புதன், 7 பிப்ரவரி, 2018

ஜெயலலிதாவுக்கு சசிகலா போல எடப்பாடிக்கு இளங்கோவன்! ஓஹோ ?


டிஜிட்டல் திண்ணை:  ஜெ-வுக்கு சசி... எடப்பாடிக்கு இளங்கோவன்!மின்னம்பலம்: “ஜெயலலிதாவுக்கு சசிகலா எப்படியோ, அதுபோலவே இப்போது எடப்பாடிக்கு இளங்கோவன் என்பதுதான் அதிமுக வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது. யார் இந்த இளங்கோவன் என்ற கேள்வி சிலருக்கு எழும். எடப்பாடியை அறிந்தவர்கள் இளங்கோவனையும் அறிந்திருப்பார்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் இளங்கோவன்.தமிழ்நாடு மத்தியக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவராகத் தற்போது பொறுப்பு வகிக்கிறார். எடப்பாடி அமைச்சராக இருந்த காலத்திலிருந்து, அவரது நிழலாக வலம் வந்தவர் இளங்கோவன். எடப்பாடி சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர். சேலம் கிழக்கு மாவட்டத்தில் தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள அவரால் வளர்க்கப்பட்டவர்தான் இளங்கோவன். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் பழனிசாமியிடம் அதிக நெருக்கமானார் இளங்கோவன்.

எடப்பாடி அமைச்சராக இருந்தபோதே சேலம் மாவட்டக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பதவியை இளங்கோவனுக்கு கொடுத்து அழகு பார்த்தார். எடப்பாடியின் வரவு செலவு கணக்குகளைக்கூட அந்தச் சமயத்தில் இளங்கோவன்தான் பார்த்துவந்தார். எடப்பாடி எங்கே இருக்கிறார், அவரோடு பேசலாமா என்பதைத் தெரிந்துகொள்ள அவர் அமைச்சராக இருந்த சமயத்திலேயே அதிகாரிகள் இளங்கோவனுக்குத்தான் போன் போடுவார்கள். எடப்பாடியின் மகன் அரசியல் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை என்பது இளங்கோவனுக்கு வசதியாகப் போனது.ஜெ. மறைவுக்குப் பிறகு எடப்பாடிக்கு ஆதரவான காய் நகர்த்தல் எல்லாமே இளங்கோவன் மூலமாகத்தான் நடந்தன. எடப்பாடிதான் அடுத்த முதல்வர் என இளங்கோவன் அந்த சமயத்தில் வெளிப்படையாகவே பேசிவந்தார். இப்படி நெருக்கம் நாளுக்கு நாள் அதிகமானது.

எடப்பாடி முதல்வர் ஆனார். சேலத்தில் இருந்த இளங்கோவன் சென்னைக்கு வந்தார். எந்த நேரமும் முதல்வர் அலுவலகத்திலேயே இளங்கோவனைப் பார்க்க முடிந்தது. முதல்வரைப் பார்க்க யார் வந்தாலும் முதலில் இளங்கோவனைத்தான் பார்க்க வேண்டும். அவர் மனது வைத்தால் மட்டுமே முதல்வரைச் சந்திக்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கினார் இளங்கோவன். முதல்வரும் எதற்கெடுத்தாலும், ‘இளங்கோவனைப் பாருங்க.. இளங்கோவனைக் கேட்டுக்கோங்க...’ என்று சொல்லிவந்ததால், இளங்கோவன் கிராஃப் கட்சிக்காரர்கள் மத்தியிலும் சரி... அதிகாரிகள் மத்தியிலும் சரி விறுவிறுவென ஏற ஆரம்பித்தது.
சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் சரோஜா தனது துறை சம்பந்தமாக பேச முதல்வரைச் சந்தித்திருக்கிறார். அவரிடம் முதல்வர், ‘இது சம்பந்தமாக நீங்க இளங்கோவனைப் பாருங்க...’ என சொல்லி இருக்கிறார். டென்ஷன் ஆகிப்போன சரோஜா, ‘நான் எதுக்கு சார் அவரைப் பார்க்கணும்? அவருக்கும் என் துறைக்கும் என்ன சம்பந்தம்? அவரையெல்லாம் என்னால் பார்க்க முடியாது...’ என வெளிப்படையாகவே பேசிவிட்டாராம்.
அமைச்சர்களை ரொம்பவே அசால்டாக டீல் செய்யும் இளங்கோவன், அமைச்சர்களைப் பெயரைச் சொல்லிக் கூப்பிடாமல் அவர்கள் துறையின் பெயரைச் சொல்லி அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரை, ‘ஹெல்த்து... இந்த வேலையை உடனே முடிங்க..’ என ஒரு ஃபைலை நீட்டி இருக்கிறார். விஜயபாஸ்கர் செம டென்ஷன் ஆகிவிட்டாராம். ‘என்னது ஹெல்த்தா? எனக்கு பேரு இல்ல? என் பேரைச் சொல்லிக் கூப்பிடுங்க.. இல்லை சார்ன்னு கூப்பிடுங்க... நான் என்ன நீங்க வெச்ச ஆளா? இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் என்கிட்ட வெச்சுக்காதீங்க...’ எனத் திட்டி தீர்த்துவிட்டாராம். இதேபோலத்தான், கரூர் விஜயபாஸ்கரிடமும் திட்டு வாங்கியிருக்கிறார் இளங்கோவன். ஆனால், என்ன திட்டு வாங்கினாலும் தன்னுடைய கெத்தை விட்டுக் கொடுக்காமல் எல்லோரையும் மிரட்டிவருகிறாராம்.
அமைச்சர்கள் வட்டாரத்தில் இது சம்பந்தமாக டிஸ்கஷன் நடந்திருக்கிறது. ‘ஏற்கெனவே அம்மா இருந்த சமயத்தில் சின்னம்மா... சின்னம்மான்னு அவங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினோம். இப்போ இந்த ஆளு இன்னொரு சின்னம்மா மாதிரி வளர்ந்துட்டு இருக்காரு. இதை ஆரம்பத்துலயே தடுக்கணும். சும்மா அவரு சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருக்க வேண்டாம். எது சொல்றதுன்னாலும் எடப்பாடி சொல்லட்டும். இனி இளங்கோவன் சொன்னால் யாரும் கேட்க வேண்டாம்...’ எனப் பேசியிருக்கிறார்கள் சீனியர் அமைச்சர்கள். இந்தத் தகவல் முதல்வர் காதுக்கும் போயிருக்கிறது. அவர் கண்டும் காணாததும்போல அமைதியாக இருக்கிறார்” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக