புதன், 17 ஜனவரி, 2018

ஜிக்னேஷ் மேவானி திருமாவளவன் இணைந்து செயப்பட முடிவு !

இணைந்து செயல்படுவோம்!மின்னம்பலம் :சென்னை வந்துள்ள குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை நேற்று (ஜனவரி 16) விசிக அலுவலகமான தாய்மண்ணில் சந்தித்தார்.
மூன்று நாள்கள் பயணமாக சென்னை வந்துள்ள குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி நேற்று முன்தினம் அம்பேத்கர் மணி மண்டபத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன்பிறகு இயக்குநர் பா.ரஞ்சித்தைச் சந்தித்து அவருடன் பொங்கல் கொண்டாடினார். இந்த நிலையில் நேற்று (ஜனவரி 16) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஜிக்னேஷ் மேவானி சந்தித்தார்.
இந்தச் சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஜிக்னேஷ் மேவானி, “நான் இரண்டாவது முறையாக சென்னை வந்துள்ளேன். தமிழக அரசியல் பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தோம். சங்பரிவார பாசிச கும்பலால் நாடு பல்வேறு விதமான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. சங்பரிவார்,
பாஜக போன்ற அமைப்புகளால் இந்தியாவின் உண்மையான பிரச்னையான வேலைவாய்ப்பின்மை, சாதி ஒழிப்பு போன்றவை விவாதிக்கப்படாமல் உள்ளது. இந்தியா கடினமான சூழ்நிலையை அடைந்துள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மிகப்பெரிய தோல்வி அடைந்தவராக பிரதமர் மோடி இருக்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்குப் பதிலாக மனுதர்மத்தை அமல்படுத்தத் துடிக்கிறார். இந்தக் கும்பலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், “பீமா கோரேகான் பிரச்னை மற்றும் அதில் ஜிக்னேஷ் மேவானி சங்பரிவார அமைப்புகளால் எவ்வாறு குறி வைக்கப்படுகிறார் என்பது குறித்து விவாதித்தோம். அவருடன் கலந்து பேசியதன் அடிப்படையில் மூன்று கோரிக்கைகளை முன்வைக்கிறேன். பீமா கோரேகான் சம்பவம் அதை தொடர்ந்து சங்பரிவாரால் ஜிக்னேஷ் குறிவைக்கப்படுவதைக் கண்டிக்கிறேன். மாணவர்கள் ரோஹித் வெமுலா மற்றும் முத்துகிருஷ்ணன் மரணத்துக்கு நீதி கிடைக்க ஆவண செய்ய வேண்டும். சிறையிலுள்ள சந்திரசேகர் ஆசாத்தை விடுதலை செய்ய வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுவும் கொடுக்க உள்ளோம். இருவரும் இணைந்து செயல்பட உள்ளோம்” என்று கூறினார்.
மேலும், இஸ்லாமிய மக்களின் ஹஜ் பயணத்துக்கு மத்திய அரசு மானியம் ரத்து செய்துள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக