புதன், 7 பிப்ரவரி, 2018

சென்னை துப்பாக்கி முனையில் 76 ரவுடிகள் கைது... மேலும் பலரை தேடி வேட்டை ..


பாலிமர் :சென்னை அருகே ஒரே இடத்தில் ஆயுதங்களுடன் கூடியிருந்த 76 ரவுடிகளை, துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, தாம்பரத்தில் இருந்து அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அதில் இருந்த நபர்கள், பூவிருந்தவல்லி அருகே மலையம்பாக்கம் என்ற இடத்தில் பண்ணை வீட்டில் நடக்கும் தங்களின் நண்பர் பினுவின் பிறந்த நாள் விழாவுக்குச் செல்வதாகக் கூறியுள்ளனர். சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பினு பழைய குற்றவாளி என்பதும், அவர்மீது ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்குகள் இருப்பதையும் அறிந்த காவல் ஆய்வாளர் சிவக்குமார், இதுபற்றி அம்பத்தூர் துணை ஆணையாளர் சர்வேஸ்ராஜூக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாங்காடு, குன்றத்தூர், பூந்தவல்லி, நசரத்பேட்டை, போரூர் மற்றும் எஸ்ஆர்எம்சி காவல் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. போலீஸ் வாகனங்களைத் தவிர்த்துவிட்டு, 60க்கும் மேற்பட்ட போலீசார் தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி மலையம்பாக்கம் பகுதியைச் சுற்றி வளைத்தனர். பின்னர் ரகசியமாக கண்காணித்தபோது, ஒரே இடத்தில் 120க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூடியிருந்ததைக் கண்டறிந்தனர். பண்ணை வீட்டில் அதிரடியாக போலீசார் நுழைந்ததைக் கண்டு 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆயினும், 76 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் பிடித்தனர்.
பிடிபட்ட ரவுடிகளிடம் இருந்து வீச்சரிவாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் வந்த 8 கார்கள், 38 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் வருவதை அறிந்ததும் முக்கிய ரவுடியான பினு அங்கிருந்து தப்பியோடி விட்டான். போலீசார் நடத்திய இந்த வேட்டையில் நீண்ட நாட்களாக தேடப்படும் குற்றவாளிகளும், தலைமறைவாக இருந்த முக்கிய ரவுடிகளும் சிக்கியுள்ளனர். சிக்கிய ரவுடிகளிடம் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் வேறு ஏதேனும் நோக்கத்தில் ஒன்றுகூடியிருந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய ரவுடிகளை தேடும் பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
பூந்தமல்லி மகளிர் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பின் ரவுடிகள் சென்னையின் பல்வேறு காவல்நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள்மீதுள்ள பழைய குற்ற வழக்குகளை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் ஒரே நேரத்தில் சிக்கியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக