செவ்வாய், 2 ஜனவரி, 2018

3 முறை இறந்ததாக அறிவிக்கப்பட்டவர்.. பிறந்த நாள் பாட்டால் மீண்டு வந்தார்


தினத்தந்தி :இறந்ததாக 3 முறை அறிவிக்கப்பட்டவர் பிறந்த நாள் பாட்டால் உயிர்பிழைத்தார்  இறந்துவிட்டதாக மூன்றுமுறை அறிவிக்கப்பட்ட இந்தியப் பெண் விராலி மோடி, இன்று பலருக்கும் நம்பிக்கை தரும் நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார். இறந்துவிட்டதாக மூன்றுமுறை அறிவிக்கப்பட்ட இந்தியப் பெண் விராலி மோடி, இன்று பலருக்கும் நம்பிக்கை தரும் நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விராலி மோடி, அமெரிக்காவில் வசித்தார். எதிர்காலத்தில் தான் அனைவரும் அறியும் ஒரு பிரபலமாவேன் என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதையே தனது அம்மா பல்லவி மோடியிடம் சொல்லியும் வந்தார். அதன்படியே, 13 வயதில் அமெரிக்காவில் ஒரு பிரபல குளிர்பான விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அடுத்து புகழேணியின் உச்சிக்கு செல்லவேண்டியதுதான் என்று அவர் எண்ணிக்கொண்டிருந்தபோது விராலியின் வாழ்வில் சில விரும்பத்தகாத திருப்பங்கள் நேர்ந்தன.


அவர் ஒருமுறை மழைக்கால சுற்றுலாவுக்காக இந்தியா வந்து சென்றார். சில நாட்களிலேயே அவரை ஏதோ ஒரு மர்மக் காய்ச்சல் தாக்கியது. அதனால் அமெரிக்காவில் ஆஸ்பத்திரிகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதும், பின் வீடு திரும்புவதும் விராலிக்கு வழக்கமானது. அந்தக் காலகட்டத்தில் இவர் இறந்துவிட்டதாக மூன்று முறை மருத்துவர்களே அறிவித்த துயரம் நடந்தது. அதனால் தேசிய அளவிலான விளம்பரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பும் கைநழுவியது. அவர் இறந்துவிட்ட நிலைமாறி, உயிர் பிழைத்தாலும் அடிக்கடி காய்ச்சல், தலைவலி என்று படாதபாடுபட்டார்.

ஒருகட்டத்தில் விராலி மாயத்தோற்றங்களை உணரும் நிலைக்கு சென்றுவிட்டார். “என் மகளுக்கு ஏற்பட்ட நிலையை நினைத்துப் பார்க்கும்போதே நான் சோகத்தில் துவண்டுபோய் விடுகிறேன். அவளுக்கு ஆரம்பத்தில் செய்யப்பட்ட சிறுநீர், ரத்தம் மற்றும் சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள், அவளது உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே சொல்லின. ஆனால் ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நிலைகுலைந்த விராலி, அதிகளவில் வாந்தி எடுத்துத் துவண்டாள். அவளது இதயத்துடிப்பும் நின்றுபோனது. அப்போதுதான் என் மகள் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் முதல் தடவை அறிவித்தார்கள்’’ என்கிறார், தாய் பல்லவி மோடி. மருத்துவர்கள் கடுமையாக போராடி மீண்டும் விராலியின் இதயத்தைத் துடிக்க வைத்தனர். ஆனால் சுவாசம் நின்றுவிட, செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டன.

முதுகுத்தண்டுவடப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சிகிச்சையால் அவர் கோமா நிலைக்குப் போய்விட்டார். அவரின் கவலைக்கிடமான நிலை அறிந்து உறவினர்கள் எல்லாம் மருத்துவமனையில் குவிந்துவிட்டனர். இனி எந்த முயற்சிக்கும் பலனிருக்காது, அவரது சுவாசத்திற்கு உதவிக்கொண்டிருக்கும் செயற்கைக் கருவிகளை நிறுத்திவிடலாம் என்ற முடிவுக்கு டாக்டர்கள் வந்தனர். ‘‘அதற்கு எனது ஒப்புதலை டாக்டர்கள் கேட்டனர். அப்போது அவளின் 15-வது பிறந்தநாளுக்கு எட்டு நாட்களே இருந்தன. அதுவரைக்குமாவது அவளை ‘உயிருடன்’ வைத்திருங்கள், நான் என் மகளின் பிறந்தநாளைக் கொண்டாட விரும்புகிறேன் என்று நான் டாக்டர்களிடம் கண்ணீருடன் கெஞ்சினேன். ஆரம்பத்தில் அதற்கு அவர்கள் மறுத்தாலும், பின்னர் ஏற்றுக்கொண்டனர். குறிப்பிட்ட நாளில், ஆஸ்பத்திரி கடிகாரம் பிற்பகல் 3.05-ஐ நெருங்கியது. அதுதான் விராலி பிறந்த நேரம். நாங்கள் அவள் படுக்கையைச் சுற்றி நின்றோம். ‘ஹாப்பி பர்த்டே’ பாடலைப் பாடினோம். அவள் இருந்த அறை பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவளது தந்தை, அவளின் கையைப் பற்றி ‘கேக்’கை வெட்டினார். அந்த நேரம் அவள் கண் திறந்தாள். நாங்கள் இன்ப அதிர்ச்சியில் மெய்சிலிர்த்துப்போனோம்.

அங்கே நின்றுகொண்டிருந்த நர்ஸ், பறந்தடித்து ஓடி டாக்டர்களை அழைத்துவந்தாள். அவர்கள் என்னைக் கட்டியணைத்து, ‘உங்களால்தான் உங்கள் மகள் பிழைத்துக்கொண்டிருக்கிறாள்..’ என்றனர். விராலிக்கு மீண்டும் சிகிச்சைகள் சுறு சுறுப்பாக நடந்தன. அவள் குணமடைந்தாலும், பழைய நினைவுகள் பலவற்றை இழந்திருக்கக்கூடும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். அதெல்லாம் பொய்யாய்ப் போயின. எல்லா தடைகளையும் தாண்டி என் மகள் நலமடைந்துவிட்டாள். அவள் பல்வேறு நேரங்களில் மூன்று முறை இறந்ததாக அறிவிக்கப்பட்டவள்..’’ என்று பல்லவி மோடி நிம்மதிப் பெருமூச்சுடன் கூறுகிறார். இன்று விராலி சக்கர நாற்காலியில் உலா வருகிறார். ஆனால் சுறு சுறுப்பான பெண்ணாகத் திகழ்கிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார். அவர்களின் உரிமைகளுக்காக தீவிரமாகக் குரல் கொடுக்கிறார். ‘‘நான் ஆஸ்பத்திரியில் இருந்த அந்தக் கடினமான நாட்கள், ஏதோ மங்கிய கறுப்பு-வெள்ளை புகைப்படம் போல எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றன. நானே இன்னொருவர் போல உணர்ந்த நாட்கள் அவை. படுக்கையில் பலவீனமாய் ஒரு சிறுமி கிடக்க, சோக முகத்துடன் சுற்றிலும் உறவினர்கள் இருக்கும் காட்சி மனதுக்குள் பதிந்திருக்கிறது. அப்போது என்னிடம் ஒரு உறவினர் பேச முயலும்போது அம்மா, ‘அவள் பேசமாட்டாள். ஆனால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் உருளும்’ என்று அம்மா சொன்னது என் காதுகளில் விழுந்தது. ஆனால் நான் அந்த நேரம் குணம் பெற்று வருவதை உணர்ந்தேன்.

அதையெல்லாம் துல்லியமாக வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒருவித இனம்புரியாத உணர்வுகளில் நான் உழன்ற காலம் அது’’ என்று தெளிவாகப் பேசுகிறார் விராலி. சற்று இடைவெளிவிட்டு தொடரும் அவர், ‘‘கோமாவில் இருந்து மீண்டதும் நான் கூறிய முதல் வார்த்தை, ‘டாடி.’ அந்த வார்த்தையைச் சொன்னபடியே தூக்கத்தில் இருந்து விழிப்பதைப் போல விழித்ததும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.
சுயநினைவற்று இருந்த நாட்கள் தவிர, மற்ற நாட்களில் நடந்தது எல்லாம் எனக்கு ஞாபகம் இருந்தது. எனக்கு நடந்தது எல்லாம் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. அதை எல்லாம் அதிசயமானதாகவும் நான் கருதவில்லை. ஆனால் நடந்தவைகளை நினைத்துப்பார்க்கும்போது மனிதர்கள் மீதும், என் மீதும் எனக்கு நம்பிக்கை கூடியிருக்கிறது.
நான் எனது மரணப் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடம், நம்பிக்கையை இறுக்கமாகப் பற்றிக்கொள்வதால் கிடைக்கும் பலன் குறித்த உறுதிதான். அம்மா கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையால் நான் இன்று உயிர் வாழ்கிறேன், உங்களுடன் பேசுகிறேன். அந்த வாழ்க்கையை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. நிச்சயம், எனக்கும், என்னைப் போன்ற பிறருக்கும் பெரிதும் பயனுள்ளதாய் ஆக்கிக்கொள்வேன்’’ – புன்னகை முகமாய், திடமாய் கூறுகிறார் விராலி மோடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக