வியாழன், 22 பிப்ரவரி, 2018

பஞ்சாப் தேசிய வங்கி : நீரவ் மோடியின் கொள்ளை நடந்தது எப்படி?

வினவு : பஞ்சாப் தேசிய வங்கியில் நடந்த ஊழலை அப்படியே மூடி மறைக்கவும், பழியை காங்கிரசின் மீதோ அல்லது முடிந்தால் வங்கி ஏ.டி.எம்மின் காவலாளி மீதோ சுமத்தி விடும் முனைப்பில் உள்ளது பாரதிய ஜனதா. பாரதிய ஜனதா மற்றும் அதன் அல்லக்கை ஊடகங்களின் மேற்படி முயற்சிகள் எல்லாம் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இதை மறக்கடிக்கச் செய்யும் வகையில் இதை விட பெரிய “செய்திகளுக்காக” பாரதிய ஜனதாவும் அதன் ஊதுகுழல்களும் தவமிருந்து வருகின்றனர். வழக்கமான இருகோடுகள் தத்துவம் தான்.>எப்படியாயினும், இந்த ஊழல் எப்படி நடந்தது என்பதையும், யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதையும், பலனடைந்தவர்களைக் குறித்தும் நாம் விளக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பீரோ புல்லிங் உள்ளிட்ட திருடர்களின் “திறமைகளை” அறிந்து கொள்வது திருட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கு முன் நிபந்தனை அல்லவா? குற்றம் நடந்தது எப்படி?


நீரவ் மோடி தன் மனைவியுடன், அவர் தம்பி நீஷல் மோடி தன் மனைவியுடன்
நீரவ் மோடி ஒரு வைர வியாபாரி. நீரவ் மோடி, அவரது மனைவி ஏமி, சகோதரர் நீஷல் மோடி மற்றும் இவர்களது மாமா மேகூல் சோக்சி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து டையமண்ட் ஆர் யு.எஸ், சோலார் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டெல்லார் டையமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தனர்.
இவை தவிற பையர்ஸ்டார் டையமன்ஸ் எனும் நிறுவனம் ஒன்றைச் சொந்த முறையில் துவங்கி நடத்தி வந்த நீரவ் மோடி, தில்லி, மும்பை, நியூயார்க், ஹாங்காங் உள்ளிட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 16 பெரு நகரங்களில் வைரக் கடைகளை நடத்தி வருகிறார். நீரவ் மோடியின் மாமா மெகூல் சோக்சி கீதாஞ்சலி குழுமம் எனும் பெயரில் வைர வியாபாரம் செய்து வருகிறார். நீரவ் மோடியின் இளைய சகோதரர் நீஷல் மோடி அம்பானி சகோதரர்களின் மருமகளைத் திருமணம் முடித்துள்ளார் (அம்பானிகளின் சகோதரி மகள்).
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 85-வது இடத்தில் உள்ள நீரவ் மோடியின் சொத்து மதிப்பு 11,245 கோடிகள் (இம்மாதம் 15ம் தேதிக் கணக்குப் படி). 48 வயதாகும் நீரவ் மோடி வளர்ந்ததும் படித்ததும் பெல்ஜியத்தில். 2008ம் ஆண்டு வைர நகை வடிவமைப்புத் தொழிலைச் சிறிய அளவில் துவங்கும் நீரவ் மோடி, 2010ம் ஆண்டு வங்கி வலைப்பின்னல்களிலும் அவற்றின் விதிமுறைகளிலும் உள்ள ஓட்டைகளைக் குறித்து அறிந்து கொள்கிறார்; இதன் பின்னர் தான் இவரது அபரிமிதமான வளர்ச்சியை அடைகிறார்.
நீரவ் மோடி கண்டுபிடித்த வங்கி விதிமுறைகளில் உள்ள ஓட்டைகள் என்ன?
முதலில் வங்கி உத்திரவாதப் பத்திரம் (Letter of Undertaking) என்பது ஒரு வங்கி தனது வாடிக்கையாளருக்காக இன்னொரு வங்கிக்கு அளிக்கும் உத்திரவாதம். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள், வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய வங்கி உத்திரவாதப் பத்திரங்களையே அதிகம் நாடுகின்றனர். உதாரணமாக நீங்கள் வெளிநாட்டில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் உங்களது வங்கி அந்தப் பொருளின் மதிப்புக்கு இணையான உத்திரவாதப் பத்திரத்தை வழங்கும். அந்த பத்திரத்தை நீங்கள் வெளிநாட்டில் யாரிடம் இருந்து பொருள் வங்குகின்றீர்களோ அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு அனுப்புவீர்கள்.
அந்த நாட்டில் உள்ள உங்களின் வங்கிக் கிளைக்கு அந்த உத்திரவாதப் பத்திரம் (உங்களுக்குப் பொருள் விற்பவரின் வங்கி) அனுப்ப்பட்டு பணமாக மாற்றிக் கொள்ளப்படும். இப்போது உங்களுக்குப் பொருள் விற்பவரின் வங்கிக் கணக்குக்கு பணம் வந்த பின் உங்களது பொருளை அவர் ஏற்றுமதி செய்வார் – நீங்கள் இறக்குமதி செய்து கொள்வீர்கள். கச்சாப் பொருளைப் பெற்றுக் கொண்ட நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அதைக் கொண்டு பிற பொருட்களை உற்பத்தி செய்து மறுவிற்பனை செய்து விட வேண்டும் (வைரம், மற்றும் அபூர்வ கற்களுக்கு 90 நாட்கள் வரை கால அவகாசம் உண்டு). விற்பனை செய்து கிடைக்கும் பணத்தில் உங்களது லாபத்தை எடுத்துக் கொண்டு கச்சாப் பொருளை இறக்குமதி செய்வதற்கு உத்திரவாதப் பத்திரம் வழங்கிய வங்கிக்கு உரிய பணத்தைச் செலுத்தி விடவேண்டும். இந்த இடைப்பட்ட 90 நாட்களுக்கு உங்களுக்கு வழங்கப்பட்ட உத்திரவாதப் பத்திரத்தின் மதிப்புக்கு இணையான தொகையை நீங்கள் அதே வங்கியில் பிக்சட் டெப்பாசிட்டாக இருப்பு வைத்திருக்க வேண்டும்.
இப்படி உத்திரவாதப் பத்திரங்களுக்கு இணையான தொகையை பிக்சட் டெப்பாசிட்டாக வைத்திருப்பதில் வர்த்தகருக்கு என்ன லாபம்? முதலில் குறைந்த வட்டிக்கு அந்நிய செலாவாணி கிடைக்கிறது. இரண்டாவது பிக்சட் டெப்பாசிட்டில் உள்ள பிணைத் தொகை பின்னர் வட்டியுடன் திரும்ப வந்து விடும். அடுத்து இம்முறையில் இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடுவதில் பாதுகாப்பும் உள்ளது – தனது வாடிக்கையாளர் ஏமாந்து விடாமல் இருப்பதில் வங்கிகளுக்கும் அக்கறை இருக்குமல்லவா? எனவே சட்டரீதியான பாதுகாப்பை வங்கியின் தரப்பில் இருந்து உறுதி செய்து கொடுப்பார்கள்.
அடுத்து வங்கிகளுக்குள் உத்திரவாதப் பத்திரங்கள் பரிமாற்றம் நடப்பது தொடர்பான விவரங்கள் SWIFT (Society for worldwide Interbank financial telecommunications) என்கிற முறையில் மேற்கொள்ளப்படும். வங்கியின் பொதுவான பணப்பரிவர்த்தனைகள் மைய வங்கிப் பரிவர்த்தனை முறையின் (Core Banking system) கீழ் மென்பொருட்களாலும் இணையத்தின் வழி இணைக்கப்பட்ட கணிணிகளாலும் செயல்படுத்தப்படுகின்றது. பெரும்பாலான வங்கிகள் ஸ்விப்ட் முறையிலான பணப்பரிவர்த்தனைகளை மைய வங்கிப் பரிவர்த்தனை முறையோடு இணைத்துள்ளனர் – பஞ்சாப் தேசிய வங்கியில் அவ்வாறு இணைக்கப்படவில்லை.
இதை அறிந்து கொண்ட நீரவ் மோடி கும்பல், பஞ்சாப் தேசிய வங்கியின் நடைமுறைகளில் இருந்த ஓட்டைகளை திறமையாகப் பயன்படுத்திக் கொண்டது. பொதுவாக சிவிப்ட் முறையில் நடக்கும் பரிவர்த்தனைகள் நான்கு அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறும்.
பரிவர்த்தனையைத் துவங்கி வைப்பவர் (Maker) : ஒரு பரிவர்த்தனை நடப்பதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் கோரிக்கை மனுவைப் பெற்று அதனைத் துவங்குபவர்.
பரிவர்த்தனையை சோதிப்பவர் (Checker) : இவர் ஸ்விப்ட் முறையிலான பரிவர்த்தனைக்கு வந்துள்ள கோரிக்கையை சோதித்து அனுமதிப்பவர்.
பரிவர்த்தனையை அங்கீகரிப்பவர் (Authorizer) : இவர் ஸ்விப்ட் முறையில் நடக்கும் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிப்பவர்
தகவல் பெறுபவர் (receiver) : வெளிநாட்டில் உள்ள வங்கிகள் தமக்கு வந்து சேர்ந்த கோரிக்கைகள் குறித்தும் அவற்றின் பண மதிப்பு குறித்தும் ஸ்விப்ட் முறையில் (ஸ்விப்டுக்கான பிரத்யேக இணையத் தொடர்பின் வழியாக) அனுப்பும் தகவல்களைப் பெறுகிறவர். பொதுவாக இவ்வாறு தகவல் பெறுபவரின் கணினி உயர் பாதுகாப்பு வளையத்தினுள் (High Security Zone) இருக்கும். ஸ்விப்ட் வலைப்பின்னல் தவிர பிற இணைய இணைப்புகள் இந்த கணினிக்கு மறுக்கப்பட்டிருக்கும்.
நீரவ் மோடி, இந்த பரிவர்த்தனையைக் கையாளும் அதிகாரிகளை லஞ்சம் கொடுத்து வளைத்துள்ளார். மேலும், வங்கிகள் வழங்கும் உத்திரவாதப் பத்திரங்களுக்கு இணையான வைப்புத் தொகையையும் அவர் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளார். அடுத்து ஒவ்வொரு குறிப்பிட்ட கெடு காலத்திற்குப் பின்னும் முந்தைய தொகையை அடைப்பதற்கு பதில் அதை விட அதிக மதிப்பு கொண்ட உத்திரவாதப் பத்திரங்களை வாங்கி அவற்றைப் பணமாக மாற்றியுள்ளார். இந்த வகையில் நீரவ் மோடி வாங்கிய உத்திரவாதப் பத்திரங்களின் எண்ணிக்கை – 293.
இப்போது சில கேள்விகள் எழுகின்றன.
நீரவ் மோடி என்கிற தனிநபர், ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை பார்த்த சில அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு கொள்ளையடித்துள்ளார். இதில் அரசாங்கத்தின் பங்கு எங்கே வருகின்றது? மோடியை ஏன் குற்றம் சாட்ட வேண்டும்?

நீமோ(நீரவ் மோடி) ”நமோ”வுடன்
கொள்ளையின் மதிப்பு சுமார் இருபதாயிரம் கோடிக்கும் அதிகம் என்பதால் இதைச் சாதாரண திருட்டாக சுருக்கி விடமுடியாது. வெறும் பத்து அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இருபதாயிரம் கோடிக்கும் அதிகமாக சுருட்டியிருக்கவும் முடியாது. ஒவ்வொரு நாளின் இறுதியிலும்(EOD Process), ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும், ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வங்கிகள் உள்ளிட்டு எல்லா நிதிநிறுவனங்களிலும் வரவு செலவுகள் தணிக்கை செய்யப்படும். மிக கறாராக செய்யப்படும் இந்த தணிக்கை நடைமுறையில் இருந்து பத்து ரூபாய் கூட தப்பிக்க முடியாது எனும் போது கடந்த பல மாதங்களாக ஆயிரக்கணக்கான கோடிகளை யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் ஒருவரால் திருட முடியாது.
எல்லா வங்கிகளின் பரிவர்த்தனைகளும் மத்திய ரிசர்வ் வங்கியின் கவனத்தின் கீழும், பெருமளவில் நடக்கும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் தான் நடக்க முடியும். இத்தனை துறைகள் மற்றும் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஆட்டையைப் போடுவதற்கு இது பேருந்தில் ஐந்து பத்துக்கு நடக்கும் ஜேப்படி திருட்டல்ல. பிரதமரே கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் இவ்வளவு பெரிய திருட்டைச் செய்தவர் அத்தனை சுலபத்தில் கலந்து கொள்ளவும் முடியாது. பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரின் மொத்த ஜாதகத்தையும் தோண்டித் துருவிய பின்னரே பிரதமர் அலுவலகம் அனுமதிக் கடிதமே வழங்கும் – நீரவ் மோடிக்கு அப்படி ஒரு அழைப்பு கிடைத்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் பஞ்சாப் தேசிய வங்கி ஹெச் ராஜா நடத்தி ஊத்தி மூடிய சீட்டுக் கம்பெனி அல்ல. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் ஸ்விப்ட் முறையிலான பரிவர்த்தனையும் மைய வங்கிப் பரிவர்த்தனை முறையையும் இணைக்காமல் விட்டது ஏன் என்பதற்கும், அவ்வாறு விட்டதால் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக கொள்ளைப் புற கதவுகளைத் திறந்து வைத்தது ஏன் என்பதையும் மத்திய நிதியமைச்சகம் விளக்க வேண்டும்.
எனவே இது இன்னும் ஒரு சாதாரண திருட்டல்ல. இந்திய வங்கித்துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மாபெரும் கொள்ளை. இந்தக் கொள்ளைக்கு பொறுப்பேற்க வேண்டியது மத்திய பாரதிய ஜனதா அரசு தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக