புதன், 21 மார்ச், 2018

நடராசனின் கல்லீரல் சிகிச்சையும் கார்த்திக் மரணமும் இளைஞனை காவு கொடுத்தும் .. Flashback

கல்லீரல்... சர்ச்சையும் சிகிச்சையும்
- ஜூனியர் விகடன்
ஆட்சியை பிடிக்கவும் கொலை?
ஆளை காப்பாற்றவும் கொலை?
சசிகலாவின் கணவர் நடராசன், மர்மங்கள் சூழ்ந்த மாய மனிதர். அ.தி.மு.க என்ற கட்சி, அதன் தலைமையில் அமையும் ஆட்சி, போயஸ் கார்டனில் கோலோச்சிய சசிகலாவின் அதிகாரம் என அத்தனை பரபரப்புகளையும் விட்டு அவர் ஒதுங்கியிருப்பதுபோல் தோன்றும். ஆனால், அந்த இடங்களிலிருந்து
கிளம்பும் அத்தனை சர்ச்சைகளும் கடைசியில் நடராசனிடமே போய் முடியும். 25 நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக முடங்கிக்கிடக்கும் நடராசனைச் சுற்றி இப்போதும் அப்படிப்பட்ட கடுமையான சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஆட்சியும், கட்சியும் அந்தக் குடும்பத்திடமிருந்து பறிபோனது. அப்போதெல்லாம் பரோலில் வராத சசிகலா, இப்போது முதல்முறையாக பரோல் கேட்டு சிறைக்கு வெளியே வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாகவே நடராசனுக்குக் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டுமென்பது உறுதியானது. இதையடுத்து மாற்று உறுப்புகளுக்காக பிப்ரவரி மாதம், தமிழக அரசின் உறுப்பு தான ஆணையத்தில் நடராசன் பதிவுசெய்து வைத்தார். இதற்கிடையில் உடல்நிலை மோசமடைய, சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ‘உடனடியாக கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்தால்தான் அவரைக் காப்பாற்ற முடியும்’ என டாக்டர்கள் தெரிவித்தனர்.

-
உறவுகளில் தேடிய சசி குடும்பம்
நடராசனின் உறவினர் சங்கர் என்பவரிடம் கல்லீரலில் ஒரு பகுதியும், கலாவதி என்பவரிடம் சிறுநீரகமும் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாநில அளவிலான உடலுறுப்பு தான கமிட்டியில் அனுமதி வாங்கப்பட்டது. ஆனால், இவர்களின் உறுப்புகள், நடராசனுக்குப் பொருந்தாது என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில், சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் உடலுறுப்பு தானம் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
உடலுறுப்பு தானம் செய்வதற்கும் பெறுவதற்கும் பல விதிமுறைகள் உள்ளன. உயிருடன் இருப்பவர்களின் உறுப்புகளைத் தானம் பெறவும், மூளைச்சாவு அடைந்தவர்களிட மிருந்து பெறவும் தனித்தனி வழிமுறைகள் உள்ளன. மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறப்படும் உறுப்புகள், தானம் கேட்டுப் பதிவுசெய்தவர்களின் உடல்நிலை மற்றும் பதிவு சீனியாரிட்டியைப் பொறுத்து அவர்களுக்குப் பொருத்தப்படும். தானம் பெறுபவர் இருக்கும் மருத்துவமனையில் யாரேனும் மூளைச்சாவு அடைந்தால், தானத்தில் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த விதிகளைப் புரிந்துகொண்டு தேடல் தொடர்ந்தது.
அச்சாரமிட்ட அரசு மருத்துவர்கள்
தஞ்சாவூரில் சசிகலாவின் அண்ணன் பெயரில் இயங்கும் வினோதகன் மருத்துவமனையில், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் பகுதிநேரமாகப் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கும் நடராசனின் பிரச்னைகள் சொல்லப்பட்டன. அவர்கள் மூலம்தான், கார்த்திக் என்பவர் பற்றிய விவரங்கள் சசிகலா குடும்பத்துக்குத் தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த கூத்தாடிவயலைச் சேர்ந்த நடராசன்-பார்வதி தம்பதியின் மகன் கார்த்திக். செப்டம்பர் 30-ம் தேதி அவர் டூ-வீலரில் போனபோது, எதிரில் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் இவர் மூளைச்சாவு அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அவருடைய உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு இப்போது நடராசனுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.
‘எல்லாம் மர்மம்!’ - புலம்பும் அக்கா
கூத்தாடிவயலில் கதவுகூட இல்லாத சிறிய கீற்றுவீடு. கார்த்திக்கின் படத்துக்கு மாலை போட்டிருக்க, கார்த்திக்கின் அக்கா பிரேமலதாவிடம் பேசினோம்.
‘‘அறந்தாங்கியில் கார்த்திக்கின் நண்பர் ஒருவர் கடை வைத்துள்ளார். அங்கு போனபோதுதான் விபத்து நடந்ததாகத் தகவல் வந்தது. பதறிப்போய் நாங்கள் சம்பவ இடத்துக்குப் போனோம். என் தம்பி ரத்த வெள்ளத்தில கிடந்தான். உடனே, அறந்தாங்கி ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனோம். அங்கு பார்த்த டாக்டர்கள், ‘கழுத்து நரம்பு துண்டாகியிருக்கு. புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு போங்க’னு சொன்னாங்க. அங்கே போனோம். அவங்க, ‘அடி பலமா இருக்கு... உடனே தஞ்சாவூர் கொண்டு போங்க’னு சொல்லிட்டாங்க. நாங்களும் தம்பியத் தூக்கிட்டு தஞ்சாவூர் போனோம்.
அங்கே, ‘கார்த்திக் நல்லபடியாக இருக்கான்’னுதான் ஆரம்பத்துல டாக்டர்கள் சொன்னாங்க. அவங்க சொன்னத நம்பித்தான் நான், அம்மாவையும் அப்பாவையும் அங்க விட்டுட்டு ஊருக்குக் கிளம்பிவந்தேன். இங்க வந்துட்டாலும் அம்மாவுக்குப் போன் பண்ணி பேசிக்கிட்டுதான் இருந்தேன். நான் கேட்டப்ப எல்லாம், ‘தம்பிக்கு இப்போ பரவாயில்லை’ன்னுதான் எங்க அம்மா சொல்லுச்சு. நாங்களும் நம்பிக்கையாக இருந்தோம். திடீர்னு 3-ம் தேதி எங்க அம்மா போன் பண்ணி, ‘தம்பி பிழைக்கமாட்டான்னு சொல்றாங்க... தம்பி மேல மோதின கார் ஓனர், தம்பிய சென்னைக்கு அழைச்சிக்கிட்டுப் போனா பிழைக்க வைக்கலாம். செலவைப் பாத்துக்கிறேன்னு சொல்றார்’னு சொல்லுச்சு. அதுக்குப் பிறகு, எங்கம்மா என்கிட்ட பேசவே இல்ல. என் தம்பியை சென்னைக்குக் கொண்டு போனது... இப்போ தம்பி இறந்துபோயிட்டான்னு சொல்லுறது... எல்லாம் மர்மமாவே இருக்கு. என் தம்பி சாவுக்கு நீதி வேணும்’’ என்றபடி கதறினார்.
‘‘பணத்துக்குத் தம்பியை வித்துட்டீங்களா?’’
கார்த்திகேயனின் அத்தை செல்வி, ‘‘கார்த்திக்கை தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில நான்தான் கவனிச்சுட்டு இருந்தேன். ரெண்டு நாளுக்குப் பிறகு நானும் ஊருக்கு வந்துட்டேன். மொத ரெண்டு நாள் அந்தப் புள்ள நல்லாதான் இருந்துச்சு. அதுக்குப்பிறகு யார் யாரோ வந்து பேசுறாங்கன்னு சொன்னாங்க. அப்புறம் நான் விசாரிச்சப்போ, ‘பெட்ல ஆள் இல்லை’னு சொன்னாங்க. உடனே, கார்த்திக் அம்மாவுக்கு போன் பண்ணி கேட்டேன். கார்த்திக்கை சென்னைக்குக் கொண்டு போறதா சொன்னாங்க. அடுத்து அவங்ககிட்ட பேச முடியல. அவங்க செல்போனுக்கு போன் பண்ணினா, போனை வேறு யாரோ எடுத்து, பெயரைக் கேட்டுட்டு கட் பண்ணாங்க. கடைசியில ‘கார்த்திக் செத்துட்டான், உடல் உறுப்புகளை எடுத்துட்டாங்க’ன்னு சொல்றாங்க. எங்களுடைய வறுமையைப் பயன்படுத்தி, விலைபேசிட்டாங்க’’ என்றார் கோபமாக.
கார்த்திக்கின் உடலைக் கூத்தாடிவயலுக்குக் கொண்டுவந்தபோது, ‘‘பணத்துக்குத் தம்பியை வித்துட்டீங்களா?’’ என அம்மா பார்வதியிடம் கேட்டு பிரச்னை செய்துள்ளார் கார்த்திக்கின் அக்கா பிரேமலதா. இதே கேள்வியை அந்த ஊர் இளைஞர்களும் கேட்டுள்ளனர். கார்த்திக்கின் பெற்றோர், ‘‘அதெல்லாம் இல்லை’’ என்று சமாளிப்பதிலேயே குறியாக இருந்தனர்.
கார்த்திக்கின் பெற்றோரிடம் நாம் சில சந்தேகங்களைக் கேட்க முயற்சி செய்தோம். அவர்கள் பேச மறுத்து விட்டனர்.
‘‘எனக்கு வேற வேலை இருக்கு!’’
இதையடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘சசிகலாவின் அண்ணன் விநோதகனின் மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு டாக்டர்தான், மருத்துவக் கல்லூரியில் ஒரு துறைத் தலைவராக உள்ளார். அவர் மூலம்தான் கார்த்திக் குறித்த தகவல்கள் வெளியே போயுள்ளன. விதிகளையும் நடைமுறைகளையும்மீறி கார்த்திக்கை இங்கிருந்து சென்னைக்குக் கொண்டுசென்றுள்ளனர். எல்லாமே பேசிவைத்தபடி, உடனுக்குடன் நடந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்’’ என்றனர் சில டாக்டர்கள்.
இந்தநிலையில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயகுமாரிடம் பேசினோம். ‘‘கார்த்திக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ‘டீன்’ என்பவர் மருத்துவமனையை நிர்வாகம் செய்பவர் மட்டும்தான். மற்ற விவரங்கள் பற்றி, நீங்கள் அந்தத் துறையைச் சேர்ந்தவர்களிடம்தான் கேட்க வேண்டும். ரொம்ப முக்கியமான விஷயமா இருந்தா மட்டும்தான், எனக்கு நோட்டிஃபிகேஷன் தருவார்கள். அதுவும் அவங்க சொல்ற நாள், லீவு நாளா வேற இருக்கு. அதுனால எனக்கு அவங்க எந்த நோட்டிஃபிகேஷனும் கொடுக்கல. அப்படி ஒண்ணும் என் கவனத்துக்கு வரல. எனக்கு வேற வேலை இருக்கு’’ எனச் சலனமே இல்லாமல் சொன்னார்.
ஒரு நாடகம் படுவேகமாக நடந்து முடிந்திருக்கிறது.
கூட்டுச்சதி நடந்துள்ளது!
இந்த உறுப்பு மாற்று சிகிச்சை குறித்து சர்ச்சை கிளப்பும் சமூக ஆர்வலர் ‘பாடம்’ நாராயணனிடம் பேசினோம். ‘‘நான் நடராசன் விவகாரமாக இதைப் பார்க்கவில்லை. அந்த அரசியலுக்குள் போகவும் விரும்பவில்லை. மாறாக, பணத்துக்காக நடைபெற்ற ஒரு கூட்டுச்சதியாகவே இதைப் பார்க்கிறேன்.
‘ஒருவர் எந்த மருத்துவமனையில் மூளைச்சாவு அடைகிறாரோ, அந்த மருத்துவமனை உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புக்களைத் தானமாகப் பெற்றுக் கொள்ளலாம். அந்த மருத்துவமனையின் தேவைக்குப்போக மீதமுள்ள உறுப்புகளை மற்ற மருத்துவமனைகளுக்குத் தரலாம்’ என்று விதி உள்ளது. இதைப் பயன்படுத்தித்தான் குளோபல் மருத்துவமனையும், தஞ்சை அரசு மருத்துவமனையும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன.
அக்டோபர் 3-ம் தேதி இரவு, குளோபல் மருத்துவமனையில் கார்த்திக் மூளைச்சாவு அடைந்தாகச் சொல்லப்படுகிறது. அவர் தஞ்சை அரசு மருத்துவமனையிலிருந்து இங்கு சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளார். அதுவும் தஞ்சை மருத்துவமனையின் ஆலோசனையைமீறிக் கொண்டுவரப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. கார்த்திக்கை அப்படி எளிதாக இடம்மாற்றிக் கொண்டு வரமுடியாது. ஏனென்றால், அவர் கார் விபத்தில் அடிபட்டு சிகிச்சைக்காகச் சேர்ந்தவர். அந்த விபத்து வழக்கை போலீஸ் விசாரித்துக்கொண்டிருக்கிறது. ஆக, அது ‘மெடிகோலீகல்’ வழக்கு. அப்படி இருக்கும்போது, ‘உறவினர்கள் கேட்டார்கள்... அதனால், நாங்கள் அனுப்பிவிட்டோம்’ என மருத்துவமனை எப்படிச் சொல்ல முடியும்? அதற்கு போலீஸ் அனுமதி வேண்டும்.
சரி, போலீஸ் அனுமதி கொடுத்துத்தான் கார்த்திக்கைக் கொண்டுவந்தார்கள் என்றால், அவருடன் எப்படி ஓர் அரசு மருத்துவர் வந்தார்? அதுவும் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸில் அரசாங்க டாக்டரை எந்த அடிப்படையில் யார் அனுப்பி வைத்தார்கள்? இதைக் கேட்டால், ‘எனக்கு ஒன்றும் தெரியாது’ என்கிறார் டீன். இப்படிப் பொறுப்பில்லாமல் பேசும் ‘டீன்’ மற்றும் டீனுக்குத் தெரியாமல் அந்த அரசாங்க டாக்டரை அனுப்பிவைத்த மற்றோர் அதிகார சக்தி இருவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒருவேளை டீனுக்குத் தெரிந்து இது நடந்திருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அந்த இளைஞரின் குடும்பம் மிக ஏழ்மையான குடும்பம். அவர்கள் எப்படி ஏர் ஆம்புலன்ஸை ‘புக்’ செய்து சென்னை வரை வந்தனர்? அவர்களுக்கு யார் பணம் கொடுத்தது? எதற்காக அந்தப் பணம் கொடுக்கப்பட்டது? இவற்றையெல்லாம் பார்க்கும்போது, விபத்தில் காயம்பட்ட இளைஞரை, உயிருடன் இருப்பதாகச் சொல்லி, குளோபல் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து, அங்கு அவரை மூளைச்சாவு அடைய வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு நடத்திய சதி தெரிகிறது. அப்போதுதானே அந்த இளைஞரின் உறுப்புகளை மொத்தமாக அறுவடை செய்ய முடியும்! இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய விசாரணை நடத்தி, உண்மையைக் கண்டறிந்து அவர்களைத் தண்டிக்க வேண்டும்’’ என்கிறார் நாராயணன்.
- ஜோ. ஸ்டாலின் - கே.குணசீலன் - சி.ய.ஆனந்தகுமார் - ம.அரவிந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக