செவ்வாய், 12 டிசம்பர், 2017

நேபாளம்: இம்மாத இறுதியில் புதிய அரசு - வெற்றி பெற்ற இடதுசாரி கூட்டணி அறிவிப்பு

நேபாளம்: இம்மாத இறுதியில் புதிய அரசு - வெற்றி பெற்ற இடதுசாரி கூட்டணி அறிவிப்புமாலைமலர் :நேபாளம் பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள இடதுசாரி கூட்டணி இம்மாத இறுதியில் புதிய அரசை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. காத்மண்டு: நேபாள பாராளுமன்றம் மற்றும் 7 மாகாணங்களின் பேரவைகளுக்கு கடந்த நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 7-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது.
275 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 165 பேர் தேர்தல் மூலமும், 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தலில் ஆளும் நேபாளி காங்கிரஸ், மாதேசி கட்சிகள் இணைந்து ஓரணியாகவும், நேபாள கம்யூனிஸ்ட் ஐக்கிய மாவோயிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் மாவோயிஸ்டு மையம், அடங்கிய இடதுசாரி கூட்டணி எதிரணியாகவும் போட்டியிட்டன.

தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8-ந்தேதி முதல் எண்ணப்பட்டன. பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் எதிர்கட்சியான இடதுசாரி கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இந்த கூட்டணி 113 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது.

இதில் முன்னாள் பிரதமர் கே.பி.ஒளி தலைலையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்டு லெனினிஸ்டு ) 77 இடங்களிலும், மற்றொரு முன்னாள் பிரதமர் பிரசந்தா தலைமையிலான (மாவோயிஸ்டு சென்டர்) 36 இடங்களிலும் வெற்றி பெற்றது.

கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடித்த ஆளும் நேபாளி காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை தழுவியது. ஆனாலும், பதிவான வாக்குகள் அடிப்படையில் இடதுசாரிகளை நேபாளி காங்கிரஸ் நெருங்கியுள்ளதால், ஓட்டு விகிதாசார அடிப்படையில் பல இடங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், அக்கட்சி பாராளுமன்றத்தில் பலம் மிக்க எதிர்க்கட்சியாக திகழும்.

தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் இடதுசாரி கூட்டணி இம்மாத இறுதியில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. கே.பி.ஒளி புதிய பிரதமராக பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக