புதன், 27 டிசம்பர், 2017

கண்கலங்கிய அமைச்சர்கள்.. கதறி அழுத தொண்டர்கள்

tamilthehindu :அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் பழனிசாமி, ஆர்.கே.நகர் தொகுதியில் தோல்வியடைந்த இ.மதுசூதனன் ஆகியோர் வந்தபோது கதறி அழுத தொண்டர்கள் | படங்கள்: ம.பிரபு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் பங்கேற்ற சில அமைச்சர்கள் கண் கலங்கினர். தொண்டர்கள் கதறி அழுதனர்.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். ஆளும் கட்சி யான அதிமுக, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் 48,306 வாக்குகள் பெற்று இரண்டாம் இடமே பிடித்தது. இதனால், அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழுமா என்று பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, அவைத் தலைவர் இ.மதுசூதனன் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார்,எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைவரது முகத்திலும் ஆர்.கே.நகர் தோல்வியால் ஏற்பட்ட சோகத்தை காண முடிந்தது. பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டத்துக்கு வந்தபோது, அங்கே திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் பலர் கதறி அழுதனர். கூட்டத்திலும் சில அமைச்சர்கள் கண் கலங்கியுள்ளனர். நிர்வாகிகள் சிலர் கதறி அழுதனர். அவர்களை ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தேற்றினர்.
ஆர்.கே.நகர் தோல்விக்கான காரணத்தைவிடவும், தோல்விக்கு பிறகு என்னென்ன நடக்கலாம், அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்றுதான் அதிகமாக விவாதித்துள்ளனர். தினகரன் பக்கம் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 9 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும், “மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் தினகரனால் ஆட்சி அமைக்க முடியாது. பிரதமர் மோடியின் துணையின்றி அவர் ஆட்சி அமைக்க முயன்றால் அது தேர்தலுக்கே வழிவகுக்கும். மத்திய அரசின் துணை இருப்பதால் ஆட்சி கவிழாது” என நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டினர்.
5 அமைச்சர்கள் புறக்கணிப்பு?
ஆலோசனைக் கூட்டத்தை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, பாஸ்கர் ஆகியோர் புறக்கணித்தனர். இது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
திருவில்லிபுத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘நான் ஊர் திரும்பிய பிறகு கூட்டத்துக்கான அழைப்பு வந்தது. உடனடியாக திரும்ப முடியாது என்பதால், சரி அங்கேயே இருங்கள் என்று கூறிவிட்டனர். தேர்தலில் தோல்வி அடைந்ததால் ஒரு இயக்கம் அழிந்துவிடாது’’ என்றார்.
திண்டுக்கல் வந்திருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறும்போது, ‘‘ முதல்வர் அனுமதியின்பேரில்தான் நானும், செய்தித்துறை அமைச்சர் கடம் பூர் ராஜுவும் டிசம்பர் 31-ம் தேதி நடக்கவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை பார்வையிட வந்துள்ளோம்’’ என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக