புதன், 21 மார்ச், 2018

மருத்துவமனை மர்மம்... 300 கார்களுடன் சசிகலா

 டிஜிட்டல் திண்ணை: மருத்துவமனை மர்மம்... 300 கார்களுடன் சசிகலா மின்னம்பலம்:  சசிகலாவின் கணவர் நடராஜன் உயிர் பிரிந்ததாக மார்ச் 20 நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து நடராஜன் இறந்துவிட்டார் என்ற டெத் சர்ட்பிகேட் பெங்களூருவில் இருந்த புகழேந்திக்கு மெயிலில் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த மெயில் காப்பியுடன் வழக்கறிஞர் அசோகன் சகிதமாக சசிகலாவுக்கு பரோல் கேட்கப்பட்டிருக்கிறது. நடராஜன் உயிர் பிரிவதற்கு முன்பாக பரோல் கிடைக்காது எனச் சொல்லிவிட்டார்களாம்.
காரணம், ஏற்கனவே பார்த்த நோயாளியை ஆறு மாதங்களுக்குள் மீண்டும் பார்ப்பதற்கு சிறை விதிகளில் இடம் இல்லையாம். அதனால்தான், நடராஜன் இறப்பு சான்றிதழை கொடுத்து பரோல் கேட்கப்பட்டு இருக்கிறது. சசிகலாவுக்கும் பரோல் கிடைத்திருக்கிறது. சிறை வாசலில் ஏராளமான அவரது ஆதரவாளர்கள் காத்திருந்தனர். எந்த சலனமும் இல்லாமல் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா பயன்படுத்தி வந்த காரில் ஏறி, தஞ்சாவூர் நோக்கி கிளம்பிவிட்டார். சென்னை வரை விமானத்தில் வந்து, சென்னையில் இருந்து நடராஜன் உடலோடு தஞ்சாவூர் போவதுதான் திட்டமாக இருந்தது. அதற்காகத்தான், நடராஜன் கவலைக்கிடமாக இருக்கிறார் என்றபோதே தமிழ்நாடு முழுக்க இருந்து தினகரன் ஆதரவாளர்களை சென்னைக்கு வரச் சொல்லி இரண்டு நாட்களுக்கு முன்பே உத்தரவு போயிருந்தது.
அதன்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த தினகரன் ஆதரவாளர்கள், திருவல்லிக்கேணி பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
ஆனால், சென்னைக்கு சசிகலா வந்து அதன் பிறகு நடராஜன் உடலை திருச்சிக்கு எடுத்துச் சென்றால், தாமதமாகும் என்பதால், திட்டத்தை மாற்றினார் தினகரன். நடராஜன் உடல் மதியம் ஒருமணிக்கு சென்னையில் இருந்து ஆம்புலன்சில் தஞ்சையை நோக்கிப் புறப்பட்டது. அதேநேரம் சசிகலாவும் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து நேராக தஞ்சை நோக்கிப் புறப்பட்டார்.
ஜெயலலிதா பயன்படுத்திய காரில், பரப்பன அக்ரஹாராவில் இருந்து கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி வழியாக தஞ்சாவூருக்குப் புறப்பட்டார் சசிகலா. சசிகலாவின் ரூட் மாற்றப்பட்ட தகவல் தினகரன் ஆதரவாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. வழி நெடுக, கூடி நின்று சசிகலாவை பார்த்து கையசைத்தனர்.
பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா காரின் பின்னால் முப்பது கார்கள் புறப்பட்டன. கிருஷ்ணகிரிக்கு மதியம் 2.30 மணிக்கு மேல் வந்தார் சசிகலா. அப்போது அங்கே முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆதரவாளர்கள் சுமார் நூறு கார்களோடு திரண்டனர். அவர்கள் சசிகலாவின் பின்னால் அணி வகுத்தனர். கார் தர்மபுரியை அடைந்தபோது... தொப்பூர் டோல் கேட்டில் செந்தில் பாலாஜி, பழனியப்பன், அவரது மகன் எழில் மறவன் ஆகியோர் நின்றிருந்தனர். சசிகலாவின் கார் மெதுவாக நின்றது. அப்போது எழில் மறவன் ஒரு தயிர் சாதம் உள்ளிட்ட மூன்று சாப்பாட்டுப் பொட்டலங்களை சசிகலாவிடம் கொடுத்தார். ஒரு பொட்டலத்தை சசிகலா சாப்பிட்டார். மீதி இரு பொட்டலங்கள் சசிகலாவோடு காரில் வந்த, ஜெயலலிதாவின் பி ஏ கார்த்திக்., முன்னாள் எம்.எல்.ஏ. பெருமாள் ஆகியோருக்கு தரப்பட்டது. வழியெங்கும் தினகரன் ஆதரவாளர்கள் சசிகலா செல்லும் வாகனத்துக்கு முன் விழுந்து அழுதனர். அவர்களை நோக்கி கண்கலங்கியபடியே கும்பிட்டார் சசிகலா.
சசிகலா அப்போது திரும்பிப் பார்த்தார். சுமார் நூறு கார்கள் அணி வகுத்தன. பழனியப்பனிடம் சசிகலா, ’பின்னாடி இவ்வளவு கார் வேணாம்னு, பத்து பத்து காரா வரச் சொல்லுங்க. கொஞ்சம் இடைவெளி விட்டு வரச் சொல்லுங்க... நாம துக்கத்துக்குதானே போறோம்’ என்று சொல்லியிருக்கிறார். உடனே பின்னால் வந்த கார்களை சிறிது நேரம் நிறுத்தி சசிகலாவுக்குப் பின்னால் சில கிலோ மீட்டர்கள் இடைவெளிவிட்டு வரச் சொன்னார் பழனியப்பன்.
சசிகலாவின் கார் மாலை முசிறி அருகே தொட்டியம் வந்தபோது அங்கே டிடிவி தினகரனும், அவரது மனைவி அனுராதாவும் நின்றிருந்தனர். அவர்கள் அங்கே சசிகலாவின் காரில் ஏறிக்கொண்டனர். அப்போது சசிகலாவின் காரின் பின்னால் முன்னூறு கார்கள் திரண்டு நின்றன. சசிகலாவே சொன்னாலும் தினகரன் கட்சியினர் இதை கண்டுகொள்வதாக இல்லை” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தது வாட்ஸ் அப்.

’‘உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடராஜனுக்கு இன்ஃபெக்‌ஷன் அதிகமாக இருந்ததாம். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நோய் தொற்று நடராஜனுக்கு மிக அதிகமாகியிருக்கிறது. அதன் பிறகுதான் அவரை அந்த அறையில் இருந்து தனி ஐசியூவுக்கு மாற்றி இருக்கிறார்கள். இப்படியான நோய் தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த அறை ஸ்டெர்லைஸ் செய்யப்படாமல், அந்த அறைக்கு வேறு யாரையும் அனுமதிக்கப்பட மாட்டார்களாம்.வெளிநாட்டில் இதுபோல நோய் தொற்று ஏற்பட்டவர் தங்கியிருந்தவர்களின் அறையை ஸ்டெர்லைஸ் செய்வதற்கு பயன்படுத்தப்படும் டெக்னாலஜியை நடராஜன் தங்கியிருந்த அறைக்குப் பயன்படுத்தினார்களாம். பெட்ரோல் வாயுவை அந்த அறைக்குள் செலுத்தி, திடீர் தீயை உண்டாக்குவதுதான் அந்த சிஸ்டம் என்கிறார்கள். அப்படித்தான் நடராஜன் அனுமதிக்கப்பட்டு இருந்த அறையை தீயிட்டு ஸ்டெர்லைஸ் செய்திருக்கிறார்கள். ‘கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியான முறையில் நடராஜன் மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் அவருக்கு நோய் தொற்று இந்த அளவுக்கு அதிகமாகியிருக்கிறது...’ என்று மருத்துவமனை வட்டாரத்தில் சொல்கிறார்கள்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக