புதன், 6 டிசம்பர், 2017

நீதிபதி மரணம் எழுப்பும் கேள்விகள்!... மரணத்தில் அமித் ஷா மீது சந்தேகம் ....

மின்னம்பலம் :ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன் : மத்தியப் புலனாய்வுத் துறை நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷனின் மரணம் நிகழ்ந்த 2014ஆம் ஆண்டு சூழல் குறித்த குடும்பத்தார் எழுப்பிய குற்றச்சாட்டுகள் பற்றி கேரவான் இதழ் அறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு, பல முக்கிய புள்ளிகள் இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தக் கோரியுள்ளனர். மேலும், இந்த அறிக்கை புதிய விவரங்களை வெளிக்கொண்டு வந்ததுடன் மேலும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
திங்கட்கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த பல சாட்சிகளைப் பேட்டிகண்டு லோயாவின் மரணத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று வலியுறுத்தி எழுதியிருந்தது. இதைத் தொடர்ந்து என்.டி.டி.வி. இந்த வழக்கைக் குறித்த செய்தியை வெளியிட்டது. அதில் கேரவான் இதழில் வெளிவந்த விவரங்கள் குறித்து கேள்விகளை எழுப்பியிருந்த அதேநேரத்தில், இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கப்படாத பல கேள்விகளை விட்டுவிட்டது.

வழக்கின் பின்னணி
லோயா, மும்பையில் உள்ள சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்தார். அங்கே அப்போது நடந்துகொண்டிருந்த ஒரே விசாரணை போலீஸாரால் அரங்கேற்றியதாகக் கூறப்படும் சொராபுதீன் ஷேக்கின் என்கவுன்ட்டர் வழக்குதான். இதில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இந்தப் போலி என்கவுன்ட்டர் நடைபெற்றபோது ஷா குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தார். லோயாவின் மரணத்துக்குப் பிறகு தொடர்ந்த விசாரணைகளில் ஷா, இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். லோயா 2014 நவம்பர் மாதம் 30ஆம் தேதி தனது நண்பரின் மகள் திருமணத்தில் கலந்துகொள்ள நாக்பூர் சென்றபோது, அங்கே திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போய் மாரடைப்பால் காலமானார் என்று லோயாவின் குடும்பம் கேரவானிடம் கூறியது.
குடும்பத்தார் கேரவானிடம், நீதிபதி இறந்த இந்தச் சம்பவத்தில் எண்ணற்ற முரண்பாடுகள் இருப்பதாகவும் மேலும், பதிவான இறந்த நேரம், தங்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது அவரது உடல் இருந்த நிலை மற்றும் அத்தனையும் கையாளப்பட்ட முறை உள்ளிட்ட மற்ற சூழல்களும் சந்தேகத்துக்கு இடமளிப்பதாகவும் தெரிவித்தது. இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வழங்குமாறு கூறி தன் சகோதரருக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாக அன்றைய மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மோஹித் ஷா கூறினார் என்று லோயாவின் சகோதரி குற்றம் சாட்டியதையும் கேரவான் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.
அசல் அறிக்கையிலிருந்து இந்த வழக்கு திசை திரும்பிவிட்டதால், உண்மை நிலவரம் குறித்த சில குறிப்புகள் பின்வருமாறு:
லோயா மருத்துவமனைக்கு எவ்வாறு கொண்டு செல்லப்பட்டார்?
டிசம்பர் மாதம் 1ஆம் தேதியன்று விடியற்காலை நீதிபதிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அவர் நாக்பூர் டான்டே மருத்துவமனைக்கு ஆட்டோ ரிக்ஷாவில் கொண்டு செல்லப்பட்டதாகவும் இவர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பு தெரிவித்தது. ஆனால், ராவி பவனுக்கு அருகில் எந்த ஆட்டோ ரிக்ஷாவும் இல்லை என்றும் பகல் வேளையில்கூட ராவி பவனுக்கு அருகில் ஆட்டோ ரிக்ஷாக்கள் கிடைக்காது என்றும் லோயாவின் சகோதரி அனுராதா பியானியும் ஹர்கிஷன் லோயாவின் தந்தையும் கேரவானிடம் தெரிவித்தனர். மேலும், திருமணத்துக்கு லோயாவுடன் சென்றிருந்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பூஷண் கவாய் “அவருடன் சென்றவருக்கு மட்டும் எவ்வாறு அந்த அகால வேளையில் ஆட்டோ ரிக்ஷா கிடைத்தது?” என்று லோயா இறந்த பிறகு மருத்துவமனைக்கு சென்ற அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கேட்டார். “அவரை ஆட்டோ ரிக்ஷாவில் கொண்டு சென்றிருக்க வாய்ப்பே இல்லை”என்று கூறிய அவர், உள்ளூர் நீதிபதி விஜயகுமார் பார்டே தன் சொந்தக் காரில் லோயாவை தாண்டே மருத்துவமனைக்கு அவரே அழைத்துக் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார். அசல் கேரவான் அறிக்கையில் லோயாவின் இன்னொரு சகோதரி அவர்களிடம், பார்டே என்று தன்னைக் கூறிக்கொண்ட ஒருவர் முதன்முதலில் லோயா இறந்ததையும் அதன் பிறகு அவர் உடலுக்கு என்ன ஆயிற்று என்று கூறியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவருக்கு இ.சி.ஜி. எடுக்கப்பட்டா? அப்படி என்றால், அதில் ஏன் தவறான தேதி இடம் பெற்றிருந்தது?
லோயாவின் சகோதரியும் மருத்துவருமான பியானி, தாண்டே மருத்துவமனை மோசமான இடம் என்றும், லோயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்ட அங்குள்ள எலெக்ட்ரோ கார்டியோகிராஃபி யூனிட்டின் இயந்திரம் வேலை செய்யவில்லை என்றும் பிற்பாடு அவர் அறிந்துகொண்டார்.

மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் பி.ஜி.தாண்டே, என்.டி.டி.வி- யிடம் பேசும்போது, லோயா மருத்துவமனைக்குச் சில நீதிபதிகளுடன் வந்தபோது உயிருடன் இருந்ததாகவும், மாடிப்படிகள் ஏறி வந்தபோது மார்பில் தாங்க முடியாத வேதனை உள்ளதாகவும் கூறினார் என்று சொன்னார். தாண்டே மருத்துவமனையில் நன்கு இயங்கும் இ.சி.ஜி. இருந்ததாகவும், சோதனையில் லோயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதைக் குறிக்கும் ஒரு நீளமான T spike சுட்டிக்காட்டியதாகவும் அதனால் நீதிபதி இதயநோய்களுக்கான சிறப்பு மருத்துவமனை மெடிட்ரினாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அங்கு வரும் வழியிலேயே அவர் மரணமடைந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
என்.டி.டி.வி. குறிப்பிட்ட இ.சி.ஜி. ரிப்போர்ட்டின் நகலை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிடப்பட்டது. அதன் மானிட்டரில் ஒரு ஸ்பைக் இருப்பது தெரிந்தது. ஆனால், அந்த அறிக்கையின் அடியில் 2014 நவம்பர் மாதம் 30ஆம் தேதி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அது சம்பவம் நடைபெற்ற முந்தைய தினம். மேலும் நோயாளியின் பெயர் பிரிஜ்மோஹன் லோஹியா என்றும் இருந்தது. எனவே, இதன்படி இது நீதிபதி லோயாவின் இ.சி.ஜி. அல்ல என்பது தெளிவாகிறது. இந்த முரண்பாடு இந்த ஆவணம் குறித்து சில கேள்விகளுக்கு வழிவகுத்தது.
பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது ஏன்?
லோயாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதைக் குறித்து கேரவான் அறிக்கை, இந்த மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றால் ஏன் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது என்று தொடங்கி ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் இறந்த நேரம் காலை 6.15 மணி என்று பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், லோயாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு இவரது மரணம் குறித்த தொலைபேசி அழைப்புகள் 5 மணியிலிருந்தே எப்படி வந்தன? அரசு மருத்துவக் கல்லூரியில் பெயர் குறிப்பிட விரும்பாத நபர்கள் தெரிவித்த தகவலில் பிரேதப் பரிசோதனை நடு இரவைக் கடந்த பின் நடத்தப்பட்டதாக ஏன் தெரிவித்தனர்? அந்தக் கல்லூரியிலிருந்து வந்த பெயர் குறிப்பிட விரும்பாத அழைப்புகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ‘பிரேதப் பரிசோதனை நடந்தது போலவே உடலை வெட்டி, தையல் போடுங்கள்’ என்று மருத்துவர்களுக்கு அதன் மேலதிகாரிகளிடமிருந்து குறிப்பு வந்ததாக கேரவான் குறிப்பிட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரியின் டீன் என்.டி.டி.வி-யிடம், ‘ஏற்கெனவே இதயநோய் எதுவும் இல்லாத ஒருவர் திடீரென்று இறந்தால் இவ்வாறு பிரேதப் பரிசோதனை நடத்தப்படுவது ஒன்றும் புதியதல்ல’ என்று தெரிவித்தார்.

பிரேதப் பரிசோதனை நடத்தப்படுவதற்கு யார் கையெழுத்திட்டது?
குடும்ப உறுப்பினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்ட பின்தான் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும்.
இந்த அறிக்கையில் கையெழுத்திட்டதாகக் கூறிய டாக்டர் பிரசாந்த் ராட்டி என்ற நபரிடம் என்.டி.டி.வி-யும் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழும் பேசியபோது அவர், தன் மாமா ருக்மேஷ் பன்னாலால் ஜகோடியாவிடம் தனது உறவுக்காரர் ஒருவர் மெடிட்ரினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றும் அவருக்கு உதவும்படியும் தனக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறினார். ராட்டி, மேடிட்ரினா மருத்துவமனையைச் சென்றடைந்தபோது, லோயாவின் மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும், அதை இவர் ஜகோட்டியாவிடம் கூறியதாகவும், அதற்கு அவர் செய்ய வேண்டியதை செய் என்று கூறியதாகவும் இவர் குறிப்பிட்டார். அங்கு நீதிபதி பூஷன் கவாய் உட்பட சுமார் ஏழெட்டு நீதிபதிகள் இருந்தனர் என்று ராட்டி கூறினார். நீதிபதிகள் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்கள். சீதாபுல்தி காவல் நிலையத்திலிருந்து பிரேதப் பரிசோதனைக்காக ஒரு மூத்த போலீஸ் அதிகாரி வரவழைக்கப்பட்டார்.
அவர் உடலில் ரத்தம் காணப்பட்டதா? அது பொதுவாகக் காணப்படுமா?
பியானியின் கூற்றுப்படி லோயாவின் கழுத்திலும் அவரது சட்டையின் பின்புறத்திலும் ரத்தக்கறைகள் இருந்தன, இந்த உண்மையை இவர் தன் டைரியில் பதிவு செய்துள்ளார். லோயாவின் அப்பா ஹர்கிஷன், தன் மகனின் சட்டையில் ரத்தக்கறை இருந்ததை நினைவுகூர்கிறார். ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது ஆடைகளைக் குறித்து, ‘உலர்வாக இருந்தது’என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு டாக்டராகவும் இருப்பதால் பிரேதப் பரிசோதனைபோது ரத்தம் வெளியேறாது என்று எனக்குத் தெரியும் என்றும் எனவே ரத்தக்கறையைப் பார்த்து சந்தேகம் கொண்டு, இரண்டாவது முறை பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று தான் கோரியதாகவும் பியானி குறிப்பிட்டார். ஆனால், அங்குக் கூடியிருந்த லோயாவின் நண்பர்களும், சகாக்களும் “பிரச்னையை மேலும் சிக்கலாக்க வேண்டாம்” என்று எங்களிடம் கூறி தடுத்துவிட்டார்கள் என பியானி குறிப்பிட்டார்.
உடல் லாதூருக்கு தனியா அனுப்பி வைக்கப்பட்டதா?
லாதூர் மாவட்டத்தில் உள்ள மூதாதையர் வீட்டுக்கு இவரது உடல் 11.30 மணிக்கு வந்து சேர்ந்தது என்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தவிர வேறு யாரும் உடன் வரவில்லை என்றும் பியானி கூறினார். “இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று இவரை வற்புறுத்திய இரண்டு நீதிபதிகள்கூட ஆம்புலன்ஸில் வரவில்லை” என்று கேரவானிடம் பியானி கூறினார். “இவரது மரணம் மற்றும் பிரேதப் பரிசோதனை குறித்து வீட்டுக்குத் தெரிவித்த பார்டே இவருடன் வரவில்லை. ஏன் இவரது உடலை வீட்டுக்குக் கொண்டு செல்ல கூட யாரும் வரவில்லை என்ற இந்தக் கேள்வி என்னைத் துளைத்துக்கொண்டே இருக்கிறது” என்றார்.
லோயாவின் போன் யாரிடம் உள்ளது?
“இந்தச் சம்பவத்தில் இந்தக் குடும்பம் ஈஸ்வர் பஹேடி என்ற ஒருவரைப் பற்றி முக்கியமாகக் கூறியது. அவர் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் உறுப்பினர் என்று லோயாவின் அப்பா ஹரிகிஷன் கூறுகிறார். நான் லாதூரிலிருந்து தன் உறவுக்காரரை அழைத்து வரப்போகும் விஷயம் பஹேடிக்கு எப்படி தெரியும் என்று தெரியவில்லை. அங்கு வந்த அவர் என்னிடம் நாக்பூர் செல்ல வேண்டாம் என்றும் உடல் இவர்களது மூதாதையர் இல்லம் இருக்கும் லாதூர் மாவட்டத்துக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியதாக லோயாவின் சகோதரிகளுள் ஒருவரான சரிதா மந்தானே கூறினார். மேலும், லோயாவின் போன் அவர் இறந்து இரண்டு மூன்று நாள்கள் கழித்துதான் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதுவும் அதைத் தந்தது போலீஸ் அல்ல பஹேடிதான் என்றும், அந்தப் போனில் அனைத்தும் டெலீட் செய்யப்பட்டிருந்தது” என்றும் அவர் கூறினார்.
ஊழல் குற்றச்சாட்டு என்ன ஆயிற்று?
என்.டி.டி.வியோ அல்லது இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையோ லோயாவின் குடும்பத்தார் கூறும் எந்தக் குற்றச்சாட்டு குறித்தும் எதுவும் கூறவில்லை. அமித் ஷா சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வழங்குவதற்காக அப்போதைய மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மோஹித் ஷா தனக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் வழங்க முன்வந்தார் என்று சகோதரர் தன்னிடம் கூறியதாக பியானி குறிப்பிட்டார். மேலும் அவர், மரணம் நிகழ்ந்து ஒன்றரை மாதம் கழித்தே மோஹித் ஷா இவர்கள் வீட்டுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். மோஹித் ஷா வீட்டுக்கு வந்தபோது அப்பாவின் மரணத்தை விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை நியமிக்குமாறு தான் கேட்டுக்கொண்டதாக கேரவான் அறிக்கையில் லோயாவின் மகன் இவர்களுக்கு எழுதி அனுப்பியதாகத் தெரிவிக்கிறது. அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்பதைத் தடுப்பதற்கு எங்கள் குடும்பத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் தீங்கிழைக்கலாம். எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறிய அனுஜ், “எனக்கோ என் குடும்பத்துக்கோ ஏதாவது நேர்ந்தால் மோஹித் ஷா மற்றும் இந்தச் சதியில் ஈடுபட்ட மற்றவர்களும்தான் பொறுப்பு” என்று அவர் மேலும் கூறினார்.
குடும்பத்தாரின் குற்றச்சாட்டுகள் குறித்து மோஹித் ஷா பதிலேதும் அளிக்கவில்லை என்று கேரவான் கூறுகிறது. முன்னாள் தலைமை நீதிபதியைத் தொடர்புகொள்ள ஸ்க்ரால்.இன் எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பலனில்லை.
நன்றி: scroll.in
தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக