செவ்வாய், 2 ஜனவரி, 2018

ரஜினிக்கு - கட்சி கொள்கை அறிக்கையை முதலில் வெளியிடுங்கள் பிறகு தேர்தலில் நிற்பதுபற்றி பேசலாம்......!

Parthiban Pakirisamy : கால் நூற்றாண்டு கண்ணாமூச்சி ! கூத்தாடி நிறை உலகமடா; எங்கு காணினும் கலகமடா ! 1970 களில் நடிகராகவேண்டும் என்கிற கனவில் தமிழகத்திற்கு வந்து அடுத்தடுத்த அய்ந்தாண்டுகளில் தொடர் கடின முயற்சியால் நடிக்கத்தொடங்கி யாரும் எண்ணிக்கூட பார்த்திராத அதிவேகத்தில் வளர்ச்சிபெற்று தமிழ் திரைத்துறையில் கடந்த 42 ஆண்டுகளாக போட்டியின்றி பயணித்துக்கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்பவரும் நடிகரும் அரசியல்வாதியுமான திரு. சிவாஜி ராவ் கைக்கவாட் அவர்களுக்கு முதலில் வாழ்த்துகளும் வணக்கங்களும். நீங்கள் வெறும் நடிகராகவே இருந்திருப்பீர்களேயானால் இந்த கட்டுரையை எழுதவேண்டிய அவசியமே இங்கு வந்திருக்காது. எப்பொழுது நீங்கள் தமிழ்நாட்டை ஆளவேண்டும் அதற்காக தனிக்கட்சி தொடங்கவேண்டும் 2021 ல் வரவிருக்கும் அதாவது என்றோ வரப்போகும் தமிழக பொதுத்தேர்தலுக்கு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கப்போவதாக அறிவித்துவிட்டீர்களோ; அப்பொழுதே நீங்கள் மக்களின் விமர்சன வளையத்திற்குள் வந்துவிட்டீர்கள் எனவேதான் இந்தப்பதிவு.
இந்த மண்ணில் வந்து வாழ்வதற்கும் அனுபவிப்பதற்கும் எல்லோருக்கும் சமஉரிமை உண்டு என்கிற அதே நேரத்தில் இந்திய அரசியல் சாசனப்படி இந்திய பிரசையாக இருக்கும் ஒருவர்; தாம் விரும்பும் எந்த மாநிலத்திலும் எந்த அரசியல் பதவியிலும் அதற்கான தகுதிகள் இருந்தால் போட்டியிடலாம் என்கிற ஒற்றை சனநாயக மந்திர வார்த்தையை நன்றாக புரிந்துவைத்திருக்கும் நீங்கள்; அதாவது உங்கள் சொந்த தாய்மண்ணான கர்நாடகாவில் கூட போட்டியிட்டு முதல்வராகும் தகுதியை பெறாத நீங்கள் தமிழ் நாட்டில் வந்து நாற்காலியில் அமர்ந்துவிடத்துடிக்கிறீர்கள்.
அதற்காக அடுக்கடுக்காக பல அரசியல் காரணங்களை அதாவது அமைப்பு கெட்டுவிட்டது என்கிறீர்கள் ஊழல் மற்றும் உள்நாட்டிலேயே அரசு ஆட்சியாளர்களே மக்களை கொள்ளையடிக்கிறார்கள் என்கிறீர்கள். நீங்கள் வந்து மொத்தமாக எல்லாவற்றையும் மாற்றிவிடுவதாகவும் அதற்கு வெறும் மூன்றாண்டுகளே போதுமானது என்பதையும் புறக்காரணிகளாக சொல்கிறீர்கள். மகிழ்ச்சி நீங்கள் வெற்றிபெற வாழ்த்தும் அன்பும் தெரிவிக்கிறோம். அதற்கு முன்பாக எப்பொழுதும் சினிமா பின்னாலேயே அலைந்துகொண்டிருக்கும் அதாவது தனது ஆதர்ச நாயகனை சினிமாவில் மட்டுமே தேடிக்கொண்டிருக்கும் இந்த ஏழரைகோடி ஏமாளி தமிழக மக்களின் அய்யங்களையும் தீர்த்துவைப்பது ஒரு அரசியல்வாதியான உங்களின் கடமை ஆகையால்; இதோ உங்களுக்கான மக்களின் கேள்விகள்.....
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தில் வசிக்கும் நீங்கள் தமிழ் மொழியையே சரியாக கற்றுக்கொள்ளாமல் மேடைகளில் வார்த்தைகளுக்காக ஆங்கிலத்தில் கடன் வாங்குகிறீர்களே அப்படி என்ன தமிழின் மீது உங்களுக்கு கோபம் சொல்லுங்கள்? ஒரு நாட்டின் நிலையை அறியவேண்டுமெனில் அங்கே மொழிதான் பிரதானமான ஆயுதம்; அதையே ஒழுங்காக பிரயோகிக்கத்தெரிந்திராத நீங்கள்; அரசியலில் அமைப்பு கெட்டுவிட்டது கொள்ளை அடிக்கிறார்கள் ஊழல் மலிந்துவிட்டது என்கிறீர்கள் என்றால் உங்களை இப்படி எல்லாம் பேச சொல்லி பயிற்சி கொடுப்பவர் யார்? மிகப்பெரிய ஆளுமைகளை தலைவர்களாக பெற்ற இந்த தமிழ் நாட்டு சட்டமன்றம் தற்போது சற்று சறுக்கி இருப்பதாலேயே; அதற்கு உங்களைவிட்டால் தூக்கி நிறுத்துவதற்கு ஆளில்லை என்கிற துணிச்சல் உங்களுக்கு எங்கிருந்து எப்படி வந்தது? தமிழ்நாட்டைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும் அதன் தொன்மையை பற்றிய உங்களின் புரிதல் என்ன; எந்தவித அடிப்படை அரசியல் அறிவியல் பொருளாதார சிந்தனையும் இல்லாமல், யார் யாரோ தங்களின் சுய இலாபத்திற்காக உங்களை இரட்சகர் கடவுள் என்று உணர்ச்சிபொங்க சொல்வதையெல்லாம் அப்படியே உண்மை என்று நம்பி; தமிழக முதல்வராக மட்டுமே பதவியேற்க துடிக்கும் நீங்கள் அதற்கான முழு தகுதியை பெற்றுவிட்டீர்களா?
கடந்த ஓராண்டாக தமிழ் நாட்டை பார்த்து மற்ற மாநிலங்கள் சிரிக்கின்றன என்கிறீர்கள்; அப்படியென்றால் அதற்கு முன்பான தமிழகத்தின் நிலையை சொல்லவில்லையே உங்களுக்கு எழுதிக்கொடுத்த வசனத்தில் அது இடம்பெறவில்லையா அல்லது வசதியாக மறந்துவிட்டீர்களா? 1967 ல் இருந்துதான் திராவிடக்கட்சிகளின் அதிகாரப்பூரவமான ஆட்சி தமிழ்நாட்டில் தொடங்குகிறது; அதற்கு பிறகு இங்கு எத்தனை போராட்டங்கள் சட்ட திருத்தங்கள் முன்னேற்றங்கள் என்கிற நெடிய வரலாற்றை நீங்கள் ஒருமுறை சற்று திரும்பி பார்த்துவிடுவது எதற்கும் நல்லது திரு. சிவாசி ராவ் அவர்களே. இங்கே இரண்டு திராவிட கட்சிகள்தான் தொடர்ந்து ஆட்சி செய்கின்றன. அதில் குறைபாடுகள் கொள்கை முரண்பாடுகள் சில நேரங்களில் ஊழல்கள் சட்ட ஒழுங்கு சிக்கல்கள் என பொதுவான பிரச்சினைகள் இங்கே உண்டு. அரசியலில் அது புதிதல்ல அதை சரிசெய்யவும் தண்டனை கொடுக்கவும் தட்டிக்கேட்கவும் தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்ததோடு; நேற்றுவரை கலைஞரின் அரசியல் நிழலில் இளைப்பாறி இப்பொழுது அவரால் செயல்படாத நிலை, மற்றொருவரோ இயற்கை எய்திவிட்டார் என்கிற தைரியத்தில்; ஊழல் அமைப்பு கெட்டுவிட்டது என்று உளறுவதை வாய்க்கொழுப்பின் உச்சம் என்பதா அல்லது “அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்” என்று எடுத்துக்கொள்வதா என்பதை நீங்கள்தான் உங்களின் மனசாட்சியிடம் கேட்டுத்தெளிவுபெறவேண்டும்.
இதுவரையில் யாருமே சொல்லாத புரட்சியாக ஆன்மிக ஆட்சி செய்யப்போவதாக சொல்கிறீர்கள் அதற்கு பாபா சின்னத்தையும் கை விரல்களை மடக்கி காட்டுகிறீர்கள். நீங்கள் இன்னும் சினிமா மாயையிலேயே உள்ளீர்கள் என்பதற்கு இதுவே சான்று. இங்கே ஏற்கனவே அறிவிக்கப்படாத ஆன்மிக ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆன்மிக ஆட்சியில் நாங்கள் எவ்வளவு சுபிட்சமாக இருக்கிறோம் என்று செல்கிறோம் கேளுங்கள் .... பணமதிப்பிழப்பு என்று ஒரு இனிய இரவு வேளையில் 1000 மற்றும் 500 ருபாய் தாள்களை செல்லாது என்று அறிவித்துவிட்டு எங்கள் மாண்புமிகு பிரதமர் அவர்கள் அன்றிரவே வெளிநாடு சென்றுவிட்டார்.
அதற்குப்பிறகு என்ன நடந்தது தெரியுமா? எங்கள் கணக்கில் இருக்கும் எங்களின் பணத்தையே வங்கிகள் கொடுக்கவில்லை; வயோதிகர் என்றுகூட வயது வித்தியாசம் பார்க்காமல் வெய்யிலில் வரிசையில் நாள்முழுக்க நிற்கவைத்து, கவுண்டரை நெருங்கும்போது பணமில்லை என்று திருப்பி அனுப்பியது கருணையே உருவான வங்கிகள். வரிசையில் நின்று நின்றே எங்கள் பெற்றோர்கள் இறந்தேபோனார்கள்; அதையும் இந்த ஆன்மிக அரசு ரசித்தது. உங்களுக்கு தெரியுமா திரு இரசினி அவர்களே எங்களின் உறவினர்களின் செத்த பிணத்தை அடக்கம் செய்யக்கூட பெற்ற பிள்ளை வெளிநாடுகளில் பணி செய்து அனுப்பிய பணம் வங்கியில் இருந்தும்; பணத்தை எடுக்க முடியாமல் நாங்கள் சொந்த தெருவிலேயே பிச்சை எடுத்து அடக்கம் பண்ணினோம் உங்களின் ஆன்மிக ஆட்சியில்!
உங்களின் ஆன்மிக ஆட்சியில் துப்பாக்கி முனையில் தேச பக்தியை கற்பிக்கிறார்கள் ஆம்; நொண்டியாயினும் முடமாயினும் எழுந்து நிற்கவேண்டும் சன கன மன வரும்பொழுது அது சினிமா தியேட்டராக இருந்தாலும்; ஆன்மிக ஆட்சியில் உணவு கூட ஒருவர் எவ்வளவு சாப்பிடுகிறார் என சொல்லிக்காட்டப்படுகிறது. மாட்டுக்கறியை தின்றால் நடு ரோட்டில் வைத்து கொலை செய்கிறார்கள்; அதுமட்டுமா ஒவ்வொருவரும் நான்கு பிள்ளைகள் பெறவேண்டுமாம் அதில் இரண்டு நாட்டிற்கு கொடுத்துவிட வேண்டுமாம்; ஆன்மிக ஆட்சியில் பல கேளிக்கைகளும் உண்டு அதாவது ஆண் மயிலின் கண்ணீரில் தான் பெண் மயில் கருத்தரித்து இனப்பெருக்கம் செய்யுமாம் அதோடு விட்டால் பரவாயில்லை கபண்டலம் இருக்கும் சாமியார்களின் கைகளில் தற்போது ஈட்டியும் கத்தியும் இருக்கிறது திரு. சிவாசி ராவ் அவர்களே !
அடுத்ததாக
பகவத் கீதையை வாசித்து ஆன்மிக ஆட்சி அமைப்பேன் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பகவத்கீதை சரியாக படித்தீர்களா என்று தெரியவில்லை. அதில் திருவாளர் கிருட்டிணன் என்று ஒரு பாத்திரம் வரும். அது நீதி சொல்வதாக சொல்லிக்கொண்டு; முதலில் துரியோதன பரம்பரையை அழித்தது அடுத்ததாக பாண்டவர் பரம்பரையை அழித்தது அதாவது இரண்டு பங்காளிகள் மற்றும் தன்னுடைய யாதவ பரம்பரையையும் சேர்த்தே அழித்தது அதோடு நில்லாமல் இறுதியில் நானே இங்கு எல்லாம் நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் அதாவது பிரம்மன் நெற்றியில் இருந்து பிறந்தவன் பிராமணன் தோளில் இருந்து பிறந்தவன் சத்ரியன் தொடையில் இருந்து பிறந்தவன் வைசியன் குதிகாலில் இருந்து பிறந்தவன் பஞ்சமன் என்று நா கூசாமல் ஏக வசனம் பேசுகிறது அந்த கிருட்டிணன் எனும் கற்பனை கதாப்பாத்திரம்; அந்த வழியில் நீங்கள் ஆன்மிக ஆட்சி அமைக்கப்போகிறீர்கள் என்றால் உங்கள் ஆட்சியின் முறை என்ன?
அதோடு விட்டால் பரவாயில்லை ஏதோ எவர்சிலவர் பாத்திரக்கடை விளம்பரத்தில் சொல்வதுபோன்று உண்மை உழைப்பு உயர்வு என்கிறீர்கள் அதை கொள்கை என்றுவேறு சொல்கிறீர்கள் என்றால்; நீங்கள் இன்னும் அரசியல் அரிச்சுவடி கூட பயிலவில்லை என்பது புலனாகிறது. நீங்கள் உங்களை முற்றும் துறந்த முனிவராக பாவித்துக்கொள்வதில் அல்லது அவ்வாறு அதிகப்பொருட்செலவு செய்து உங்களின் மீதான பிம்பத்தை நீங்களே கடமைத்துக்கொள்வதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது அதுபற்றி நாங்கள் தலையிட கருத்து சொல்ல ஏதுமில்லை; ஆனால் அவ்வளவு ஆன்மிகத்தன்மையில் இருக்கும் தங்களால் குறைந்தபட்ச விமர்சனத்தைக்கூட தாங்கிக்கொள்ள முடியாமல் நான் இமயமலைக்கு போயிடுவேன் என்பதும் சிறுபிள்ளைபோல் அடிக்கடி கோபித்துக்கொள்வதும் போன்ற உங்களின் செயல்கள் நீங்கள் அரசியலில் மட்டுமல்ல ஆன்மிகத்திலும் இன்னும் பக்குவமடையவில்லை என்பதை காண்பிக்கறதென்று அறிவீர்களா?
தேர்தலை போர் என்கிறீர்கள் இது என்ன சினிமா சண்டை என்று நினைத்தீர்களா டூப் போட்டுக்கொள்வதற்கு? இங்கே உண்மையான வியர்வையின் அளவுதான் வெற்றி; ஒருதுளி வியர்வைக்கு தங்க காசு என்பதெல்லாம் பாடல் காட்சிகளில் சாத்தியம் ஆனால் தமிழக மக்களுக்காக இன்றுவரை ஒரு பருக்கையைக்கூட சிந்த மனமில்லாத நீங்கள்; இதுவரையில் நடந்த எந்த போராட்டங்களிலும் ஒரு வார்த்தை கூட பேசாத கதிராமங்கலம் நெடுவாசல் வேதாந்தா நீட் தேர்வு விவகாரங்கள் அதனால் ஏற்பட்ட பிஞ்சுகளின் பலிகள் பணமதிப்பிழப்பல் ஏற்பட்ட கொடுமைகள் புதிய வரிவிதிப்பின்மூலம் ஏற்பட்ட ஆற்றவொண்ணா துயரங்கள் என எதிலுமே ஒரு கருத்து கூட சொல்ல மனமில்லாத மௌன சாமியாராக இருந்துவிட்டு; நீங்கள் சொல்கிறீர்கள் அமைப்பு கெட்டுவிட்டது ஆன்மிக ஆட்சி அமைக்க முதலமைச்சர் பதவி தாருங்கள் என்று; கொஞ்சம்கூட உறுத்தலாக இல்லை !
எடுத்ததெற்கெல்லாம் ஆண்டவன் என்னை சாப்பிட சொல்லிவிட்டான் ஆண்டவன் என்னை கழிப்பறைக்கு போக சொல்லிவிட்டான் என்கிறீர்களே; நீங்கள் என்ன ஆண்டவனின் கருணைகளை குத்தகை எடுத்திருக்கும் மொத்த விற்பனையாளரா என்ன? ஆண்டவன் உங்களிடம் மட்டும்தான் சொல்வானா அல்லது ஆண்டவன் உங்களுடைய ஒன்றுவிட்ட உறவினனா சொல்லுங்கள். ஆண்டவன் என்கிற கருவியைக்கொண்டு அப்பாவி தமிழ் மக்களான சினிமா பைத்தியங்கள் உங்கள்மீது வைத்திருக்கும் புரிதலற்ற பரிபூரண அன்பை அப்படியே உங்களின் சுயநலத்திற்காக அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சிக்கும் உங்களின் தந்திர புத்தியை நாங்கள் இன்னுமா அறியவில்லை என்று நினைக்கிறீர்கள்!
நீங்கள் ஆன்மிக ஆட்சி அமைப்பதெல்லாம் பிறகு பார்க்கலாம் முதலில் இதுவரை நீங்கள் சம்பாதித்த பணத்திற்கு வெளிப்படைத்தன்மையுடன் வருமானவரி செலுத்தியுள்ளீர்களா? எப்பொழுது நீங்கள் அறக்கட்டளை என்று சொல்லிக்கொண்டு பள்ளிக்கூடம் ஆரம்பித்தீர்களோ அந்தக்கணமே நீங்கள் நேர்மையற்றவர் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டீர்கள் என்பதை அறிவீர்களா? இங்கே நீட்டி முழக்கும் நீங்கள் கர்நாடகாவில் மட்டும் அடக்கி வாசிக்கிறீர்களே உங்களின் அனைத்து பினாமி சொத்துக்களும் அங்கேதான் உள்ளது என்பதைத்தவிர வேறு என்ன காரணமாக இருக்கமுடியும் சொல்லுங்கள்?
உங்களுக்கே பிரச்சினை கழுத்துவரை வண்டி வண்டியாக இருக்கும்பொழுது ஆன்மிக ஆட்சி அமைப்பு கெட்டுவிட்டது ஊழல் அது இது என்கிறீர்களே, சரி அதுபோகட்டும்; அடிக்கடி ஆண்டவன் கருணை என்று ஏதோ முன்னமே புரோகிராம் செய்துவைத்த கணினி போன்று சரியான இடைவெளிவிட்டு விட்டு சொல்கிறீர்களே இதுவென்ன உங்களின் ஆன்மிக யுக்திகளில் ஒன்றா? ஆண்டவனின் கருணை ஏழைகளிடம் ஒருபோதும் தாராளமாக இருந்ததில்லை என்பதோடு, ஒருவேளை அப்படி இருந்திருக்குமேயானால்; இன்று நீங்கள் இவ்வாறு உலகின் மூத்தகுடி மக்களாகிய எங்களிடம் இப்படி கண்டதையெல்லாம் தொடர்பில்லாமல் உளறிக்கொட்டிக்கொண்டிருக்கமாட்டீர்கள் என்று அறிவீர்களா?
இறுதியாக
சினிமாவில் பேசப்படும் வசனம் சினிமாவிற்கானதே அன்றி நிச வாழ்விற்கானதல்ல . மக்களை எந்நேரமும் உணர்ச்சிகளின் விளிம்புகளில் நிறுத்திவிட்டு; யாரும் பார்க்காதபொழுது யாரோ கட்டிய வீட்டில் உரியவர் ஏமாந்த நேரம் பார்த்து பின்வாசல்வழியாக வந்து கொள்ளையடிக்கும் சிந்தனையை விடுத்து; இன்னும் வயது ஆக ஆக இளம் கதாநாயகிகளுடன் சினிமாவில் நடிப்பது எப்படி சேர்த்த பணத்தை பாதுகாப்பது எப்படி போன்ற விடயங்களில் கவனம் செலுத்துவதுதான் உங்களுக்கு நன்மை பயக்குமேயன்றி, அரசியல் தேர்தல் முதலமைச்சர் அல்ல என்பதை அறிக குழப்பத்தில் இருந்து தெளிக.
இல்லையில்லை நான் அரசியலில் குதித்துவிட்டேன் என்றால்; உங்களின் கட்சி கொள்கை அறிக்கையை முதலில் வெளியிடுங்கள் பிறகு தேர்தலில் நிற்பதுபற்றி பேசலாம்......!
நீங்கள் மேலும் வாழ்வும் வசதியும் பெற்று சினிமாவில் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள் !
அன்புடன்,
பார்த்திபன் ப

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக