக அவர்களுடன் கைகோத்து நின்றிருக்க வேண்டிய ஒரு வரலாற்றுத் தருணத்தை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவற விட்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
கேரள கம்யூனிஸ்ட் அரசு ரத யாத்திரைக்கு அனுமதி அளித்ததை வியூக அரசியல் என்றும் கொள்ளலாம். கர்நாடகாவில் இது தேர்தல் காலம். எனவே, எந்தச் சமுதாய மக்களையும் பகைத்துக்கொள்ள ஆளும் காங்கிரஸ் விரும்பாது. எனவே, அங்கு அனுமதி அளிக்கப்பட்டதிலும் வியப்பேதுமில்லை. வாக்கரசியலில் உள்ள கட்சிகளின் நிலைப்பாடுகளில் கொள்கைகள் என்பது இரண்டாம்பட்சம்தான்.

அதிமுக ஏற்படுத்தும் தவறான முன்னுதாரணம்
உண்மையில் கண்டிக்கப்பட வேண்டியது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசுதான். திராவிட இயக்க வழி வந்த, தனது கடைசிக் காலத்தில் பாஜகவைக் கடுமையாக எதிர்த்த, ‘சமூக நீதி காத்த’ ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்துவதாக எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் வகையறாவின் அரசு சொல்லிக்கொள்கிறது. ஆனால், இந்த அரசு, தனது முதுகெலும்பை இழந்து, பாஜகவின் கைப்பாவையாகத் தாங்கள் முன்னிறுத்தப்படுவதை எந்தவித லஜ்ஜையும் இல்லாமல் ஏற்றுக்கொண்டதையே அவர்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்து, எதிர்ப்பாளர்களைக் கைது செய்து, உரிய போலீஸ் பாதுகாப்புடன் ரத யாத்திரையை நடத்தியதன் மூலம் நிரூபித்திருக்கிறது. நான்கு பேருக்கு மேல் கூடிப் பேசக் கூடாது என்பது 144 தடை உத்தரவின் விதிகளுள் ஒன்று. 144 தடையை எதிர்ப்பாளர்கள் மீது மட்டும் பிரயோகித்துவிட்டு, ஊர்வலத்தை நடத்தியது மிக மோசமான முன்னுதாரணம். இதில் பொது மற்றும் இதர பள்ளித் தேர்வுக்காலத்தில் உள்ள மாணவர்களின் சிக்கல்கள் வெளியே தெரியாமல் போனது சோகமானது.
திராவிடச் சித்தாந்தங்களிலிருந்து வழுவியதாக எடப்பாடி பழனிசாமியை மட்டும் நாம் குற்றம் சொல்ல முடியாது. எம்.ஜி.ஆரின் கொல்லூர் மூகாம்பிகை வழிபாட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஜெயலலிதா அதை யாகங்கள், ஜோதிடர்கள், மகாமகக் குளியல் என்று அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றார். எடப்பாடி காவிரி புஷ்கரணியில் நீராடினார். ஒரு மோசமான சங்கிலியில் இவர் இன்றைய கண்ணி, அவ்வளவே.
ஜெயலலிதா முதன்முதலில் வாஜ்பாய் தலைமையிலான பாஜகவுக்கு ஆதரவு அளித்தபோதே, தமிழகத்தில் அக்கட்சி காலூன்ற அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து கருணாநிதியும் பாஜகவுக்கு ஆதரவளித்து தனது பங்களிப்பையும் உறுதிப்படுத்திக்கொண்டார். ஏறத்தாழ இருபது ஆண்டுகால திராவிட அரசுகளின் இந்தப் பின்னோக்கிய நகர்வின் தொடர்ச்சியே மைனாரிட்டி எடப்பாடி அரசின் இந்தப் போக்கு. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் அரசு, திராவிடச் சித்தாந்தங்களை மொத்தமாகக் குழிதோண்டிப் புதைத்தவர்கள் என்கிற வகையில் வரலாற்றின் பக்கங்களில் நினைவுகொள்ளப்படும்.
சாதிவாதத்தோடு கைகோக்கும் மதவாதம்
நாடு முழுக்க மதவாத அடிப்படையில் செயல்படும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் சமீபகாலமாகச் சாதிவாதத்தையும் செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர், நாடார் சமூகங்கள், மேற்கு மண்டலத்தில் கவுண்டர், நாயுடு சமூகங்கள், வடதமிழகத்தில் வன்னியர் சமூகம் என்று பெரும்பான்மைச் சாதியினரை மேலாதிக்கம் செய்து வழிநடத்துவதை நீண்ட நாள்களாகவே இவை செய்துவருகின்றன. அதனுடைய தொடர்ச்சியாகவே இத்தகைய ரத யாத்திரைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
காவிரி, கூடங்குளம், நியூட்ரினோ, கெய்ல், நீட் உள்ளிட்ட தமிழகத்தின் எத்தனையோ பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காத பாரதிய ஜனதா ரத யாத்திரைக்குத் தனது முழு ஆதரவையும் அளித்து, கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறது என்றால், வரலாற்று அடிப்படையிலும், தமிழகத்தின் நீண்ட நெடிய மதச்சார்பற்ற பண்பாட்டு அடிப்படையிலும் இந்த எதிர்ப்புகள் மிக அவசியமானவையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக