செவ்வாய், 12 டிசம்பர், 2017

சந்தி சிரிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சி !

வினவு":குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் மோடியும் ஆர்.எஸ்.எஸ் சங்கிகளும் தவறியும் குஜராத் ஒளிர்கிறது என்று கூறுவதில்லை. அந்த அளவிற்கு இந்தியத் திருநாட்டின் இண்டு இடுக்கெங்கிலும் குஜராத் மாடல் முடைநாற்றம் அடிக்கிறது. குஜராத் மாடலை இந்தியா முழுதும் பரிந்துரைத்த பொருளாதார வல்லுனர்கள் இப்போது எங்கே ஒளிந்துள்ளார்கள் என்று தெரியவில்லை.
“அச்சி தின் ஆனே வாலே ஹை…” – நல்ல நாட்கள் வருகின்றன. இது 2014 -ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மோடியின் வாயிலிருந்து தெறித்த வாக்குறுதிகள். அச்சி தின்-னால் வளர்ச்சி பெற்ற முதலாளிகளும், தனியார்மய – தாராளமய தாசர்களும் குஜராத் மாடல் என்றும், குஜராத் ஒளிர்கிறது என்றும், மோடியின் மீது ஒளிவட்டத்தைச் சூட்டினார்கள். ஆயினும் அந்த நல்ல நாட்கள் அதானிக்கும் அம்பானிக்கும் தான் வாய்த்ததே ஒழிய சாமானியர்களுக்கு அல்ல.


தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு 2015 -ம் ஆண்டின் படி மக்கள் தொகை அதிகமுள்ள 13 மாநிலங்களில் சுகாதாரத்துறையில் குஜராத் கடைசி இடத்தையே பிடித்தது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடும் கேரளாவும் முன்னிலையில் இருக்கின்றன.
மாநில அளவிலான ஏழ்மை, நோய்கள் உள்ளிட்ட ஏழை மக்களை அதிகம் ஆழ்த்தும் சுமைகளின் அடிப்படையிலும் குஜராத் முன்னிலையில் இருக்கிறது. கேரளாவும் தமிழ்நாடும் அதற்கு எதிராக செயல்படுவதில் ஒப்பீட்டளவில் முன்னணியில் இருக்கின்றன.
ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக வளர்ச்சி குன்றியுள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கடந்த பத்தாண்டுகளில் 40 விழுக்காடாக குஜராத்தில் அதிகரித்துள்ளது. தனி நபர் வருமானத்தில் ஏழை மாநிலங்களான ஓடிசாவையும், அசாமையும் விட குஜராத்தில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையும் அதை தான் உறுதி செய்கிறது. இந்திய பொது சுகாதார தரவரிசைப்படியோ அல்லது தேவைகளுக்கு ஏற்றதாகவோ மாவட்ட அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இருக்கவில்லை…. நெரிசலாக நோயாளிகளைக் கொண்ட மருத்துவமனைத் தொகுதிகளையும்(Wards), ஒரே படுக்கையை இரண்டு நோயாளிகள் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவல நிலைமைகளையும் கண்டதாக அவ்வறிக்கை கூறுகிறது.
கல்வித்திறனற்ற சுகாதாரமற்ற தொழிலாளர் சந்தையை கொண்டு உலகளாவிய பொருளாதார வல்லரசாக முயற்சி செய்யும் உலகின் ஒரே நாடு இந்தியா மட்டுமே என்று அமர்த்தியா சென் கூறியிருந்ததுடன், குஜராத் மாடல் என்பது பெருமுதலாளிகளுக்கு மட்டுமே உகந்தது என்று தொடர்ச்சியாக எச்சரித்து வந்தார்.
ஸ்க்ரோல்(Scroll.in) இணையத்தளத்தின் வெளியான காணொளியின்படி ஏழ்மையை ஒழிப்பதில் 1993 -ம் ஆண்டில் 3 -ம் இடத்தில் இருந்த குஜராத் படிப்படியாக சறுக்கி 2011 -ம் ஆண்டில் 10 -வது இடத்திற்கு சறுக்கியது. கெடுவாய்ப்பாக அன்றிலிருந்து குஜராத்தை ஆண்டுக் கொண்டிருப்பது சாட்சாத் பா.ஜ.க தான்.
“தாராளமயத்திற்குப் பிறகு குஜராத் கண்டிப்பாக வளர்ச்சியடைந்திருக்கிறது. தனி நபர் வருமானம், வளர்ச்சி என்ற அளவில் அது இந்தியாவிலேயே முன்னிலை மாநிலமாக இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் மிகவும் கவனமாக இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. குஜராத்தின் 25 ஆண்டுகால வளர்ச்சி என்பது ஏழைகளை மேலே தூக்கி விடவில்லை. இதுவும் உண்மைதான்” என்று பொருளாதார வல்லுனரான மைத்ரீஷ் கதக் (Maitreesh Ghatak) காணொளியில் கூறுகிறார்
மோடியும் சங்க வானரங்களும் விரும்பும் இராம ராஜ்ஜியம் தான் குஜராத் மாடல். ‘கௌபெல்ட்’ மாநிலங்களில் இந்த உண்மையை கட்டவிழ்த்து விடுவதில் கைத்தேர்ந்தவரான மோடி மற்றும் அமித்சாவின் செப்படி வித்தைகள் தெற்கில் எடுபடவில்லை. கேரளாவை “சோமாலியாவுடன்” ஒப்பிட்டதை சேட்டன்கள் கடுமையாக எதிர்த்ததுடன் “#போமோனேமோடி” என்றும் “#போமோனேஅமித்” என்றும் காரித்துப்பினர். இந்த கேரளாதான் குஜராத் வளர்ச்சிக்கு மாறாக 1993 -ம் ஆண்டில் 6 -வது இடத்தில இருந்து 2011-ம் ஆண்டில் முதல் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.
குஜராத்தின் முதல்வராக ஆனதில் இருந்து பெருநிருவனங்களுக்காக நிலங்களை எளிமையாக கையகப்படுத்தி தருவதன் மூலமும் வரித்தள்ளுபடி மற்றும் மானியங்களை வழங்குவதன் மூலமும் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட நிதியாதாரங்களை பெருமுதலாளிகளுக்கு தாரை வார்த்தார் மோடி. இதை ஒப்பிடும் போது ஏழைகளுக்கான குஜராத் அரசின் நலத்திட்டங்கள் என்பவை மிகவும் சொற்பமானவை என்று குஜராத் மாநிலத்தை ஆய்ந்தறிந்த வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக