திங்கள், 12 பிப்ரவரி, 2018

பட்டாகத்தியுடன் இளைஞர்கள் அண்ணா சாலையில் சுதந்திரமாக ..... போலீசார் விசாரணை!

tamilthehindu :கத்தியுடன் திரியும் இளைஞர்கள் அண்ணா சாலை சத்யம் திரையரங்கம் அருகே கையில் பட்டாக்கத்தியுடன் திரிந்த 3 இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மூவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
பொது இடங்களில் இளைஞர்கள் சண்டை போட்டுக்கொள்வதற்கு ஆயுதங்களுடன் திரிவதும், கத்தியுடன் மோதுவதும் வாடிக்கையாகி வருகிறது.
சமீபத்தில் பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மாணவர்களுக்குள் நடந்த மோதலில் பட்டாக்கத்தியுடன் மோதி பயணிகளை ஓடவிட்டார்கள். பிறந்த நாளைக் கொண்டாடுகிறேன் என ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் கூடி கொண்டாட்டம் போட்டு சிக்கினர். பலர் தப்பி ஓடிவிட்டனர்.

சென்னையில் நாளுக்கு நாள் பரபரப்பு கூடி வருவதும் ஆயுதங்களுடன் பொதுமக்களுக்கு தொல்லை தருவதும் வாடிக்கையாகி வருகிறது. இன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கம் அருகே 3 இளைஞர்கள் கையில் பட்டாக்கத்திகளுடன் சாலையில் கோபமாக யாரையோ தாக்க கிளம்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது சில இளம் பெண்கள் அவர்களை சமரசம் செய்யும் வகையில் கெஞ்சி தடுத்துக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அக்கம் பக்கத்து ஆட்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாசாலை போலீஸார் அவர்கள் மூவரையும் ஆயுதங்களுடன் பிடித்தனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் மூவரும் செம்மஞ்சேரியைச் சேர்ந்த மணி(20), ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையை சேர்ந்த மணி கண்டன்(22), ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(46) என தெரியவந்தது, உறவினர்களான இவர்கள் குடும்பத் தகராறில் மோதிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதற்காக தங்களிடமிருந்த பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் தெருவில் இறங்கி சண்டைப் போட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக