செவ்வாய், 12 டிசம்பர், 2017

தாய் மனைவி இரண்டு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற தொழில் அதிபர் .... பணமதிப்பு இழப்பு ..

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மலில், அம்மா, மனைவி, இரண்டு குழந்தைகள் என நான்குபேரை கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற தொழிலதிபரின் கதை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், தொழிலதிபர் இந்த முடிவை எடுத்ததாக அவர் எழுதிய 5 பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சென்னையை அடுத்த பம்மல், ஏழுமலை தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன். இவர், அங்கு ஜவுளிக்கடை நடத்திவந்தார். இவரது மனைவி தீபா.
இவர்களுக்கு ரோஷன், மீனாட்சி என்ற இரண்டு குழந்தைகள். தாமோதரனின் அம்மா சரஸ்வதி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் குடியிருந்துவந்தனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தாமோதரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், தொழிலை நடத்தவும் குடும்பத்துக்கும் எனக் கடன் வாங்கியிருந்தார்.

ஆனால், தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்படவே, விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளார் தாமோதரன். இதனால், தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்துள்ளார்.
தான் மட்டும் தற்கொலை செய்துகொண்டால், குடும்பத்தின் நிலைமை மோசமாகிவிடும். குடும்பத்தினர் மிகவும் சிரமப்படுவார்கள் என்று தாமோதரன் கருதியுள்ளார்.
குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு அனைவரும் சம்மதிப்பார்களா என்ற கேள்வியும் தாமோதரனுக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால், அனைவரையும் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவை தாமோதரன் எடுத்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளைச் செய்த தாமோதரன், ஒவ்வொருவராகக் கொலை செய்துள்ளார். பிறகு, தானும் கழுத்தை அறுத்துக்கொண்டார்.
இன்று காலை (12.12.2017) தாமோதரனின் வீட்டிலிருந்து யாரும் வெளியில் வரவில்லை. அதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சங்கர்நகர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிமூலம் தலைமையிலான போலீஸார், தாமோதரன் வீட்டுக்குள் வந்துபார்த்தனர். அப்போது, படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் அனைவரும் மிதந்தனர்.
இதில், தாமோதரனுக்கு மட்டும் உயிர் இருந்தது. இதையடுத்து அவரை மீட்ட போலீஸார், சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மற்றவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பினர்.
இதையடுத்து, தாமோதரனின் வீட்டை போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது 5 பக்கங்கள் கொண்ட கடிதம் சிக்கியது. அதில், தாமோதரன் தற்கொலை செய்துகொண்டதன் காரணத்தை விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தாமோதரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அதனால் அவரது குடும்பம் வறுமையில் சிக்கியது. குடும்பத்தை நடத்த முடியாமல் அவர் பெரிதும் சிரமப்பட்டுள்ளார். இதனால், குடும்பத்தினரைக் கொலைசெய்துவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரித்தால் மட்டுமே உண்மை நிலைமை தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “தாமோதரன், நான்கு பேரை எப்படிக் கொலை செய்தார் என்று விசாரணை நடந்துவருகிறது.
நள்ளிரவில் இந்தச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது கழுத்தை அறுத்து கொலை செய்தால் அவரது அலறல் சத்தம் நிச்சயம் மற்றவர்களுக்கு கேட்டிருக்கும் அதனால், தூக்க மாத்திரையை அனைவருக்கும் கொடுத்துதான் இந்தச் செயலை தாமோதரன் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
அவரது வீடு முழுவதும் ரத்தமாகக் காட்சியளித்தது. மேலும், தாமோதரனுக்கு கடன் தொல்லையும் அதிகமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அவருக்கு கடன் கொடுத்தவர்கள்குறித்து விசாரித்துவருகிறோம்” என்றார்.
தாமோதரன் வீட்டின் அருகில் வசித்தவர்கள் கூறுகையில், “குடும்பத்தில் நான்கு பேரைக் கொலை செய்ய தாமோதரனுக்கு எப்படிதான் மனசுவந்தது என்று தெரியவில்லை.
ஈவு இரக்கமற்ற மனதோடுதான் அவர் இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும். சென்னையில் சில நாள்களுக்கு முன்பு பணம் கொடுக்காததால், பெற்ற தாயை தஷ்வந்த் கொலை செய்த சுவடு மறைவதற்குள் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது” என்றனர் வேதனையுடன்.
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் கொலைக்கான காரணம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த இரண்டு குழந்தைகளைப் பார்த்து பலர் கதறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக