புதன், 21 மார்ச், 2018

ரத யாத்திரை: கள அறிக்கை

 ரத யாத்திரை:  கள ரிப்போர்ட்!மின்னம்பலம் : ராம ராஜ்ஜியம் அமைப்பதற்காகவும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகக் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அயோத்தியில் தொடங்கியது ராம ராஜ்ஜிய ரத யாத்திரை. திட்டமிட்டபடி, அந்த ரதம் மார்ச் நேற்று 20ஆம் தேதி கேரள - தமிழக நுழைவாயிலான நெல்லை மாவட்டம் புளியரை என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைந்தது. இந்த ரத யாத்திரைக்குத் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில் காலையில் தமிழகத்துக்குள் நுழைந்து, மதுரையை நோக்கிச் சென்றது ரதம்.
தமிழக சட்டமன்றத்தை நேற்று உலுக்கிய இந்த நிகழ்வு மக்கள் மன்றத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது? முழு ரிப்போர்ட் இங்கே.
நேற்று காலை எட்டு மணிக்கு நெல்லை புளியரை செக்போஸ்ட் வழியாகத் தமிழகத்துக்குள் நுழைய இருந்தது இந்த ரதம். அதற்காக அந்தப் பக்கம் கேரளா பகுதியில் காலை 6 மணிக்கே தயாராக இருந்தது. ஆனால், தமிழக பகுதியில் ரதத்தை எதிர்த்துப் போராட்டங்கள் அதிகமாகின்றன என்றும், நேற்று முன்தினம் முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்த தகவல் அறிந்தும் கேரள போலீஸார் ரதத்தை தமிழகத்துக்கு அனுப்பும்போது யோசித்தனர்.
தமிழக போலீஸிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின், நேற்று (மார்ச் 20) காலை 9.40 மணிக்கு ரதம் தமிழக எல்லையான புளியரையில் நுழைந்தது.
முன்னெச்சரிக்கை கைதுகள்!
ரதம் நுழையும் புளியரையில் ஆங்காங்கே எதிர்ப்பாளர்கள் கூடியிருந்த நிலையில் அங்கே காலை 6 மணிக்கே போலீஸார் குவிக்கப்பட்டனர். நெல்லை மாவட்ட எஸ்பி அருண், நான்கு டிஎஸ்பிக்கள், 20க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் படை அங்கே குவிக்கப்பட்டது. இந்த முகாம் ஒருபக்கம் இருக்க, ரதத்தை தமிழத்தில் நுழைய விடமாட்டோம் என்று அறிவித்திருந்த திருமாவளவன், ஜவாஹிருல்லா, சீமான், சுப, உதயகுமார், தெகலான் பாகவி, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் ஆகிய தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தது தமிழக போலீஸ்.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் தென்காசியில் மமக பிரமுகர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த ஜவாஹிருல்லாவை போலீஸார் கைது செய்தனர். திருமாவளவனை திருவில்லிபுதூரில் கைது செய்தனர். நேற்று காலை 7 மணிக்கு நாகர்கோவிலில் இருக்கும் சுப.உதயகுமார் வீட்டுக்குச் சென்ற போலீஸார், ‘செங்கோட்டைக்குப் போறியளோ?’ என்று கேட்டிருக்கிறார்கள். இதில் வாதம் வலுத்திருக்கிறது.

‘அரசுக்கு அதிகாரம் இல்லையா? எதேச்சதிகாரத்துக்குதான் அதிகாரமா? 144 தடை உத்தரவு போட்டு எங்களைத் தடுக்கறீங்க? பின்ன எப்படி ரதம் வரலாம்?’ என்று கேட்டிருக்கிறார் உதயகுமார். ‘நீங்க வெளியே வந்தாலே அரெஸ்ட்டுதான்’ என்று சொல்லியிருக்கிறார்கள். பின் தன் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனை செல்வதற்காக வெளியே வந்த உதயகுமாரை வெளியே விடவில்லை போலீஸார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானையும் கைது செய்தனர்.
ரதம் என்கிற லாரி!
ரதம் என்று சொல்லி டிவிகளில் குளோசப்பில் காட்டுகிறார்கள். பெரிதாகத் தெரிகிறது. ஆனால், உண்மையில் இந்த ரதம் என்பது மினி லாரிதான். மினி லாரியின் மீது பெரிதாக கூண்டுபோல எழுப்பி, அதில் முன்பக்கம் பெரிதாக இந்தியில், ‘ராம ராஜ்ஜியம் அமைப்போம்’என்ற பொருளில் இந்தியில் எழுதி வைத்திருக்கிறார்கள். காவி உடை அணிந்தவரே அந்த மினி லாரியை ஓட்டிக்கொண்டிருக்கிறார். இன்னும் இருவர் உள்ளே அமர்ந்திருக்கிறார்கள். லாரிக்குப் பின்னால் மிருதங்கம் உள்ளிட்ட இசைக் கருவிகளோடு சிலர் பாடல்களை பாடி வந்தனர். அந்தப் பாடல்களும் முழுக்க முழுக்க இந்தியில்தான் இருந்தன. ஆக இது என்ன, எதற்காக என்பது இந்தி தெரிந்தால்தான் புரியும்.
கேரளாவுக்குச் சென்றால் மலையாளத்தில் முகப்பு வேண்டும், தமிழ்நாட்டுக்குள் தமிழில் முகப்பு வைக்க வேண்டும் என்ற யோசனையெல்லாம் அவர்களிடம் இல்லை. முழுக்க முழுக்க இந்திதான். இதனால் மக்களுக்கு இது என்னவென்றே தெரியாத சூழல்.
புளியரை செக்போஸ்டில் ரதம் உள்ளே நுழைந்தபோது அங்கே நின்றிருந்த கேரள போலீஸாரிடம் பேசுகையில், ‘அவ்விட திரும்பி நோக்க ஆளில்லா... இவ்விட இத்தன ஜனமா?’ என்று சிரித்தனர். அதாவது, கேரளாவில் இந்த லாரியைத் திரும்பிப் பார்க்க ஆளில்லை. ஆனால் தமிழகத்தில் இத்தனை பேர் கூடியிருக்கிறார்களே என்று வியப்பு தெரிவித்தனர். கேரளாவில் ஏன் சார் இத்தனை எதிர்ப்பு இல்லை என்று அந்த போலீஸாரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘அங்கேதான் தினம் தினம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்களே சார்’ என்று அதற்குப் பதில் சொன்னார் அந்த போலீஸ்காரர்.

மோடியை விட எடப்பாடியே இலக்கு!
புளியரையில் ஆரத்தி எடுத்து ரதத்தை வரவேற்றனர். இதற்காக எதிர்ப்பாளர்களை விட ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். மேலும் சீருடை அணியாத போலீஸார் அதிகம் இருந்தனர். அவர்கள் போராட்டக்காரர்களை விரட்டும்போது, ‘எங்களை விரட்டுறீங்களே... காவிபோட்டுக்கிட்டு நூறு பேர் நிக்கிறாங்களே... அவங்களுக்கு 144 கிடையாதா?’ என்று போலீஸாரை இளைஞர்கள் கேட்டனர்.

ஆனால், போலீஸாருக்கு ஒரே உத்தரவு என்னவென்றால், ‘எதிர்ப்பாளர்கள் யாரோடும் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம்’ என்பது. தூத்துக்குடி மார்க்சிஸ்ட் பேரணி மோதல் போன்ற சம்பவங்களை அடுத்து யாருடனும் பேச வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதனால் போலீஸார் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. ‘ஓரமா போங்க, கலைஞ்சு போங்க’ என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பு வந்துவிடக் கூடாது என்பதில் போலீஸார் கவனமாக இருந்தனர்.
எதிர்ப்பாளர்களின் கோஷத்தில் முக்கியமான இலக்கானது முதல்வரும், துணை முதல்வரும்தான். செல்லும் இடங்களில் எல்லாம், ‘அடிமை எடப்பாடியே பதவி விலகு, அடிமை பன்னீர்செல்வமே பதவி விலகு...’ என்று தமிழக அரசை எதிர்த்தே அதிக முழக்கங்கள் ஒலித்தன.
நான்கு டிஎஸ்பிகள், 20 இன்ஸ்பெக்டர்கள்
நான்கு டிஎஸ்பிக்கள், 20 இன்ஸ்பெக்டர்கள் அந்த லாரியைச் சுற்றி வந்துகொண்டே இருக்க, மெல்ல செங்கோட்டைக்கு வந்தது. வரும் வழியெல்லாம் எதிர்ப்பாளர்கள், சாலையோரங்களிலும் சற்று தள்ளியும் கூடியிருந்தோர் கலைக்கப்பட்டனர். ஆனாலும் செல்லும் இடங்களிலெல்லாம் மதிமுக கொடிகள், நாம் தமிழர் கொடிகள், மனிதநேய மக்கள் கட்சிக் கொடிகள் மரங்களில் கட்டப்பட்டிருந்தனர். அவற்றை எல்லாம் அவிழ்த்துச் சேகரித்துக்கொண்டே சென்றது போலீஸ்.
கிளைச் சாலைகள் எதிலும் ரூட் வழங்காமல் மெயின் ரோட்டில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பிரச்சினை எது வந்தாலும் இதுவே பாதுகாப்பு என்று கருதினர் போலீஸார். கிளைச் சாலைகளில் ரூட் கொடுத்தால் போராட்டக்காரர்களுக்கு வாய்ப்பாகிவிடும் என்பதால்தான் இந்த ஏற்பாடு.
‘மார்ச் 23 கன்னியாகுமரியை கிராஸ் பண்கிறவரைக்கும் ஒவ்வொரு நிமிஷமும் இந்த லாரியைச் சுத்தி நாலு டிஎஸ்பிகள், 20 இன்ஸ்பெக்டர்கள் இருக்கணும். எங்களுக்கு வேற வேலை இல்லேன்னு நினைச்சுட்டாவ’ என்று அங்கலாய்த்துக் கொண்டார் ஓர் இன்ஸ்பெக்டர்.

திமுக பங்கு குறைவே!
ரத லாரி நுழைந்த புளியரை, செங்கோட்டை, தென்காசி என நேற்று பல பகுதிகளில் எதிர்ப்புப் போராட்டம் நடந்ததில் பெரும்பாலும் மமக, எஸ்டிபிஐ, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினர்தான் இருந்தனர். திமுக கொடிகளைப் பெரும்பாலும் களத்தில் காணவில்லை. திமுகவின் நிர்வாகிகள் யாருக்கும் ரதத்தை எதிர்த்துக் களத்தில் இறங்கிப் போராடுமாறு அறிவுறுத்தல் இல்லை. அதேநேரம் சட்டமன்றத்தில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியேற்றப்பட்டுச் சாலை மறியல் செய்து கைதானார் அல்லவா... ஸ்டாலின் கைதைக் கண்டித்து நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் சாலை மறியல் செய்தார்கள்.
மற்றபடி ரத லாரியைத் திட்டமிட்டு எதிர்ப்பதில் முனைப்பு காட்டியவர்கள் மமக, எஸ்டிபிஐ, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினர் தான். இந்தக் களப் போராட்டத்தில் பெரிதாக திமுக இல்லை என்பது உளவுத்துறையாலும் முக்கியக் குறிப்பாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
நேற்று இரவு ரதம் திருவில்லிபுத்தூரில் பயணத்தை முடித்துக் கொண்டு மதுரை நோக்கிச் சென்றது. ராமேஸ்வரம், நெல்லை, கன்னியாகுமரி என்று மீண்டும் கேரளாவுக்குள் வரும் 23ஆம் தேதி நுழைகிறது இந்த ரதம். அதுவரை போலீஸார் கண்ணில் விளக்கெண்ணெய்விட்டுக் கண்காணிக்க வேண்டிய கட்டாயம். இதனால் தென் மாவட்ட போலீஸாரின் ஒட்டுமொத்த கவனமும் முக்கியப் பிரச்சினைகளில் இருந்து திசை திரும்பி, இந்த ரதத்தின் மீதே குவிக்கப்பட்டிருக்கின்றன.
- ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக