புதன், 17 ஜனவரி, 2018

பொங்கல் திரைப்படங்களின் வசூல் .. 100 கோடியை எதிர்பார்த்து 50 கோடி வசூலுடன் தள்ளாடிய படங்கள்

பொங்கல் திரைப்படங்கள் வசூல் நிலவரம்!
பொங்கல் பண்டிகையையொட்டி புதிய தமிழ் படங்கள் ரீலீஸ் செய்யப்படும்.
தீபாவளி பண்டிகையின் போது வெளியாகும் படங்களின் வசூலை காட்டிலும் குறைவாகவே இருக்கும் பொங்கல் வசூல். இதனால் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் போட்டியில் களமிறங்கும். இந்த வருடம் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம், விக்ரம் நடித்த ஸ்கெட்ச், பிரபுதேவா நடித்த குலேபகாவலி ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. பாக்ஸ் ஆபீசில்சுமார் 100 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகும் என கணிக்கப்பட்டபொங்கல் பண்டிகை படங்கள் சுமார் 50 கோடி ரூபாய் வசூலுடன் முடிந்து போனது.
தமிழகத்தில் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட படம் "தானா சேர்ந்த கூட்டம்" கடந்த ஐந்து நாட்களில் மொத்த வசூலாக பெற்ற தொகை சுமார் 30 கோடி ரூபாய் மட்டுமே. சூர்யா நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் இப்படம் சுமாரான ஓபனிங்குடன் தொடங்கியது. தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை என்பதாலும், குடும்பத்துடன் பார்க்க வேறு படங்கள் இல்லை என்பதாலும் இந்த வசூல் என்கிறது தியேட்டர் வட்டாரங்கள். விக்ரம் இரு வேடங்களில் நடித்து 2016 செப்டம்பரில் வெளியான இருமுகன் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். ஒரு வருட இடைவெளியில் பொங்கல் வெளியீடாக "ஸ்கெட்ச் "அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தானா சேர்ந்த கூட்டம் திரையிட்ட தியேட்டர்களை விட குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் ஆன "ஸ்கெட்ச் "ஐந்து நாட்களில் 15 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது.

இரு ஜாம்பவான்களுடன் பொங்கல் போட்டியில் களமிறங்கிய படம் "குலேபகாவலி". பிரபுதேவா, ஹன்சிகா ஜோடி நடித்த காமெடி திரில்லர் படம் ரசிகர்களிடம் சென்றடையவில்லை. சூர்யா, விக்ரம் படங்களின் ஆதிக்கத்தில் குலேபகாவலி பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மங்கிப் போனது. ஐந்து நாட்களில் தட்டு தடுமாறி 3 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
நட்சத்திர அந்தஸ்து மிக்க மூன்று படங்களும் வெற்றி படமாக ஜொலிக்கவில்லை என்கிற உண்மையை கதாநாயக நடிகர்கள் உணர வேண்டும். கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் நாயகிகளுக்காகவும் படம் வசூலை குவிக்காது கதை இல்லை என்றால் பட வசூல் கந்தலாகி விடும் என்பதை வருட தொடக்கத்தில் பொட்டில் அறைந்து சொல்லியிருக்கிறான் ரசிகன்.
டிவிட்டர் ட்ரெண்டிங் முதலிடம், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு பரபரப்பு, யூடியூப்பில் டீஸர், டிரைலர் ஆகியவற்றை அதிகம் பேர் பார்த்தனர் என்பதால் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி கிடைக்காது. அது வெற்று ஆரவாரம், திட்டமிட்டு உருவாக்கப்படும் மாயை அது என்பதை தொழில் நுட்ப வளர்சியில் ரசிகன் அறிந்து வைத்திருக்கிறான்.
கதையும், அதனை காட்சி படுத்தியிருக்கும் விதம் மட்டுமே படங்களின் வெற்றிக்கு அடி நாதம் என்பதை நடிகர்கள், தயாரிப்பாளர்கள் புரிந்து கொண்டு செயல்படுவார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக