திங்கள், 12 பிப்ரவரி, 2018

கன்னடத்து ஜல்லிகட்டு ! கம்பளாவுக்குத் தடை விதிக்க மறுப்பு!...

கம்பளாவுக்குத் தடை விதிக்க மறுப்பு!மின்னம்பலம்: கம்பளா போட்டிக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 12) தெரிவித்துள்ளது.
”கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான, கம்பளா போட்டியின்போது எருதுகள் துன்புறுத்தப்படுகின்றன. எனவே கம்பளா போட்டிக்குத் தடை விதிக்க வேண்டும்” என பீட்டா அமைப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தது.
2016ஆம் ஆண்டு, நவம்பர் 18ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே. முகர்ஜி, நீதிபதி கே. சோமசேகர் ஆகியோர் கம்பளா பந்தயத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து, கம்பளாவுக்கு விதித்த தடையை விலக்கக் கோரி, 'தட்சிண கன்னடா கம்பளாக் குழு' கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த மனு மீதான விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை மனுதாரர் காத்திருக்க வேண்டும் எனக் கூறி விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து, கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பளா மீதான தடையை நீக்குமாறு மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2017 பிப்ரவரி 10ஆம் தேதி, கம்பளா அவசரச் சட்ட மசோதா கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 13ஆம் தேதி கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை ஆதரவோடு கம்பளா சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கர்நாடகாவில் கம்பளாப் போட்டிகள் நடைபெற்றுவந்தன.
அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் கம்பளா போட்டிகளுக்கு எதிராகவும் பீட்டா மீண்டும் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கின் மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (பிப்ரவரி 12) விசாரணைக்கு வந்தது.
அப்போது பீட்டா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, “கம்பளாப் போட்டிக்கு கர்நாடக அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தம் முடிந்துவிட்டது. இந்தப் போட்டிகள் பிப்ரவரி 18ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. எனவே கர்நாடக மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் கம்பளாப் பந்தயங்களை நடத்தக் கூடாது என்று இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என வாதாடினார்.
கர்நாடக மாநில அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த்,”கம்பளாப் போட்டி நடத்துவதற்கான அவசரச் சட்டம் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “கம்பளாப் பந்தயத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கின் மறு விசாரணையை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக