சனி, 24 மார்ச், 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராட்டம்

ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராகக் கடையடைப்புப் போராட்டம்!மின்னம்பலம்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிலம், நிலத்தடி நீர், காற்று மண்டலம் என அனைத்தையும் நஞ்சாக மாற்றி, மனித உயிர்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது; எனவே அந்த ஆலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே குரல் எழுப்பப்பட்டுவருகிறது.
சமீபத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்டுவரும் தாமிர உருக்காலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுர பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 24) ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
தூத்துக்குடி, புதியம்பத்தூர், ஸ்ரீவைகுண்டம் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த சுமார் 10,000 கடைகள், வணிக நிறுவனங்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மீனவர்களும் கடலுக்குச் செல்லாமல் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இதனால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆலையைச் சுற்றிலும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டக் களத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலை விவிடி சிக்னல் அருகே கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக