வியாழன், 22 பிப்ரவரி, 2018

கமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்



வினவு :லைக்கா கம்பெனியின் தயாரிப்பில் சாபாஷ் நாய்டுவும், எந்திரன் 2.0 படமும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் போது கமல், ரஜினி இருவரும் ஒரே நேரத்தில் கட்சி ஆரம்பிப்பதும் தற்செயலான நிகழ்வுகளல்ல. ஐரோப்பிய நாடுகளில் ஊழல், கருப்புப் பணம், முறைகேடான வர்த்தக நடவடிக்கைள் மூலம் செல்பேசி சாம்ராஜ்ஜியத்தை அமைத்தருக்கும் ஒரு திருட்டு முதலாளியிடம் ஊதியம் என்ற பெயரில் கோடிகளைச் சுருட்டும் இந்த இரட்டையர்களிடம் போய் அரசியல் பேசுவதும், எதிர்பார்ப்பதும் அதை ஒட்டி நமது ஊடகங்களில் பெரும்பான்மை நேரங்கள் திருடப்படுவதும் தமிழ்நாட்டின் சாபக்கேடு அன்றி வேறென்ன?
யா, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிகிறார் ஒருவர். திடீரென்று ஒரு நாள் தனது தொழிலை மாற்றிக் கொண்டு தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கப் போகிறேன் என்று அவர் அறிவிப்பதாக வைப்போம். உடனே தொலைக்காட்சி விவாத நெறியாளர்கள் அனைவரும், அவர் பிரபலமான ஆளாக இருப்பதால், மரம் ஏறும் தொழிலுக்கு வருபவர் என்ன செய்வார் என பயங்கரமான விவாதங்களை நடத்துகிறார்கள். சூட்டு கோட்டு போட்டுக் கொண்டு கணினியில் விரல் பிடித்து டேட்டாக்களோடு உறவாடும் ஒருவர் எப்படி தென்னை மரம் ஏறுவார் என்று சிலர் கேட்டால், நமது நெறியாளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

 படங்களில் நடித்து அலுத்துப் போன காலத்தில் கமலின் அரசியல் அவதாரம்
அவர் இன்னும் தென்னை மரமே ஏறவில்லை, அதற்குள் ஏன் கருத்து சொல்கிறீர்கள், அதற்குள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று பொங்குகிறார்கள், மடக்குகிறார்கள். ஒரு சிஇஓ எப்படி ஐயா நெஞ்சைத் தேய்த்து தினமும் ஐம்பது தென்னை மரங்கள் ஏற முடியும், இதெல்லாம் சாத்தியமில்லையே என்று கேட்டால், மரமேறுவது அவரது உரிமை, மறுப்பது ஜனநாயகமின்மை என்று படுத்தி எடுக்கிறார்கள் நமது பத்திரிகையாளர்கள்.

அப்படித்தான் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கமல்ஹாசன் அறிவித்த போதும் சரி, இன்று அவர் அப்துல் கலாம் சமாதியிலிருந்து தனது அரசியல் பிரவேச நிகழ்ச்சிகளை மார்க்கெட் செய்யும் போதும் சரி, அவருடைய கட்சி, கொள்கை, கொடி எல்லாம் வரப் போகிறது அதன் பிறகு அவருடைய கருத்துக்கள், அரசியல் சரியா என்று விவாதிக்கலாம் என்று உபதேசிக்கிறார்கள்.
களத்தூர் கண்ணம்மாவிலிருந்து, சபாஷ் நாயுடு வரை  கமல்ஹாசனது படங்களும் சரி, படங்களுக்கு வெளியே அவர் பேசியவைகளும் சரி, நடந்து கொண்டவைகளும் சரி அவரது கொள்கைகள் இன்னதுதான் என ஃப்ளூபிரிண்ட் போட்டு காட்டிக் கொண்டிருப்பதை இவர்கள் எவரும் பார்க்கவில்லை. அல்லது உணரவில்லை, கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு திரைப்பட நட்சத்திரமானவர், தன்னைச் சுற்றி மின்னும் ஒளிவட்டத்திலேயே வாழ்வதால், அவருக்கு அந்த ஒளி வட்டத்தைத் தாண்டி இருக்கும் உலகம் பற்றி எதுவும் தெரியாது. அதாவது உலகமே அவரது ஒளிவட்டத்தின் முன் மண்டியிடுவதால் அவர் சொல்வதுதான் உலகம், அவர் விளக்குவதுதான் உலகம். இதை யாராவது மறுக்க முனைந்தால் அவரது தர்பாரில் சாத்தியமே இல்லை. ஏனெனில் கமல்ஹாசனைச் சுற்றியிருக்கும் கிச்சன் கேபினட்டோ இல்லை ரசிகர் மன்ற நிர்வாகிகளோ அனைவரிடத்திலும் அவர்தான் பேசுவார், அவர்தான் கேட்பார், அவர்தான் முடிவெடுப்பார், அவர்தான் தீர்மானிப்பார்.
ஒரு மனிதன் என்ன மாதிரியான சூழலில், வர்க்கப் பின்னணியில் உருவாக்கப்படுகிறான் என்பதை பொறுத்தே அவனது வாழ்க்கை குறித்த கண்ணோட்டமோ இல்லை அரசியல் புரிதலோ, அரசியல் நிலைப்பாடோ இருக்கும். இருந்தே தீரும். அந்த வகையில் பார்த்தாலும் கமல்ஹாசனின் அரசியல் என்ன என்பதை அணுஅணுவாக விளக்க முடியும். இங்கே நாம் கமல்ஹாசனிடம் கொள்கை இல்லை என்று பேசவில்லை. அவர் கொள்கையை இனிமேல் புதிதாக விளக்க வேண்டியதில்லை என்றே கூறுகிறோம்.

வருவாயோடு, அரசியல் விளம்பரத்தையும் தேடிய கமலின் “Big Boss” அவதாரம்
ஒரு திரைப்பட நட்சத்திரமாக, ஒட்டி வரும் மேட்டுக்குடி வாழ்க்கை, தனது பிரபலத்தை வைத்து தயாரிப்பு, திரைப்பட உருவாக்கம், வணிகம் அனைத்தையும் தீர்மானிக்கும் கமல், அரசியல் என்று வரும்போது என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பது அவர் கட்சி அறிவித்துத்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
“நான் வலதுசாரி, இடதுசாரி என எல்லா சாரிகளையும் பார்ப்பேன், பேசுவேன், எந்த சாரியும் எனக்கு அன்னியமில்லை, So, நான் எந்த சாரி என்று கேட்காதீர்கள்  Sorry” என்று உலகநாயகன் பல இடங்களில் சலிப்பூட்டும்படி கூறிவிட்டார். இந்த ஸ்டேட்மெண்டிலேயே அவரது நிலைப்பாடு தெளிவாக இருப்பினும், அரசியல் தெரியாத அம்மாஞ்சிகள் அவர் நடுநிலை இடத்தில் இருப்பதாகவும், புதிய இடம் ஒன்றை உருவாக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.
ஆங்கில சேனல்களில் அவர் அளித்த பேட்டியிலும் தான் கம்யூனிசத் தலைவர்களை மட்டுமல்ல, பிரதமர் மோடியையும் பார்ப்பேன் என தெளிவாக கூறியிருக்கிறார்.
ஐயா, உடன்கட்டை ஏறுதல் எனும் ஒரு பிரச்சினையைப் பார்ப்போம். இதில் இடதுசாரிகள் இன்னபிற ஜனநாயக சக்திகள், உடன்கட்டை ஏறுவதை பார்ப்பனியம் உருவாக்கிய கொடூரமான ஆணாதிக்கம் என்று எதிர்க்கிறார்கள். இன்றும் பாஜகவில் இருக்கும் தீவிர பார்ப்பனிய இந்துத்துவவாதிகள் உடன்கட்டை ஏறுவதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கின்றனர்.
இன்று ராஜஸ்தான் மாநில முதல்வராக இருக்கும் வசுந்தரா ராஜேவின் தாயார் விஜயராஜே சிந்தியா 2001-ம் ஆண்டில் இறந்தார். ராஜ வம்சத்து குடும்ப மாதாவான இந்த சிந்தியா, அதே ராஜஸ்தானில் ரூப்கன்வர் எனும் பெண் உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்டபோது பகிரங்மாக ஆதரித்தார். சதிமாதா என்று வழிபடவும் செய்தார்
இப்போது கமல்ஹாசனின் எல்லா சாரிகளோடும் கொஞ்சிக் குலாவும் நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள். இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இஸ்லாமிய எதிர்ப்பு, முஸ்லீம் நாடுகளின் விசாக்களை ரத்து செய்தல், ராஜபக்ஷேவின் சிங்கள இனவெறி – தமிழினப் படுகொலை, தருமபுரி இளவரசன் தற்கொலையை மறைமுகமாக ஆதரிக்கும் பா.ம.க, மாட்டுக்கறியின் பெயரில் முஸ்லீம்களைக் கொல்லும் இன்றைய பாஜகவினர், என பல விடயங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். அதன் படி கமல்ஹாசன் எடுக்கவேண்டிய நிலையில் நடுநிலை என்ற வெங்காயம் எங்கேயாவது ஒளிந்து கொண்டிருக்கிறதா?

ஊழல் முதலாளி லைக்காவின் தயாரிப்பில் கமலின் சபாஷ் நாயுடு திரைப்படம்
ஊழல் எதிர்ப்பில் அப்பாடக்கராக காட்டிக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் இலங்கை, காஷ்மீர் பிரச்சினைகளில் இந்திய அரசு – காங்கிரசு – பாஜகவின் நிலைப்பாடுகளைத்தான் எடுத்தார். கங்கை, இந்து என தன்னையும் ஒரு புனித இந்துவாக காட்டிக் கொண்டார். இவரோடு ஆரம்பத்தில் இருந்த யோகந்திர யாதவ், ஒரு கட்சி துவங்கும் போது அதற்கு தெளிவான இடதுசாரி, வலது சாரி என்று கொள்கைகளை தேடவேண்டியதில்லை. அவை காலப்போக்கில் உருவாகும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய தேவையன்றி கொள்கை இன்னதுதான் என வரையறுக்கத் தேவையில்லை. இப்போது அவரே கேஜ்ரிவாலோடு குடும்பம் நடத்த முடியவில்லை, விலகிவிட்டார். ஆம் ஆத்மியின் கொள்கையும் நாகரீகமான காங்கிரசு கொள்கை, நாகரீகமான இந்துத்துவம் என்பதாக வெளிப்பட்டுவிட்டது. இவை ஆரம்பத்தலேயே ஆம் ஆத்மி எனும் என்ஜிவோ பின்னணியிலேயே தெரிந்து போன விசயம் என்பதே முக்கியம்.
ஆகவே கமலைப் போன்ற பெருந்தன மேட்டுக்குடிக்காரர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் பெரும்பாலான பொருளாதார, சமூக, அரசியல் நிலைப்பாடுகளைத்தான் கொண்டிருக்கிறார்கள். அதில் குறிப்பாக கேட்டால் விளக்கெண்ணெயில் நழுவிப் பேசுவார்கள். ஏனெனினில் ஆளும் வர்க்கத்தின் பழைய முகங்களிலிருநது தம்மை பிரித்துக் காட்ட நினைக்கிறார்கள். அதற்குத்தான் இத்தகைய கொள்கை கோட்பாடு போன்ற மேக்கப் சமாச்சாரம்.
ராமேஸ்வரம் சென்ற திரு கமல்ஹாசனிடம், அங்கேயிருக்கும் மீனவர்கள், இலங்கை – இந்தியக் கடற்படைகள் செய்யும் அட்டூழியம் குறித்து சொன்னால் அவரது பதில் என்ன? அவர்கள் சொல்வதற்கு முன்பேயே இந்தப் பிரச்சினை தீவிரமாக இருக்கும் போது அவரது நிலை என்ன? இதனால் தேசபக்தரான அவர் இந்திய அரசையோ, இல்லை கடற்படையையோ எதிர்ப்பாரா? இல்லை தமிழக அரசுகள் எழுதும் கடிதம் போல மத்திய அரசுகளுக்கு ஐந்து காசு பெறாத கோரிக்கைகளை வைப்பாரா? இதில் என்னய்யா கமலின் ஸ்பெஷல் வந்துவிடப் போகிறது?
ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதும் சரி, இன்றளவும் அவர் மோடியையோ இல்லை அவரது கொடுங்கோன்மைக் கொள்கைகளையோ இல்லை சங்க பரிவாரத்தின் கொடூரக் கொலைகளையோ கமல் எதிர்க்காததன் மர்மம் என்ன? இல்லை  எதிர்ப்பதாக இருந்தால் அக்லக் கொலைக்கு நீதி வேண்டும் என அவர் போராடுவாரா? ஜூனைத் கானின் கொலைக்காக ஆர்ப்பாட்டம் செய்வாரா?
எல்லா சாரிகளையும் பார்த்த கமல் அவர்கள், அதிமுக தலைவர்களை மட்டும் பார்க்கமாட்டேன் என கறாராக கூறிவிட்டாராம். கைப்பிள்ளைகளை இப்படி வீரத்துடன் எதிர்க்கும் திருவாளர் கமல் அவர்கள், கையில் தடியுடன் இருக்கும் பாஜக மத்திய அரசை மட்டும் எதிர்க்கவில்லை என்பதோடு போய் பிரதமரை சந்திக்கிறார், சந்திப்பேன் என்று கூறினால் அது அயோக்கியத்தனம் இல்லையா? அந்தப்படிக்கு கமலை விட எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் மோசமில்லை என்பதில் என்னய்யா தவறு?  ஏனெனில் இந்த இரட்டையர் ஜெயா காலந்தொட்டு விசுவாமான அடிமை என்பதை வெளிப்படையாக காட்டிக் கொண்டவர்கள். என்ன இவர்களுக்கு கமலைப் போல ஒரு உடைந்த ஆங்கிலத்தில் பேசத் தெரியாது. அவ்வளவே! கமலைப் போன்றவர்கள் ஆங்கில பீட்டர் பாணியில் ஜெயா, மோடி நாட்டாமைகளின் அடிமையாக கொஞ்சம் ஃபேஷனாக காட்டிக் கொள்கிறார்கள். மற்றபடி சிவப்பாக இருப்பவுனும் அடிமையாக இருக்கமாட்டான் என்று  இந்தநாடு நம்புகிறது என்றால் அது நாசமாகப் போகட்டும்!
அம்பானி உழைத்து முன்னேறியதாக நம்பும் இந்த காரியவாதியின் பொருளாதாரக் கொள்கை எப்படி இருக்கும்? நீரவ் மோடியுடன் பிரதமர் மோடி மட்டுமல்ல, கமல்ஹாசனும் போஸ் கொடுக்காமல் போவாரா என்ன?. இன்னும் விவசாயிகள் தற்கொலை, கல்வி – சுகாதாரம் தனியார் மயம், உலகமயம் என்று இந்தியாவின் அடிப்படையான பிரச்சினைகளில் இவர் அவற்றை எதிர்க்கின்ற பக்கத்தில் நிச்சயமாக இல்லை. வளர்ச்சிக் கொள்கை என்று மோடி பேசி நாட்டை ஏமாற்றியது போல பேசுவது அன்றி வேறு என்ன எதிர்ப்போ, மாற்றோ இருக்க முடியும்?

போத்தீஸ் விளம்பரத்தில் நடித்த கமல் கோ ஆப்டெக்ஸ் மூலம் கைத்தறியை வளர்ப்பாராம்!
நீட் பிரச்சினையில் தமிழகம் நீட்டைத் துரத்த வேண்டும் என்பது போய் இப்போது நீட் தேர்வில் அரசே பயிற்சி கொடுக்க வேண்டும் என்று பல ஓட்டுக் கட்சிகளும் ஒதுங்கிவிட்ட நிலையில் கமல்ஹாசன் என்ன கூற முடியும்? தான் ஆட்சி வந்தால் ஊழல் அற்ற, நல்ல முறையில் பயிற்சி மையங்கள் கொடுக்க முடியும் என்பதுதானே அவரது நிலை?
அப்பல்லோ போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வளர்ச்சியும், அரசு மருத்துவமனைகள் திட்டமிட்டே அழிக்கப்டுவதுமான நாட்டில் திரு கமல் அவர்கள் என்ன செய்வார்? இல்லை ஆண்டுக்காண்டு பச்சமுத்து அல்லது விஸ்வநாதன் பல்கலைகளில் போய் பட்டங்களை கொடுத்தோ, பெற்றோ மகிழும் கமல் அவர்கள், கல்வி தனியார் மயம் எனும் புற்று நோய் குறித்து என்ன சொல்வார்? நல்ல முறையில் தனியார் கல்வியை உயர்த்துவேன் என்று சொல்வார்! அதாவது ஏழைகள் நல்ல முறையில் கல்வியின்றி, வேலையின்றி வாழ்வதற்கு ஆவன செய்வார்!
ஐ.டி, உள்ளிட்டு உற்பத்தி சார்ந்த தொழில்துறைகளில் கூட இன்று தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்பட்டு, தொழிற்சங்கங்கள் முடக்கப்பட்டு, நிரந்தர தொழிலாளர்கள் நீக்கப்பட்டு, மலிவு விலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் அமர்த்தப்படும் நிலையில் கமலின் நிலை என்ன? ஏதாவது ஹூண்டாய் காரின் புதிய மாடல் வந்தால் அதற்கு போய் போஸ் கொடுத்து விழாவில் சிறப்பிப்பாரே ஒழிய, ஹூண்டாய் தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கம் கட்டுவதற்கோ இல்லை போராடுவதற்கோ போய் முன்னே நிற்பாரா?
ஆக எப்படிப் பார்த்தாலும் திரு  கமல் அவர்கள் சற்றே மேம்போக்கான தம்மாத்துண்டு முற்போக்கு வேடத்தில் இந்திய ஆளும் வர்க்கம் கொண்டிருக்கும் அத்தனை பிற்போக்கு கொள்கைகளையும் வழிபடுபவரே அன்றி வேறு அல்ல.
அரசியல்படுத்தப்படாத நடுத்தர வர்க்கமோ இல்லை அதன் பார்வையோ சமூகத்தின் பொதுப்புத்தியை தீர்மானிக்கும் காலத்தில் கமலைப் போன்ற புதிய ஆளும் வர்க்க பிரதிநிதிகளின் செல்வாக்கு இல்லை என்று நாம் சொல்லவில்லை. ஆனால் தெரிந்த அந்த கொள்கைகளின் படி அவரை மதிப்பிடவதும், கேள்வி கேட்பதையும் விடுத்து அவர் ஏதோ புதிய நிலை, கொள்கை எடுப்பார் என்று ஆய்வு செய்தால் அது காலையில் சிரமத்துடன் போகும் ஆய்-ஐ இழிவு படுத்துவதாகும்.
இன்று இராமநாதபுரம், மதுரையில் கமல் போகும் இடங்களில் அவரது சினிமா பாடல்கள் ஒலிக்கின்றன. அவரது கிச்சன் கேபினட் கூட்டம் எல்லா இடங்களிலும் போற்றிப் புராணம் பாடுகிறது. கமலோ கை காட்டுகிறார். ஓரிரு வார்த்தைகளில் பேசுகிறார். இனி நான் நடிகன் இல்லை, உங்கள் வீட்டு குத்து விளக்கு, அந்த விளக்கை காப்பாற்றுவது உங்கள் பொறுப்பு என்கிறார். அல்பத்தனமான சென்டிமெண்டை தவிர இந்த உளறில் ஏதாவது பொருள் இருக்கிறதா?
அப்துல்கலாம் சமாதியை அவர் தேர்ந்தெடுத்திருப்பதே ஒரு நல்ல சான்று. பார்ப்பனியமயத்தை ஏற்றுக் கொண்ட ஆளும் வர்க்க ஊது குழலான அப்துல் கலாமை இந்துத்துவவாதிகள், இடதுசாரிகள், நடுத்தர வர்க்கம், கலெக்டர் ஆபிஸ் சிப்பந்திகளின் ஊழலை எதிர்க்கும் பார்த்தசாரதிககள் என அனைவரையும் கவர் செய்வதே அவரது நோக்கம். அப்துல் கலாம் படித்த பள்ளியில் அவரை விடவில்லையாம். உடனே தான் கலாமிடம் பாடம் கற்பதை யாரும் தடுத்த நிறுத்த முடியாது என்கிறார். இராமநாதபுரத்தில் இல்லாத அரசு பள்ளிகளா? அங்கே வாத்தியார் முதல் கழிப்பறைகள வரை இல்லாத நிலையை தமிழகத்தில் எங்கேயும் பார்க்கலாமே?
இவரது கட்சி ஆரம்பிககும் வைபவத்தை பாராட்டிய சந்திரபாபு நாயுடு, கொள்கைகள் முக்கியமில்லை, மக்களுக்கு சேவை செய்வதே முக்கியம் என்று சொன்னதாக கமல் கூறியிருக்கிறார். கவனியுங்கள், கொள்கைகள் முக்கியமில்லை என்று அவர் ஒத்துக் கொள்கிறார். இந்த இலட்சணத்தில் இந்த கைப்பிள்ளையிடம் கொள்களை கோட்பாடு என்று கும்மியடிக்கும் கூட்டத்தை கொட்டுவது எப்படி?
அதிகபட்சம் அடுத்த தேர்தலில் இவர் யார் ஓட்டுக்களை பிரிப்பார், பாஜகவிற்கு எந்த விதத்தில் பயன்படுவார், போராடும் தமிழக மக்களின் அரசியலை எப்படி நீர்த்துப் போகச் செய்வார் என்பதைத் தாண்டி திரு கமல்ஹாசனுக்கு எந்த முக்கியத்துவமும், எப்படி முக்கி யோசித்தாலும் இல்லை. ஒரு ஓட்டுக் கட்சி தேர்தலில் எவ்வளவு வாக்குகளை பிரிப்பார் எனும் அற்ப விசயத்தற்கு இத்தனை விவாதம், தலைப்புச் செய்திகள், நேரலை காட்சிகள் போன்ற எழவுகள் தேவையா?
லைக்கா கம்பெனியின் தயாரிப்பில் சாபாஷ் நாய்டுவும், எந்திரன் 2.0 படமும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் போது கமல், ரஜினி இருவரும் ஒரே நேரத்தில் கட்சி ஆரம்பிப்பதும் தற்செயலான நிகழ்வுகளல்ல. ஐரோப்பிய நாடுகளில் ஊழல், கருப்புப் பணம், முறைகேடான வர்த்தக நடவடிக்கைள் மூலம் செல்பேசி சாம்ராஜ்ஜியத்தை அமைத்தருக்கும் ஒரு திருட்டு முதலாளியிடம் ஊதியம் என்ற பெயரில் கோடிகளைச் சுருட்டும் இந்த இரட்டையர்களிடம் போய் அரசியல் பேசுவதும், எதிர்பார்ப்பதும் அதை ஒட்டி நமது ஊடகங்களில் பெரும்பான்மை நேரங்கள் திருடப்படுவதும் தமிழ்நாட்டின் சாபக்கேடு அன்றி வேறென்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக